MARATHAS -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
பாலாஜி பாஜிராவ் (1740 -1761)
பாலாஜி பாஜிராவ் பேஷ்வா பொறுப்பில் இருந்தபோது, பேரரசு ஷாகு 1749இல் இயற்கை எய்தினார். அரச குடும்பத்தில் ஏற்பட இருந்த வாரிசுரிமைப் போட்டி சரியான நேரத்தில் பாலாஜி பாஜிராவின் தலையீட்டால் தவிர்க்கப்பட்டது. பதவிக்குப் போட்டியிட்ட அனைத்துப் பிரிவினரையும் அழைத்துப் பேசி, தமது நிபந்தனைகளை ஒத்துக்கொள்ளச் செய்தார். இனிமேற்கொண்டு, பூனே நகரமே தலைநகர் என்றும் சத்தாரா அன்று என்றும் முடிவு செய்தார். அனைத்து அதிகாரங்களும் பேஷ்வாவின் கரங்களில் குவிக்கப்பட்டன.
மராத்திய விவசாயப் போர்வீரர்களின் காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஊதியம் வழங்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படைக்குத் தற்போது பாலாஜி பாஜிராவ் தலைமையேற்றார். மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், போர்க்களத்திற்கு எளிதில் சென்று வருவதற்கு தங்கள் வசிப்பிடத்திற்குச் சென்றுவர கோட்டைகளிலோ நகரங்களிலோ வாழ வழிவகை செய்தார். காலாட்படை, குதிரைப்படை வீரர்களுக்கான பயிற்சி அவர்களுக்கு வழங்கப்பட்டது. பெரிய பீரங்கிகள் மராத்திய அதிகாரிகளின் கீழிருந்தன. ஆனாலும், அவற்றை இயக்குவது பராமரிப்பது ஆகிய பணிகளில் பெரும்பாலும் போர்த்துகீசியர், பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோர் அமர்த்தப்பட்டிருந்தனர்.
பேஷ்வா பாலாஜி பாஜிராவின் காலத்தில் மராத்திய அரசின் வடஎல்லை மிக விரைவாக ராஜஸ்தான். டெல்லி, பஞ்சாப் ஆகியவற்றின் எல்லைகளை நெருங்கியது. ஒரு கட்டத்தில் மராத்தியரின் கப்பம் வசூலிக்கும் ஆட்சிப்பரப்பு டெல்லிக்கு ஐம்பது மைல்களுக்கு அருகேவரை விரிவடைந்தது. நாக்பூரிலிருந்து மராத்தியப் படைகள் பீகார், வங்காளம், ஒடிசா ஆகிய பகுதிகளில் கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்ட படையெடுப்புகளை நடத்தின. கர்நாடகப் பகுதிகள் குறித்து மராத்தியர்களுக்கும் ஹைதராபாத் நிஜாமுக்குமிடையே முரண்பாடுகளும் மோதல்களும் நிலவியபோதும், கன்னட, தமிழ் தெலுங்குப் பகுதிகள் மராத்தியரின் கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டுவரப்பட்டன. 1745க்கும் 1751க்கும் இடைப்பட்ட காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் மராத்தியத் தளபதி ரகுஜி பான்ஸ்லேயின் தலைமையில் கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்ட படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
கர்நாடகத் தாக்குதல்கள்:
- ஆற்காடு நவாபின் மருமகன் சந்தா சாகிப் திருச்சிராப்பள்ளியைக் கைப்பற்றிய பிறகு தஞ்சாவூரை முற்றுகை இடப்போவதாக அச்சுறுத்தினார். 1739இல் தஞ்சாவூரை ஆண்ட மராத்திய ஆட்சியாளர் சாஹூவிடம் உதவி கோரினார். இந்தக் கோரிக்கையை ஏற்ற பேஷ்வா, தனது மைத்துனர் ரகோஜி போன்ஸ்லேவைத் தஞ்சாவூருக்கு அனுப்பினார்.
- 1740ஆம் ஆண்டு ரகோஜி போன்ஸ்லே ஆற்காடு நவாப் தோஸ்த் அலியை வீழ்த்திக் கொன்றார். திருச்சிராப்பள்ளி கைப்பற்றப்பட்டு சந்தா சாகிப் சிறையில் அடைக்கப்பட்டார்.
- புந்தேல்கண்ட் மற்றும் வங்காளத்தில் நடந்த இராணுவத் தாக்குதல்களில் பேஷ்வா ஈடுபட்டிருந்ததால் அடுத்து வந்த நவாப் முகமது அலி 1743இல் ஆற்காட்டை எளிதாகக் கைப்பற்றியதோடு திருச்சிராப்பள்ளியையும் மீட்டார். இதனால் பேஷ்வா தனது உடன் பிறவா சகோதரரான சதாசிவ ராவை கர்நாடகத்துக்கு அனுப்பினார். மராத்தியரின் அதிகாரம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்ட போதிலும் அவர்களால் திருச்சிராப்பள்ளியை மீட்க முடியவில்லை.
உத்கிர் போர், 1760
- 1748இல் நிஜாம் ஆசப்ஜாவின் மறைவுக்குப் பிறகு வாரிசுப் போட்டி வெடித்தது. நிஜாமின் மூத்த மகனுக்குப் பேஷ்வா தனது ஆதரவைத் தெரிவித்தார்.
- சதாசிவ ராவ் தலைமையில் பேஷ்வா அனுப்பிய இராணுவம் 1760இல் நடந்த உத்கிர் போரில் எதிரிகளை வீழ்த்தியது. மராத்தியரின் இராணுவ பலத்துக்குக் கடைசி கட்டமாக இந்த வெற்றி அமைந்தது. பீஜப்பூர், ஒளரங்காபாத், தௌலதாபாத், அகமதுநகர், பர்கான்பூர் ஆகிய பகுதிகளைப் பேஷ்வா கைப்பற்றினார்.
- ரஜபுதனத்தை (1741 முதல் 1748 வரை) ஆறு தாக்குதல் முயற்சிகளுக்குப் பிறகு மராத்தியர் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்கள். 1751இல் வங்காள நவாப் ஒரிஸ்ஸாவைக் கைவிட்டு மராத்தியருக்கு கப்பம் கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
- முகலாயரின் ஆட்சியைக் குறிவைத்தே மராத்தியர் செயல்பட்ட காரணத்தால் அவர்கள் 1752இல் தில்லியில் நுழைந்தார்கள். தில்லியை விட்டு ஆப்கனியரையும் ரோகில்லாக்களையும் விரட்டியடித்தார்கள்.
- மராத்தியரின் உதவியோடு வைஸ்ராயாகப் பொறுப்பேற்ற இமாத் உல் முல்க் அவர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு செயல்படும் பொம்மையானார். பஞ்சாபைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு ஆப்கானிஸ்தானில் துராணி சாம்ராஜ்யத்தை நிறுவிய அகமதுஷா அப்தாலியின் பிரதிநிதியை அங்கிருந்து அகற்றினார்கள். இதனால் அகமது ஷா அப்தலியுடனான பெரிய சண்டையைத் தவிர்க்க இயலவில்லை.
- வடமேற்கிலிருந்த அதிகார மையங்களிலும் மராத்தியர் தங்கள் கூட்டாளிகளை உருவாக்க முனைந்தனர். ஆனால் மராத்தியரின் முந்தைய செயல்பாடுகளால் வடமேற்கு அவர்களுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருந்தது.
- சீக்கியர், ஜாட் தலைவர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் மராத்தியரை நம்பத் தயாராக இல்லை. 1757இல் நடந்த பிளாசி போரில் சிராஜ் உத் தௌலாவுக்கு மராத்தியர் உதவவில்லை. அதனால் வங்காளத்திலிருந்தும் பெரிதாக ஏதும் உதவி கிடைக்கவில்லை.
- கர்நாடகத்திலும் வங்காளத்திலும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பேஷ்வா எடுத்த முயற்சிகளின் விளைவாக அவர்களால் மேலும் முன்னேற முடியாமல் போனது. தில்லி மீதான பேஷ்வாவின் தேவையற்ற ஆர்வம் பல பிரதேச ஆட்சியாளர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தது. 1761இல் அகமதுஷா அப்தலி பெரும் இன்னலை பானிப்பட் போர்க்களத்தில் உருவாக்கினார்.
No comments:
Post a Comment