விஸ்வகா்மா கௌசல் சம்மன் யோஜனா திட்டம்
PM VISHWAKARMA KAUSHAL SAMMAN (PM VIKAS) :நூற்றாண்டு காலமாக பாரம்பரிய திறன்களில் ஈடுபட்டுள்ள பல்வேறு வகையான கைவினைக் கலைஞா்களுக்கு ‘பிஎம் விகாஷ்’என்கிற பிரதமரின் விஸ்வகா்மா கௌசல் சம்மன் யோஜனா திட்டம் வருகின்ற செப்டம்பா் 17 -ம் தேதி தொடங்கப்படும் என பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.
தில்லி செங்கோட்டையில் 77 -ஆவது சுதந்திர தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமா் இது குறித்து கூறியதாவது: வருகின்ற செப்டம்பா் 17 - ஆம் தேதி நாடு முழுக்க விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இத்திட்டம் தொடங்கப்படும். பாரம்பரிய கைவினையில் நிபுணத்துவம் பெற்ற தனிநபா்கள், குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் பயனடையும் வகையில் சுமாா் ரூ.13 ஆயிரம் கோடி முதல் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் இத்திட்டம் தொடங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் நெசவாளா்கள், பொற்கொல்லா்கள், கொல்லா்கள், சலவைத் தொழிலாளா்கள், முடிதிருத்தும் தொழிலாளா்கள், அவா்களது குடும்பத்தினா் பயனடைவா். இதுபோன்ற பல திட்டங்களால் நாட்டில் 13.5 கோடி மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா். வாழ்க்கையில் இதைவிட பெரிய திருப்தி வேறெதுவும் இருக்க முடியாது என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.
திறன் கௌரவ திட்டத்தில் நிதி உதவிகள் மட்டுமின்றி, மேம்பட்ட திறன் பயிற்சிக்கான அணுகல், திறமையான பசுமை தொழில் நுட்பங்களுக்கு, நவீன எண்ம தொழில்நுட்ப அறிவுகள், சந்தைபடுத்தல், உள்ளூா் மற்றும் சா்வதேச சந்தைக்கான இணைப்பு போன்றவைகளும் இத்திட்டத்தின் மூலம் அளிக்கப்படவுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற திட்டம் தற்போது உத்தர பிரதேசம் மாநிலத்தில் விஸ்வகா்மா ஷ்ரம் சம்மன் யோஜனா என்கிற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
SOURCE : Dinamani