MARATHAS -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
முதலாம் பாஜி ராவ் (1720-1740)
பாலாஜி விஷ்வநாத்துக்குப் பிறகு அவரது மகன் முதலாம் பாஜிராவ் 1720இல் மன்னர் சாஹூவால் பேஷ்வாவாக நியமிக்கப்பட்டார். ஹைதராபாத் நிஜாம், மால்வாவின் ரஜபுத்திர ஆளுநர், குஜராத் ஆளுநர் ஆகியோரை வீழ்த்தி மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை பாஜிராவ் மேம்படுத்தினார்.
முகலாயரின் கட்டுப்பாட்டிலிருந்து பந்தேல்கண்டை அவர் விடுவித்தார். அதனால் மராத்தியருக்கு அதன் ஆட்சியாளரிடமிருந்து மூன்றில் ஒரு பங்கு பகுதிகள் தாரை வார்க்கப்பட்டது. பேஷ்வாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தலைமைத் தளபதி திரிம்பக்ராவ் 1731இல் பரோடா அருகே தபாய் என்ற இடத்தில் நடந்த போரில் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். தலைமைத்தளபதியின் பதவியையும் பேஷ்வா ஏற்றுக்கொண்டார். 1731இல் எட்டப்பட்ட வார்னா ஒப்பந்தத்தின்படி சாஹூவின் இறையாண்மையை ஏற்குமாறு கோல்ஹாபுரின் சாம்பாஜிக்கு நெருக்குதல் அளிக்கப்பட்டது.
தானே, சால்செட், பேசின் ஆகிய பகுதிகள் 1738இல் போர்த்துகீசியரிடமிருந்து கைப்பற்றப்பட்டு அவர்கள் கொங்கணக் கடற்கரைப் பிரதேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அதே நேரத்தில் மராத்தியருடன் ஆங்கிலேயர் நட்புறவை ஏற்படுத்தியதன் மூலம் தக்காணப்பகுதியில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றார்கள்.
No comments:
Post a Comment