MARATHAS -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
மூன்றாவது பானிப்பட் போர், 1761
இந்திய வரலாற்றில் 1761இல் நடந்த மூன்றாவது பானிப்பட் போர் முக்கிய முடிவைக் கொடுத்ததாகும். இந்தப் போரில் மராத்தியர்க்கும் முகலாயருக்கும் கிடைத்த மிகப் பெரிய தோல்வி இந்தியாவில் ஆங்கிலேய அரசு காலூன்ற வழி வகுத்தது.
சூழ்நிலைகள்
- பலவீனமான முகலாய அரசு வடமேற்கு எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டது. இதனால் அப்போது ஆப்கானிஸ்தானை ஆண்ட நாதிர் ஷா போர் தொடுக்க நேரிட்டது. மீண்டும் மீண்டும் அளித்த வேண்டுகோள்களுக்குப் பிறகு முகலாய ஆட்சியாளர் முகம்மது ஷா ஆப்கன் நாட்டுக் கிளர்ச்சியாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். இதனால் 1739 இல் நாதிர் ஷாவின் தாக்குதல்கள் தொடங்கின. தில்லி சூறையாடப்பட்டது. கோகினூர் வைரம், மதிப்புமிகு மயிலாசனம் ஆகியவற்றை அவர் கைப்பற்றிச் சென்றார்.
- 1747 இல் நாதிர் ஷா கொல்லப்பட்ட பிறகு அவரது இராணுவ தளபதிகளில் ஒருவரான அகமதுஷா அப்தாலி ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளராக மாறினார். தனது நிலையை உறுதிப்படுத்திய அவர் பின்னர் இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கினார். முல்தான் மற்றும் பஞ்சாபை அவருக்குத் தாரை வார்த்த முகலாய மாமன்னர் அமைதியை நிலை நிறுத்தினார். பஞ்சாப் ஆளுநராக முகலாய மாமன்னரால் நியமிக்கப்பட்ட மீர்மன்னு, அகமது ஷா அப்தலியின் முகவர் போலவே செயல்பட முடிந்தது. மீர் மன்னுவின் மரணத்துக்குப் பிறகு அவரது மனைவி தில்லி வசீர் இமாத் உல் முல்க்கின் துணையோடு பஞ்சாப் ஆளுநராக மீர் முனிமை அப்தலியின் ஒப்புதலின்றி நியமித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்தலி படையெடுத்து வந்து பஞ்சாபைக் கைப்பற்றினார். மீர் முனிம் தில்லிக்குத் தப்பினார். அவரைத் தொடர்ந்து விரட்டிய அப்தலி தில்லியைக் கைப்பற்றினார். 1757ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தில்லி சூறையாடப்பட்டது. மதுராவும் பிருந்தாவனமும் சிதைக்கப்பட்டன.
- தில்லியை விட்டு வெளியேறும் முன் அப்தலி தில்லியில் தனது பிரதிநிதியாக மீர் பக்சியை நியமனம் செய்தார். அவரது மகன் தைமூர் ஷா லாகூரின் (வைஸ்ராயாக) அரசபிரதிநிதியாக ஆக்கப்பட்டார். அப்தலி தில்லியிலிருந்து வெளியேறிய பிறகு மல்ஹர் ராவ் ஹோல்கர், ரகுநாத ராவ் ஆகியோரின் தலைமையின் கீழ் ஒரு தாக்குதல் நடந்தது. தில்லியில் அப்தலி நியமித்த பிரதிநிதியை அவர்கள் அகற்றினார்கள். பின்னர் தங்களுக்கு பிடித்த ஒருவரை வசீராக நியமித்தனர். 1758இல் சர்கிந்த் மற்றும் லாகூரை அவர்கள் கைப்பற்றினார்கள். ஆப்கன் படைகள் வீழ்த்தப்பட்டு தைமூர் ஷா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.
- 1759 அக்டோபர் மாதம் அப்தலி பஞ்சாபை மீட்டார். லாகூர், முல்தான், சர்கிந்த் ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமைக்கு மராத்தியர் தள்ளப்பட்டனர். பஞ்சாபின் நிலைமையைச் சீராக்குவதற்காக மகாதாஜி சிந்தியாவின் சகோதரரான தத்தாஜி சிந்தியாவை பேஷ்வா அங்கு அனுப்பினார்.
- ஆனால் 1760 இல் நடந்த போரில் அப்தலி அவரை வீழ்த்திக் கொன்றார். சிகந்தராவில் மல்ஹர் ராவ் ஹோல்கரும் தோல்வி கண்டார். அதன் பிறகு சதாசிவ ராவின் தலைமையில் பெரும்படையைப் பேஷ்வா உருவாக்கினார்.
- ரோகில்கண்டின் நஜீப் உத் தௌலா மற்றும் அயோத்தியின் ஷூஜா உத் தௌலா ஆகியோருடன் கூட்டணி அமைத்து அப்தலி பதிலடி கொடுத்தார். வடக்கு அதிகார மையங்களில் மராத்தியருக்குக் கூட்டாளிகள் கிடைக்கவில்லை. அயோத்தி நவாப், சீக்கியர், ஜாட் தலைவர்கள் ஆகியோரைப் பகைத்துக்கொண்ட மராத்தியர், ரஜபுத்திரர்களின் நம்பிக்கையையும் இழந்தனர்.
- பேஷ்வாவின் இளைய புதல்வர் விஸ்வாஸ் ராவின் ஒட்டுமொத்த தலைமையின் கீழ் மராத்திய இராணுவம் இருந்தது. இந்தப் படைகளுக்கு சதாசிவ ராவ் உண்மையான தளபதியாகத் திகழ்ந்தார். வழியில் ஹோல்கர், சிந்தியா, கெய்க்வாட் ஆகியோரை இணைத்துக் கொண்டனர். இந்த நேரத்தில் முகலாய மன்னர் இரண்டாம் ஆலம்கீர் கொல்லப்பட்டார். அவரது இளைய மகன் இரண்டாம் ஷாஆலம் தானே முடி சூடிக்கொண்டார். இந்தப் படுகொலையைத் திட்டமிட்ட வசீர் மூன்றாம் ஷாஜகானுக்கு பட்டம் சூட்டினார். இதில் தலையிட்ட சதாசிவ ராவ் மூன்றாம் ஷாஜகானை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு இரண்டாம் ஷா ஆலம் என்பவரை மன்னராக அறிவித்தார். அப்தலியின் படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பதிலாக சதாசிவ ராவ் உணவுப்பற்றாக்குறை ஏற்படும் வரை நீண்ட காலம் அமைதி காத்தார். தட்டுப்பாடின்றி உணவு கிடைக்கக்கூடிய பசுமையான ஆற்றிடைப் பகுதிகளில் அப்தலி தனது படைகளை நிறுத்தினார்.
பானிப்பட் போரின் விளைவுகள் :
- 1761 ஜனவரி 14 ஆம் தேதி மூன்றாவது பானிப்பட் போர் நடந்தது. மராத்தியரின் இராணுவம் முற்றிலுமாக அழிந்தது. பேஷ்வாவின் மகன் விஸ்வாஸ் ராவ், சதாசிவ ராவ், மற்றும் எண்ணற்ற மராத்திய தளபதிகள் கொல்லப்பட்டனர். ஹோல்கர் தப்பியோடினார். சிந்தியாவின் படைகள் அவரைத் துரத்தின. இந்தத் துயர செய்தி கேட்டு பேஷ்வா அதிர்ச்சி அடைந்தார். இதயம் நலிவடைந்த பேஷ்வா 1761 ஜூனில் மரணமடைந்தார்.
- பானிப்பட் போருக்குப் பிறகு அப்தலி இரண்டாம் ஷா ஆலத்தை தில்லியின் மன்னராக அங்கீகரித்தார். ஆண்டொன்றுக்கு நான்கு மில்லியன் கப்பம் கிடைத்தது. முதலில் கடுமையான அதிர்ச்சியைச் சந்தித்த மராத்தியர் பத்து ஆண்டுகளுக்குள் முகலாய மன்னர் ஷா ஆலத்தின் பாதுகாவலராக உருவாகி வடக்கே தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்த முயன்றனர்.
No comments:
Post a Comment