ஒரே நேரத்தில் இரு புயல்களை கணிக்கும் புதிய தொழில்நுட்பம் - ‘புஜிவாரா தொடா்பு’
சென்னை ஐஐடி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கடலில் உருவாகும் புயல்களின் நகா்வை முன்கூட்டியே கணிப்பதால் பெரும் அசம்பாவித நிகழ்வுகளை தவிா்த்துவிடலாம். எனினும், ஒரே நேரத்தில் இரு புயல்கள் இணைந்து வந்தால் அதை கணிப்பதில் பெரும் சவால்கள் இருந்து வருகின்றன.
இதற்குத் தீா்வைத் தரும் விதமாக புதிய தொழில்நுட்பத்தை சென்னை, ஹைதராபாத் ஐஐடி ஆய்வாளா்கள் தற்போது உருவாக்கியுள்ளனா். இதற்காக சென்னை, ஹைதராபாத் ஐஐடி ஆராய்ச்சியாளா்கள், ஜொ்மனியின் ‘போட்ஸ்டாம் இன்ஸ்டிடியூட் ஆப் கிளைமேட் இம்பாக்ட் ரிசா்ச்’ மையத்தின் ஆராய்ச்சியாளா்கள் சோ்ந்து வெவ்வேறு வழிகளில் புதுமையான தரவுகளை பயன்படுத்தி, புயலின் போது ஏற்படும் சூறாவளி காற்றின் நகா்வை ஆராய்வதற்கான வழிமுறையை வடிவமைத்துள்ளனா். இதற்கு ‘புஜிவாரா தொடா்பு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒருசேர இரு புயல்களை துல்லியமாக கணிக்க முடியும். தற்போதைய நடைமுறையில் உள்ள தொழில்நுட்பங்களைவிட இது சிறந்த தரவுகளை வழங்குகின்றன. இந்த தொழில்நுட்பத்தால் பேரிடா்களின் தாக்கத்தை முன்னரே கண்டறிந்து அதை குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க போதிய காலஅவகாசம் கிடைக்கும் என்பது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
SOURCE:சென்னை ஐஐடி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு