குறிப்பு:
* பால்: அறத்துப்பால்.
* இயல்: இல்லறவியல்.
* அதிகாரம்: அன்புடைமை.
அன்புடைமை
குறள் 71:
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
விளக்கம் :
உள்ளத்தில் இருக்கும் அன்பை யாராலும் தாழ்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவர் துன்பப்படுவதை கண்டால் கண்ணீர் துளி வாயிலாக அன்பு வெளிப்பட்டு விடும்.
குறள் 72:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
விளக்கம் :
அன்பில்லாத மனதை உடையவர் எல்லாமே தனக்கு என்று நினைத்து வாழ்வார், அன்புடையவரோ தம் உடல், பொருள் அனைத்தும் மற்றவர்களுக்கு உரியது என்று எண்ணி வாழ்வார்கள்.
குறள் 73:
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
விளக்கம் :
உயிரும், உடலும் போல் அன்பும், செயலும் இணைத்திருப்பதே உயர்ந்த பொருத்தம் ஆகும்.
குறள் 74:
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
விளக்கம்:
அன்பு பிறரிடம் பற்று எனும் பண்பை உருவாக்கும், அந்த பண்பு நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
குறள் 75:
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
விளக்கம்:
இந்த உலகத்தில் இன்புற்று வாழ்பவர்களுக்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக வாழ்வதனாலே என்று சொல்லலாம்.
குறள் 76:
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
விளக்கம்:
நல்ல செயல்களுக்கு மட்டும் அன்பு துணையாக இருக்கும் என்று உரைப்பவர்கள், வீர செயல்களுக்கும் அன்பு துணையாக இருக்கிறது என்பதை அறியாதவர்கள்.
குறள் 77:
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
விளக்கம்:
எலும்பில்லாத உடம்போடு வாழும் புழு, பூச்சிகளை வெயில் வாட்டுவது போல, அறம் எதுவென தெரிந்தும் அதை கடைப்பிடிக்காத அன்பில்லாதவனை அவனது மனசாட்சியே வாட்டி வதைக்கும்.
குறள் 78:
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
விளக்கம்:
நெஞ்சத்தில் அன்பு இல்லாமல் வாழும் மக்களின் வாழ்க்கையானது, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.
குறள் 79:
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
விளக்கம்:
அன்பு எனும் அகஉறுப்பு இல்லாதவர்களுக்கு, புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?
குறள் 80:
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
விளக்கம்:
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நிலை அடைந்த உடம்பாகும், அன்பு மட்டும் இல்லையென்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின் மேல் தோலை போர்த்தியது போன்றது.
திருக்குறள்(19 அதிகாரங்கள்)
- அன்புடைமை
- பண்புடைமை
- கல்வி
- கேள்வி
- அறிவுடைமை
- அடக்கமுடைமை
- ஒழுக்கமுடைமை
- பொறையுடைமை
- நட்பு
- வாய்மை
- காலமறிதல்
- வலியறிதல்
- ஒப்புரவறிதல்
- செய்நன்றி அறிதல்
- சான்றாண்மை
- பெரியாரைத் துணைக்கோடல்
- பொருள்செயல்வகை
- வினைத்திட்பம்
- இனியவைகூறல்