பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள் திட்டம் |
பள்ளிகளைச் சுற்றி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைக் குறைக்கும் வகையில் சென்னை போக்குவரத்து போலீஸார், ‘பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதை, தி.நகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக இத்திட்டம் 4 பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது.
விபத்துகள், விபத்து உயிரிழப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்குப் பாதுகாப்பான பயணச் சூழலை உருவாக்கும் வகையில் பள்ளிகளில் ‘பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள்' என்ற புதிய திட்டத்தை போக்குவரத்து போலீஸார் உருவாக்கி உள்ளனர்.
திட்டத்தின் நன்மைகள்:
- இத்திட்டத்தில் மாணவ, மாணவிகள் போக்குவரத்து விதிகளைத் தெரிந்து கொள்வதோடு மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பார்கள்.
- பள்ளி திறக்கும் மற்றும் மூடும் நேரங்களில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் மாணவர்கள் தன்னார்வலர்களாக பணி செய்வதால் பள்ளி மண்டலங்கள் நெரிசலின்றி, விபத்து இன்றி பாதுகாப்பு மண்டலங்களாக மாறும்.
- பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள் என்பது ஒவ்வொரு பள்ளியிலும் போக்குவரத்து தன்னார்வத் தொண்டர்களை உருவாக்குவதோடு, தேவைப்படும் நேரத்தில் பள்ளி வளாகங்களைச் சுற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளிலும் தன்னார்வலர்களாக ஈடுபடுவார்கள். இதன் மூலம் பள்ளி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது.
- இந்த முயற்சி வெற்றி பெற்றவுடன், அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்தப் போக்குவரத்து போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
SOURCE : HINDUTAMIL