TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL SOUTH INDIAN HISTORY
சோழர் நிர்வாகம்
1.அரசர்:
சோழ அரசின் தன்மை குறித்து வரலாற்றாய்வாளர்களிடையே பலவிதக் கருத்துக்கள் உள்ளன. சோழ அரசு மரபுவழிப்பட்ட முடியாட்சியை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பது தெளிவாகிறது. அரசர் பற்பல பெருமைகளுக்கு உரியவராக அக்காலத்தைச் சேர்ந்த இலக்கியங்களிலும் கல்வெட்டுக் குறிப்புகளிலும் புகழப்படுகிறார். கடவுளுக்கு இணையாகப் பெருமான் அல்லது பெருமகன், உலகுடைய பெருமாள், உலகுடைய நாயனார் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். பிற்காலத்தில் சக்கரவர்த்தி (பேரரசர்), திருபுவன சக்கரவர்த்தி (மூன்று உலகங்களுக்கானப் பேரரசர்) போன்ற பட்டங்களை சோழ அரசாகள் சூடிக்கொண்டனர். அரசராகப் பட்டம் சூட்டும் விழாவின் போது அவரது பெயருக்குப் பின் ‘தேவன்’ என்ற சொல்லைப் பின்னொட்டாகச் சேர்க்கும் நடைமுறை இருந்தது. அரசர்கள் தங்களைக் கடவுளின் நண்பன் (தம்பிரான் தோழன்) என்று உரிமை கோரித் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தினர்.
சோழ அரசர்கள் தங்கள் ஆன்மீக வழிகாட்டி அல்லது இராஜ குருக்களாகப் பிராமணர்களை நியமித்தார்கள். முதலாம் இராஜராஜனும் முதலாம் இராஜேந்திரனும் இராஜ குருக்கள் மற்றும் சர்வ சிவன்கள் ஆகியோரின் பெயர்களைத் தங்கள் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர். அரசர்கள் தங்கள் சமூக மதிப்பையும் அதிகாரத்தையும் உயர்த்திக்கொள்வதற்கான ஒரு வழிமுறையாகவே பிராமணர்களை ஆதரித்தனர். அதன் பொருட்டு பிராமணர்களுக்குப் பிரம்மதேயம், சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் பெரும் நிலப்பரப்புகளைக் இறையிலியாக அளித்தனர்.
மண்டலங்கள்
முன்னரே குறிப்பிடப்பட்டது போல் சோழ அரசின் எல்லை விஜயாலயன் காலத்திலிருந்தே சீராக விரிவடைந்து வந்தது. திறை செலுத்துபவர்கள் என்று வரலாற்று ஆசிரியர்களால் விளக்கமளிக்கப்படும் சிற்றரசர்கள் அல்லது குறுநில மன்னர்களுடனான போர்களுக்குப் பின்னர் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகள் சோழ அரசுடன் இணைத்துக்கொள்ளப்பட்டன. முதலாம் இராஜராஜன் இப்பகுதிகளையெல்லாம் மண்டலங்களாக ஒன்றிணைத்து, ஒவ்வொரு மண்டலத்திலும் ஓர் ஆளுநரை நியமித்தார். பாண்டிய நாட்டில் சோழ பாண்டியர், இலங்கையில் சோழ இலங்கேஸ்வரர் (இது, பின்னர் மும்முடி சோழ மண்டலம் என்று அழைக்கப்பட்டது), தெற்கு கர்நாடகத்தின் கங்கைவடி பகுதியில் சோழ கங்கர் என ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், இருக்குவேளிர், இளங்கோ வேளிர், மழவர்கள், பானர்கள் போன்ற சிற்றரசர்கள் ஆட்சி செய்த முக்கியத்துவம் குறைந்த பகுதிகளும் பின்னர் சோழ அரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டன. இந்தச் சிற்றரசர்களும் சோழ ஆட்சி நிர்வாகத்தின் பல்வேறு பொறுப்புகளில் அமர்த்தப்பட்டனர்.
படை
சோழப் பேரரசு நிரந்தரப் படையைக் கொண்டிருந்தது. இப்படை மரபுவழிப்பட்டிருந்த மூன்று பிரிவுகளை உள்ளடக்கியிருந்தது. காலாட்படை, குதிரைப்படை (குதிரைச் சேவகர்), யானைப்படை (ஆனையாட்கள்). வில் வீரர்கள் (வில்லாளிகள்), வாள் வீரர்கள் (வாளிலர்), ஈட்டி வீரர்கள் (கொண்டுவார்) ஆகியோரும் படையில் இருந்தனர். படைப் பணிகளில் இரு படிநிலைகள் குறிப்பிடப்படுகின்றன. இது பெருந்தனம் மற்றும் சிறுதனம் என்று அழைக்கப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சீனப் புவியியலாளர், “சோழரிடம் 60 ஆயிரம் போர் யானைகள் இருந்தன. அவற்றின் முதுகில் வீடு போன்ற அமைப்பு இருக்கும். அதில் வீரர்கள் நிறைந்திருப்பார்கள். போரில் இவர்கள் நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளின் மீது அம்பு எய்வார்கள். அருகில் உள்ள பகைவர்களுடன் யானையின் மீதிருந்தபடியே ஈட்டியால் சண்டையிடுவார்” எனக் குறிப்பிடுகிறார். சோழர் கடல் கடந்து சென்று நடத்திய போர்கள் மிகவும் புகழ்பெற்றவை. சோழர்களிடம் ‘எண்ணற்ற’ கப்பல்கள் இருந்தன என வரலாற்றாய்வாளர்கள் அவர்களின் கடற்படையை வியந்து குறிப்பிடுமளவுக்கு அதன் பலம் இருந்தது. படை வீரர்களுக்குப் ‘படைப்பற்று’ என்ற உரிமை வழங்கப்பட்டிருந்தது. தலைநகரில் படை முகாம் இட்டிருந்த இடம் ‘படைவீடு’ எனப்பட்டது. புதிதாகச் சேர்க்கப்படும் பகுதிகளில் அமைக்கப்பட்ட புறக்காவல் படைகள் ‘நிலைப்படைகள்’ எனப்பட்டன. ஒரு படைப்பிரிவின் தலைவர் ‘நாயகம்’ என்றும் பின்னாட்களில் ‘படைமுதலி’ என்றும் அழைக்கப்பட்டார். படைத்தளபதி 'சேனாபதி', ‘தண்டநாயகம்’ என்றறியப்பட்டார்.
2.உள்ளாட்சி அமைப்பு:
சோழர் காலத்தில் பல்வேறு உள்ளாட்சிக் குழுக்கள் சிறப்பாக இயங்கியுள்ளன. அவை, ஊரார், சபையார், நகரத்தார், நாட்டார் ஆகியவை அத்தகு குழுக்கள் ஆகும். இவை ஒப்பீட்டளவில் தன்னாட்சி உரிமை கொண்டவையாக இயங்கின. இந்த அடித்தளத்தின் மீதுதான் சோழப் பேரரசு கட்டமைக்கப்பட்டது.
உத்திரமேரூர் கல்வெட்டுகள்:
இன்றைய காஞ்சிபுர மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கிராமம் பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட ஒரு பிரம்மதேய கிராமமாகும். இக்கிராமத்தில் கிராம சபைக்கான உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறித்துத் தெளிவாக விளக்கும் கல்வெட்டுகள் உள்ளன.
ஒவ்வொரு குடும்பிலிருந்தும் (வார்டு) உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். மொத்தம் 30 குடும்புகள் இருந்தன. போட்டியிடும் ஆடவர் 35 -70 வயது வரம்புக்குள் இருத்தல் வேண்டும். வேதநூல்களிலும், சமய நூல்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பதும், நிலஉரிமையாளராகவோ, சொந்த வீடு உடையவராகவோ இருக்க வேண்டும் என்பவை தகுதிகளாகும். தேர்ந்தெடுக்கும் முறை: ஒவ்வொரு குடும்பிலிருந்தும் தகுதியுடைய வேட்பாளர்களின் பெயர்கள் பனையோலைத் துண்டுகளில் எழுதப்படும். அவை மட்பாண்டம் ஒன்றில் போடப்படும். மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஒரு சிறுவனை அழைத்து குடத்துக்குள் உள்ள ஓலைத் துண்டுகளை எடுக்கச் சொல்லி அதில் எழுதப்பட்டுள்ள பெயரை அறிவிப்பார். இம்முறையின்படி பல குழுக்கள் முடிவு செய்யப்படும்.
ஊரார்
வேளாண்மை விரிவாக்கத்தைத் தொடர்ந்து கிராமப்புறங்களில் வேளாண் குடியிருப்புகள் அதிகளவில் தோன்றின. அவை ‘ஊர்’ என அழைக்கப்பட்டன. அந்த ஊர்களில் நிலஉடமையாளர்களே ஊரின் பிரதிநிதிகளாகச் செயல்பட்டார்கள். அவர்கள் ஊரார் என அழைக்கப்பட்டார்கள். கோவில்களின் நிர்வாகத்தையும் குளங்களின் பராமரிப்பையும் இவ்வூரார் மேற்கொண்டனர். குளங்களிலிருந்த நீரை ஊரின் தேவைகளுக்குப் பயன்படுத்துவதையும் ஊரார் கவனித்துக்கொண்டார்கள். இவை தவிர, வரி உள்ளிட்ட வருவாய்களைச் வசூலிப்பது, சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பது, அரசரின் கட்டளையை நிறைவேற்றுவது ஆகிய நிர்வாகப் பொறுப்புகளையும் இவர்கள் மேற்கொண்டனர்.
சபையார்:
ஊர் என்பது நில உடைமை சார்ந்தோரின் குடியிருப்பு ஆகும். இது வேளாண்வகை கிராமம் என அழைக்கப்பட்டது, பிரம்மதேயம் என்பது பிராமணர்களின் குடியிருப்பாகும். பிரம்மதேயத்தின் மையமாக விளங்கிய கோவில்கள், அவற்றின் சொத்துக்கள் ஆகியவற்றை நிர்வகிப்பது, பிரம்மதேய குடியிருப்புகளைப் பராமரிப்பது ஆகிய பணிகளை ‘சபை’கள் மேற்கொண்டன. கோவில் நிலங்களுடன் இணைக்கப்பட்டிருந்த பாசனக்குளங்களின் பராமரிப்புக்குச் சபை பொறுப்பாக இருந்தது. ஊரைப் போலவே சபையும் அரசின் பிரதிநிதியாகச் செயல்பட்டது. நிர்வாகம், நிதி, நீதி ஆகிய துறைகள் சார்ந்த பணிகளையும் சபை மேற்கொண்டது.
நகரத்தார்
நகரம் வணிகர்களின் குடியிருப்பாக விளங்கியது. தங்கம் உள்ளிட்ட உலோகப்பொருள்கள், கைவினைப் பொருள்கள், நெசவு, பானை வனைதல் ஆகியவற்றில் திறமை பெற்ற கைவினைஞர்களும் நகரத்தில் வசித்தனர். நகரத்தின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் நகரத்தார் எனப்பட்டனர். இவர்களின் நிதியுதவி கோவில்களுக்குத் தேவைப்பட்டது. கோவில்களின் நிர்வாகத்துடன் நகரத்தார் சீரான தொடர்பில் இருந்தனர். முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் ‘மாநகரம்’ என்ற குழுவால் நிர்வகிக்கப்பட்டது. உள்ளூர் பொருள்கள் நகரங்களில் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டன. பட்டு, பீங்கான், கற்பூரம், கிராம்பு, சந்தனக்கட்டை, ஏலக்காய் போன்றவை இவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டதாகச் சீன வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. உள்நாட்டிலும் கடல் கடந்தும் வணிகத்தை ஊக்குவிப்பதற்காகக் குலோத்துங்கன் சுங்கவரிகளை நீக்கினார். எனவே அவர் ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ எனப்படுகிறார்.
உள்ளாட்சித் தேர்தல்களும் உத்திரமேரூர் கல்வெட்டுகளும்: பிரம்மதேயங்களில் (பிராமணர்களுக்கு வரிவிலக்குடன் அளிக்கப்பட்ட நிலம்) ஒன்றாக இருந்த உத்திரமேரூரில் (உத்தரமல்லூர் சதுர்வேதி மங்கலம்) கிடைத்த இரு கல்வெட்டுக் குறிப்புகள் (பொ.ஆ. 919இலும் 921இலும் அறிவிக்கப்பட்டவை) மூலம் சோழர் கால உள்ளாட்சித் தேர்தல் முறையை அறிய முடிகிறது. இவை ஒரு பிராமணக் குடியிருப்புக்கான பணிகளை மேற்கொள்வதற்கு வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த உறுப்பினரைத் தேர்வு செய்யும் முறையைத் தெரிவிக்கின்றன. அதன்படி, கிராமம் 30 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வானவர்கள் அனைவரும் சேர்ந்து வெவ்வேறு குழுக்களை உருவாக்குவார்கள். அவை பொதுப்பணிக்குழு, குளங்களுக்கான குழு, தோட்டங்களுக்கான குழு, பஞ்ச நிவாரணக் குழு, தங்கம் தொடர்பான குழு ஆகியவாகும்.
உறுப்பினராகப் போட்டியிடுவோரின் தகுதிகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன: ஆண்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். போட்டியாளர் 35 வயதுக்கு மேலும் 70 வயதுக்குக் கீழும் உள்ளவராக இருக்க வேண்டும். சொத்தும் சொந்த வீடும் உடையவராக இருக்க வேண்டும். வேதங்களிலும் பாஷ்யங்களிலும் தேர்ந்தவராக இருக்க வேண்டும்.
ஒரு பிரிவில் போட்டியிடக்கூடிய அனைவருடைய பெயர்களும் தனித்தனிப் பனையோலைகளில் எழுதப்பட்டு, அவை ஒரு பானையில் இடப்படும் (குடவோலை). சபையில் வயதில் மூத்தவர் ஒரு சிறுவனை அழைத்து, பானையிலிருந்து ஓர் ஓலையை எடுக்கும்படி கூறுவார். அந்தச் சிறுவன் எடுக்கும் ஓலையில் உள்ள பெயருக்குரியவரே உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.
நாட்டார்
பிரம்மதேயங்கள் நீங்கலாகப் பல ஊர்களின் தொகுப்பு நாடு எனப்பட்டது. கால்வாய்கள், குளங்கள் போன்ற பாசன ஆதாரங்களைச் சுற்றி இவை உருவாக்கப்பட்டிருந்தன. வேளாண் வகை கிராமங்களில் நிலம் வைத்திருந்தவர்களின் மன்றம் நாட்டார் எனப்பட்டது. சோழ அரசக்கட்டமைப்பின் அடிப்படை உறுப்புகளாக நாட்டார் செயல்பட்டனர். அரசுக்கான நிர்வாகம், நிதி, நீதித்துறை சார்ந்த பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். நாட்டார்களுக்கு மரபுவழி நில உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. தாங்கள் சார்ந்த நாட்டிலிருந்து வரி சேகரித்துக் கொடுக்கும் பொறுப்பும் அவர்களுக்கு இருந்தது. நாட்டார்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் ஆசுடையான் (நில உரிமையாளர்), அரையன் (வழிநடத்துவோர்), கிழவன் (தலைவர்) போன்ற பட்டங்கள் அளிக்கப்பட்டன. நாட்டுக்கணக்கு, நாட்டு வையவன் எனும் பணியாளர்கள் நாட்டாரின் நிர்வாகப் பணிகளை ஆவணப்படுத்தினர்.
3.பொருளாதாரம்
வேளாண்மை
சோழர் காலகட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய வளர்ச்சிகளில் ஒன்று, வேளாண்மை விரிவாக்கம் ஆகும். வளமான ஆற்றுச் சமவெளி பகுதிகளில் மக்கள் குடியேறினர். ஆறுகள் இல்லாத பகுதிகளிலும் குளம், கிணறு, கால்வாய் ஆகிய நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் உணவு தானிய உற்பத்தி உபரிநிலையை எட்டியது. இதனால் சமூக ஏற்றத்தாழ்வுகள் உருவாகின. வேளாண்மையில் கிடைத்த கூடுதல் வருவாய் நில வரியாகச் சோழ அரசுக்கு வலுவூட்டியது. நில வருவாய் நிர்வாகத்துக்கெனத் தனியாக ஒரு துறை ‘புறவுவரித்திணைக்களம்’ என்ற பெயரில் இயங்கியது. அதன் தலைவர் ‘புறவு வரித்திணைக்கள நாயகம்’ எனப்பட்டார்.
நில வருவாயும் நில அளவையும்
வரிகளை மதிப்பிடுவதற்காகச் சோழர் விரிவான முறையில் நில அளவை செய்வதிலும் தீர்வை விதிப்பதிலும் ஈடுபட்டார்கள். முதலாம் இராஜராஜன் (1001), முதலாம் குலோத்துங்கன் (1086), மூன்றாம் குலோத்துங்கன்(1226) ஆகிய சோழ அரசர்கள் நிலங்களை வகைப்படுத்தி, அளவீடு செய்து அதற்கேற்றவாறு வரிகளை விதித்தனர். நில அளவீட்டுப் பணியில் ஈடுபட்டவர்கள் ‘நாடு வகை செய்கிற’ என்று குறிப்பிடப்பட்டார்கள். இவர் நில உடமைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆவர். நில அளவீடு செய்ய குழி, மா, வேலி, பட்டி, பாடகம் முதலிய அலகுகள் வழக்கில் இருந்தன. பெரும்பாலும் வரிகள் பொருள்களாகவே வசூலிக்கப்பட்டன. இறை, காணிகடன், இறை கட்டின காணிகடன், கடமை உள்ளிட்ட பல வரிகள் விதிக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான ஒரு வரி குடிமை வரி ஆகும். நிலத்தைக் குத்தகைக்குப் பெற்று வேளாண்மை செய்தவர்கள் அரசுக்கும் நில உடமையாளர்களுக்கும் செலுத்திய வரி குடிமை வரி எனப்படும். இந்நில உடமையாளர்கள் உடையான், அரையன், கிழவர் போன்ற மரியாதைக்குரிய பட்டங்களைப் பெற்றிருந்தனர். நிலத்தின் வளம், நில உடைமையாளரின் சமூக மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து வரி நிர்ணயிக்கப்பட்டது. அரசரும் உள்ளூர்த்தலைவர்களும் ‘ஒப்படி’ என்ற வரியை வசூலித்தனர். கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. விளைபொருளாகச் செலுத்தப்பட்ட வரி ‘இறை கட்டின நெல்லு’ எனப்பட்டது. இவ்வரிகள் அனைத்தும் பெரும்பாலும் காவிரிசமவெளிப் பகுதியில்தான் நடைமுறையில் இருந்தன. ஏனைய தொலைதூரப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஊர் மட்டத்தில் வரிகளை வசூலித்து, அரசுக்குச் செலுத்தும் பொறுப்பு ஊராரின் பொறுப்பு ஆகும். நாடு மட்டத்தில் நாட்டார் இப்பொறுப்பை நிறைவேற்றினர்.
வரியாக வசூலிக்கப்பட்ட நெல் 'களம்' என்ற அலகின் அடிப்படையில் வசூலிக்கப்பட்டது. ஒரு களம் என்பது 28 கிலோ ஆகும். முதலாம் ராஜராஜன் வரி வசூலை முறைப்படுத்தினார். ஒரு வேலி (6.5 ஏக்கர்) நிலத்திற்கு 100 களம் வரியாக வசூலிக்கப்பட்டது. வேலியின் அளவு என்பது மண்வளம், போகங்கள் ஆகியவற்றைப் பொருத்து மாறுபடுகிறது.
பாசனம்
சோழர் நடைமுறையில் இருந்த நீர் பாசன முறையை மேம்படுத்தும் வழிமுறைகளை மேற்கொண்டார்கள். சோழ நாடு வேளாண்மை மூலம் அதிக வருவாய் ஈட்டும் அரசாக இருந்ததால், நீராதாரங்களை நிர்வகிப்பதில் அதிகக் கவனத்தைச் செலுத்தியது. வடி, வாய்க்கால் என்ற குறுக்கு மறுக்கான கால்வாய்கள் மழைநீரைச் சேமித்து வைப்பதற்குக் காவிரி வடிநிலப்பகுதியில் பயன்பட்ட மரபுவழி முறை. ‘வடி’ என்பது நீர் வடக்குத் தெற்காக ஓடுவதாகும். ‘வாய்க்கால்’ என்றால் கிழக்கு மேற்காக ஓடுவதாகும். வடி என்பது வடிகாலாக நீரை வெளியேற்றுவதையும், வாய்க்கால் என்பது நீரைக் கொண்டு வருவதையும் குறிக்கும். ஒரு விளைநிலத்துக்கு வாய்க்கால் வழியே வரும் நீர் வடிக்குத் திருப்பப்பட்டு, மற்றொரு வாய்க்காலுக்குச் செல்லும் மழைநீர் கால்வாய் என்பது இயற்கையாக உருவாவதாகும். பலபாசனக்கால்வாய்கள் இத்தகைய இயற்கையான கால்வாய்களை மாற்றியமைத்துக் கொண்டு உருவாக்கப்பட்டவைதான். இவ்வாறு சேமிக்கப்படும் மழை நீர் வடி வழியாகவும் வாய்க்கால் வழியாகவும் சுற்றுமுறையில் பயன்படுத்தப்பட்டது. இந்த அமைப்புமுறை அனைத்து நிலங்களுக்கும் நீர் அரசர்கள், அரசிகள், கடவுளரின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. எடுத்துக்காட்டாக, உத்தமச் சோழ வாய்க்கால், பஞ்சவன் மாதேவி வாய்க்கால், கணவதி வாய்க்கால் போன்றவற்றைக் கூறலாம். ஊர் வாய்க்கால் என்பது நில உரிமையாளர்கள் பலரால் கூட்டாகப் பயன்படுத்தப்பட்டது. நாடு வாய்க்கால் என்பதே நாட்டு வாய்க்கால் எனப்பட்டது. சுழற்சி முறையில் நீரை விடுவது வழக்கில் இருந்தது. சோழர் கல்வெட்டுக் குறிப்புகள் சில பெரிய பாசன ஏரிகளைக் குறிப்பிடுகின்றன. சோழ வாரிதி, கலிய நேரி, பல்லவர்களால் உருவாக்கப்பட்ட வைரமேகத் தடாகம், பாகூர் பெரிய ஏரி, இராஜேந்திர சோழ பேரேரி போன்றவை சில எடுத்துக்காட்டுகள். ஏரிகளை அனைத்து பருவங்களிலும் பராமரிக்கும் வகையிலும், மராமத்து பணிகளில் ஈடுபடும் வகையிலும் மக்கள் ஊதியமில்லா உழைப்பைத் தரும் வழக்கம் இருந்தது.
கங்கை கொண்ட சோழபுரத்தில் இராஜேந்திர சோழன் மேற்கொண்ட பாசனப்பணி குறிப்பிடத்தக்கது. அங்குள்ள ஏரியில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் 16 மைல் நீளமுள்ள ஓர் உறுதியான கட்டுமானத்தை அவர் எழுப்பியுள்ளார். அதை இராஜேந்திர சோழன் 'ஜலமய ஜெயஸ்தம்பம்’ என்று குறிப்பிடுகிறார். அதற்கு, ‘நீரில் கிடைத்த வெற்றியின் நினைவாக எழுப்பிய தூண்’ என்று பொருள். 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடத்துக்கு வந்த அரேபிய வரலாற்றாசிரியரான அல்பெரூனி இக்கட்டுமான அமைப்பைக் கண்டு வியந்தார். “எங்கள் மக்கள் அதனைக் கண்டு வியப்படைவார்கள். ஆனால், அதனை அவர்களால் விவரிக்க இயலாது. அது போன்ற ஒன்றை அவர்களால் கட்டவும் முடியாது” என்று அல்பெரூனி பதிவு செய்துள்ளார். சான்று: ஜவஹர்லால் நேரு, Glimpses of World History.
நீர் மேலாண்மை
பல வகையான நீர் உரிமைகள் நிலவின. ஏரிகளில் இருந்தும், கிணறுகளில் இருந்தும் பெறப்படும் நீரின் பங்கினை இந்த உரிமைகள் முறைப்படுத்தின. கால்வாய்களை ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல், பாசன அமைப்பைப் பழுது பார்த்தல் ஆகிய பொறுப்புகளும் இந்த உரிமைகளில் அடக்கம். நீரைப் பங்கீடு செய்வது ‘நிற்கின்றவாறு’ (பங்கீடு செய்யப்பட்டபடியான நீரின் அளவு) என்று குறிக்கப்பட்டது. குமிழ் (மதகு), தலைவாய் (தலைமடை) ஆகியன வழியாக நீர் திறந்துவிடப்பட்டது. நீர் உரிமைகளை மீறுவதும் பிரம்மதேயங்களுக்குக் கொடையளிக்கப்பட்ட நீராதாரங்களை ஆக்கிரமிப்பதும் அரசுக்கு எதிரான செயல்கள் என்று அரசு ஆணைகள் எச்சரித்தன. ஊருக்குப் பொதுவான குளம் ‘எங்கள் குளம்’ என்று அழைக்கப்பட்டது. நன்கொடையாகவும் மானியமாகவும் நடைபெற்ற நிலப்பரிமாற்றங்களில் நீர் மீதான உரிமைகளும் இணைக்கப்பட்டிருந்தன.
சோழர் காலத்தில், கிராம சபைகள் பாசனக்குளங்களைப் பழுதுபார்க்க ஏரி ஆயம் என்ற வரி வசூலிக்கப்பட்டது. சில சமயங்களில் அரையன் போன்ற உள்ளூர் தலைவர்கள் புயலில் சேதமடைந்த குளங்களைப் பழுது பார்த்துப் புதுப்பித்தனர். கிராம மக்களும் கோவில்களும் குளத்து நீரைப் பகிர்ந்துகொண்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. குளங்களிலும் ஆறுகளிலும் இருந்து மதகு அல்லது தலைமடை வழியாக நீரைத் திறந்துவிடுவதற்குத் தலைவாயர், தலைவாய்ச் சான்றார், ஏரி அரையர்கள் போன்ற சிறப்புக் குழுக்கள் இருந்துள்ளன. குளத்துக்குப் பொறுப்பான மக்கள் குழு குளத்தார் எனப்பட்டது. பிற்காலத்தில், பாசன ஆதாரங்களை நிர்வகிக்கும் பொறுப்புகள் கோவில்களுக்கு வழங்கப்பட்டன. வெட்டி, அமஞ்சி ஆகிய வடிவங்களில் ஊதியமில்லா உழைப்பு செயல்படுத்தப்பட்டது.
4. சமூகமும் அதன் கட்டமைப்பும்
சோழர் காலச் சமூகம் பெருமளவில் வேளாண்மையைச் சார்ந்திருந்ததால், நிலம் வைத்திருப்பது சமூக மதிப்பையும் அதிகாரப் படிநிலையையும் நிர்ணயிக்கும் ஒரு முக்கியக் காரணியாக விளங்கியது. பிரம்மதேய குடியிருப்புகளில் உயர்தகுதி நிலையில் இருந்த நில உடமையாளர்கள் ‘பிரம்மதேய – கிழவர்’ என்று அழைக்கப்பட்டனர். இவர்களுக்கு நில வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து அங்கிருந்த உள்ளூர் விவசாயிகள் ‘குடிநீக்கம்’ (குடிநீக்கி) செய்து இடம்பெயரச் செய்யப்பட்டனர். நிலக்கொடை அளிக்கப்பட்ட கோவில்கள் ‘தேவதானம்’ என்று அழைக்கப்பட்டன. இவற்றுக்கும் பிரம்மதேயம் போன்றே வரிவிலக்கு வழங்கப்பட்டன. இக்காலகட்டத்தில் கோவில்களே பல்வேறு செயல்பாடுகளின் இணைப்பு மையமாக மாறியிருந்தன.
சமூகப்படிநிலையின் அடுத்த இடத்தில் வேளாண்வகை கிராமங்களைச் சேர்ந்த நில உடமையாளர்கள் இடம் பெற்றனர். இவர்களின் நிலங்களிலும் பிராமணர்களின் நிலங்களிலும் ‘உழுகுடி’ என்ற குத்தகைதாரர்கள் வேளாண் வேலைகளை மேற்கொண்டனர். இவர்களுக்குச் சொந்தமாக நிலங்கள் இல்லை. நில உடமையாளர்கள் விளைச்சலில் மேல் வாரத்தையும் (அதிக பங்கு) உழுகுடிகள் கீழ்வாரத்தையும் (குறைவான பங்கு) எடுத்துக்கொண்டனர். சமூகப்படி நிலையில் அடிமட்டத்தில் உழைப்பாளிகளும் (பணிசெய் மக்கள்) அடிமைகளும் இருந்தார்கள்.
இந்த வேளாண் சமூகத்துக்கு வெளியே ஆயுதம் தரித்த வீரர்களும் கைவினைஞர்களும் வணிகர்களும் இருந்தனர், மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்திருக்கக்கூடிய கால்நடை வளர்ப்போர் குறித்துச் சில ஆவணங்கள் கூறுகின்றன. அக்காலத்தில் பழங்குடிகளும், காட்டில் வசித்த மக்களும் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் குறித்து நமது அறிதல் குறைவானதாகும்.
மதம்:
சிவன், விஷ்ணு முதலான புராணக் கடவுளர்கள் சோழர் காலத்தில் பிரபலம் அடைந்தனர். இக்கடவுள்களுக்காக அதிக எண்ணிக்கையில் புதிய கோவில்கள் கட்டப்பட்டன. இக்கோவில்களுக்குப் பெருமளவில் நிலக் கொடைகள் வழங்கப்பட்டன. பெருமளவிலான மக்கள் இக்கோவில்களின் செல்வாக்கின் கீழ் கொண்டுவரப்பட்டனர்.
சோழ அரசர்கள் தீவிர சைவர்கள் ஆவர். முதலாம் பராந்தகனும் (907-953) உத்தமச் சோழனும் (970-985) சைவ சமயத்தை வளர்க்க நிதியுதவியும் நிலக்கொடையும் அளித்தார்கள்.
தஞ்சை பிரகதீசுவரர் (பெருவுடையார்) கோவிலில் உள்ள ஒரு சுவரோவியத்தில் முதலாம் இராஜராஜனும் அவருடைய மனைவியரும் சிவனை வணங்குவதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. சிவபாத சேகரன் என்பது அவருக்குரிய பட்டங்களுள் ஒன்று. சிவனுடைய பாதங்களை இறுகப் பற்றியவன் என்பது இதற்குப் பொருள்.
முதன்மைக் கடவுளான சிவன் இரு வடிவங்களில் வணங்கப்பட்டார். இக்காலகட்டத்தில், மிகவும் மேம்பட்ட தத்துவமாக சைவ சித்தாந்தம் உருவானது. இத்தத்துவத்தின் அடிப்படை நூலான சிவஞானபோதம் மெய்கண்டரால் இயற்றப்பட்டது. பிற்காலத்தில் பல சைவ மடங்கள் தோன்றி இத்தத்துவத்தை வளர்த்தன.
லிங்கோத்பவர் என்ற குறியீட்டு வடிவத்திலும் நடராஜர் என்ற மனித வடிவத்திலும் சிவ வழிபாடு நடைபெற்றது. காவிரி சமவெளியில் அமைந்த இக்கோவில் மையங்களைக் கொண்டு ஒரு நில வரைப்படம் தயாரித்தால், அது, இடம், காலம் தொடர்பான ஓர் வேளாண் - அரசியல் புவியியல் வரைபடத்தை நமக்கு வழங்கும்.
சிற்பங்கள், ஓவியங்களில் ‘திரிபுராந்தகன்’ (அசுரர்களின் மூன்று மாய நகரங்களை அழித்தவராகப் புராணங்களில் கூறப்படுபவர்) என்னும் வடிவத்தில் சிவன் மீண்டும், மீண்டும் பிரதிநிதித்துவப் படுத்தப்படுவது, அவருக்குப் போர் வீரருக்குரிய ஒரு கூறினை வழங்கியது. இதன் மூலம் அரசர் தமது அரசப் பதவிக்குச் சட்ட அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டார். நடராஜன் அல்லது ஆடல் வல்லான் (நடனங்களின் அரசர்) ஆகிய வடிவங்களிலும் சிவன் சித்தரிக்கப்பட்டார். இது, நாயன்மார்கள் எழுதிய பாடல்களோடு இணைந்து தமிழ் இசை, நடனம், நாடகம் ஆகியவற்றின் மையக் கருவானது. சிவனைப் போற்றிப் பாடிய இப்பாடல்கள் அவரின் திருவிளையாடல்களை சித்தரிக்கின்றது. இவை சமூகத்தின் பல பிரிவுகளைச் சார்ந்த மக்களை ஈர்ப்பதாக அமைந்தன.
நம்பியாண்டார் நம்பி சைவ சமய நூல்களை மீட்டெடுத்து, திருமுறை என்ற பெயரில் தொகுத்து, வரிசைப்படுத்தினார். கோவில்களில் தினமும் திருமுறைகளை ஓதுவதற்கு ஓதுவார், பதிகம் பாடுவோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். பாடல்களைப் பாடுவோர் ‘விண்ணப்பம் செய்வோர்’ என்று அழைக்கப்பட்டனர். இசைக்கருவிகளை இசைப்பவர்களும் நியமனம் செய்யப்பட்டனர். கடவுளுக்குத் தொண்டு செய்ய பெண்கள் அர்ப்பணிக்கப்பட்டனர். அவர்களைப் பயிற்றுவிக்க இசை ஆசிரியர்களும் நடன ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.
காலப்போக்கில் சைவம் மீதான சோழ அரசர்களின் பக்தி மிகையான ஆர்வமாக மாறியது. இரண்டாம் குலோத்துங்கனிடம் இத்தகைய தன்மையைக் காண முடியும். அரச சமயமான சைவத்துக்கும் வைணவத்துக்கும் இடையே நடந்துவந்த சமய மோதல்களில் வைணவம் ஒதுக்கப்பட்டது. இவை, வைணவத் திருத்தொண்டரான ஸ்ரீ ராமானுஜர் சோழ நாட்டை விட்டு வெளியேறி கர்நாடகத்தில் உள்ள மேல்கோட்டைக்குச் சென்ற நிகழ்வுக்கும் இட்டுச் சென்றது.
கோவில்கள்
சோழர் தமது காலத்தில் அதிக எண்ணிக்கையிலான கோவில்களை எழுப்பி, ஆதரித்தனர். தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய இடங்களில் அரசர்களால் எழுப்பப்பட்ட கோவில்கள் சோழர்கால கட்டுமானம், ஓவியம், சிற்பம், சிலைவடித்தல் ஆகிய கலைகளின் களஞ்சியமாக விளங்குகின்றன. கோவில்கள் சமூகம், பொருளாதாரம், பண்பாடு மற்றும் அரசியல் ஆகிய செயல்பாடுகளின் மையங்களாக மாறின. அரசர், அதிகாரிகள், நடன கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், பாடகர்கள், அவர்களின் ஆசிரியர்கள், இவர்களுக்குத் தலைமை தாங்கும் மதகுரு என கோவில்களின் அமைப்பு அப்படியே அரச சபையைப் எதிரொளித்தது. இவர்கள் கோவிலின் பிரிக்க முடியாத உறுப்புகளாகவே செயல்பட்டார்கள். தொடக்க கட்ட சோழர்கால கோவில்கள் கட்டுமான நோக்கில் எளிமையாக இருந்தன. அரசர்கள் புதைக்கப்படும் இடங்களில் கோவில் (பள்ளிப்படை) எழுப்பும் வழக்கமும் இருந்தது.
சமூக நிறுவனமாகக் கோவில்
சோழர் காலத்தில் கோவில்கள் சமூகத் திருவிழாக்களுக்கான ஒரு களமாக மாறி சமூக நிறுவனங்களாக இயங்கின. சமூகம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு நடவடிக்கைகளுக்கான மையங்களாகக் கோவில்கள் விளங்கின. கோயிரமர், கோவில் கணக்கு (கோவில் கணக்காளர்), தேவ-கன்னி (கடவுளின் பிரதிநிதி), ஸ்ரீ வைஷ்ணவர், கண்டேசர் (கோவில் மேலாளர்), மற்றும் பிறர் முதல்நிலை கோவில் அதிகாரிகள் ஆவர். கல்வி, நடனம், இசை, ஓவியம், நாடகம் ஆகியவற்றின் வளர்ச்சியை அவர்கள் ஊக்குவித்தனர். முதலாம் இராஜராஜனின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் இராஜராஜ நாடகம் என்ற நாடக நிகழ்ச்சி தஞ்சாவூர் கோவிலில் நிகழ்த்தப்பட்டிருக்கிற சித்திரைத் திருவிழா, கார்த்திகை, ஐப்பசி விழா ஆகிய விழாக்கள் கொண்டாடப்பட்டிருக்கின்றன. கோவில்களில் பாடப்பட்ட வழிபாட்டுப் பாடல்கள் வாய்மொழிக் கல்வியை வளர்த்ததாகக் கூறப்படுகிறது. குடக்கூத்து, சாக்கைக் கூத்து போன்ற மரபு நடனங்கள் சிற்பஓவிய வடிவங்களாகக் கீழப்பழுவூர், திருவொற்றியூர் கோவில்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் பெரிய கோவிலில் நிருத்யம், கர்ணம் போன்ற நடன நிலைகள் சிற்ப வடிவில் காட்டப்பட்டுள்ளன. தமிழ் மரபு இசைக்கருவிகளும் இதேபோல் சித்தரிக்கப்பட்டுள்ளன.
பெருவுடையார் (பிரகதீசுவரர்) கோவில்: இராஜராஜேஸ்வரம், பிரகதீசுவரர் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டடக்கலை, ஓவியம், சிற்பம், சிலை வடித்தல் ஆகிய கலைகளுக்குத் தன்னிகரற்ற எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இராஜராஜனின் ஆட்சி அதிகாரத்துக்கு இக்கோவில் அழுத்தமான சட்ட அங்கீகாரமாக உள்ளது. இக்கோவிலின் கருவறைமீது அமைக்கப்பட்ட 190அடி உயரத்தால் ஆன விமானம் 80டன் எடை கொண்ட மூடிய அமைப்பைக் கொண்டுள்ளது. கருவறையின் வெளிச்சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள இலட்சுமி, விஷ்ணு, அர்த்தநாரீசுவரர், பிச்சாடனர் (பிச்சை ஏற்கும் கோலத்தில் உள்ள சிவன்) ஆகிய உருவங்கள் சிறப்பு அம்சங்கள் ஆகும். புராணங்களிலும் காவியங்களிலும் காணப்படும் காட்சிகள் சுவரோவியங்களாகவும் குறும் சிற்பங்களாகவும் இக்கோவில் சுவர்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சோழ ஆட்சியாளர்களின் சமயக் கருத்தியலை இவை வெளிப்படுத்துகின்றன. நடனப் பெண்கள், இசைக்கலைஞர்கள், இசை ஆசிரியர்கள் இவை நாடு என்ற பகுதிகளைச் சேர்ந்த பல குடியிருப்புகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டுக், கோவில்களோடு இணைக்கப்பட்டனர். கோவில்களில் பக்திப்பாடல்களைப் பாடுவதற்காகப் பாடகர்கள் நியமிக்கப்பட்டனர்.
மேய்ச்சலைத் தொழிலாகக் கொண்ட மக்களும் தங்கள் பக்தியை வெளிப்படுத்தும் விதமாகக் கோவில்களின் அணையா விளக்குகளைப் பராமரிப்பதற்குக் கால்நடைகளைக் கொடையாக வழங்கினர். அவர்களது கொடைகள் பதிவு செய்யப்பட்டதன் மூலம் அம்மக்களின் பெயர்களும் அரச கோவில்களின் கல்வெட்டுகளில் இடம்பெற்றன. இதன் மூலம் அவர்கள் அரச குடும்பத்தின் நெருக்கத்தினைப் பெற்றனர். எண்ணெய் ஆட்டுபவர்கள் சங்கர பாடியார் என அழைக்கப்பட்டனர். இவர்கள் கோவில்களுக்கு எண்ணெய் வழங்கினர், இதன் மூலம் கோவில்களின் அன்றாட நிகழ்வுகளின் அங்கமாயினர். பஞ்ச காலத்தில் இவர்களில் சிலர் தங்களைத் தாமே கோவில் அடிமைகளாக விற்றுக்கொண்டனர்.
கடன் வழங்குதல், அறக்கொடைகளையும், நன்கொடைகளையும் வழங்குதல், பெறுதல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபட்டதால் கோவில்கள் வங்கிகள் போன்று இயங்கின. வேதம், இசை, கலைகள் ஆகியவற்றில் பயிற்சி அளித்ததால் கோவில் ஒரு கல்வி நிறுவனமாகவும் விளங்கியது. சிற்ப வேலைகளும் உலோக வேலைகளும் ஊக்குவிக்கப்பட்டன. கோவிலின் வரவு செலவுக் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. தணிக்கையாளர் ‘கோவில் கணக்கு’ என அழைக்கப்பட்டார்.
கங்கைகொண்ட சோழபுரம்
முதலாம் இராஜேந்திர சோழனின் வட இந்திய வெற்றியின் நினைவாகத் தஞ்சாவூர் பெரிய கோவில் போன்றே கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு கோவிலைக் கட்டினார். இராஜேந்திரன் சோழ கங்கம் என்ற புதிய பாசன ஏரியையும் தலைநகர் அருகே உருவாக்கினார், இது ஜல தம்பம் (நீர்த்தூண்) என அழைக்கப்படுகிறது. கங்கை கொண்ட சோழபுரம் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் சோழ அரசர்கள் முடிசூட்டும் இடமாகவும் ஆனது. கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கருவறையின் வெளிப்புறச் சுவர் மாடங்களில் இடம்பெற்றுள்ள அர்த்தநாரீசுவரர், துர்கா, விஷ்ணு, சூரியன், சண்டேச் அனுக்கிரக மூர்த்தி ஆகிய கடவுளரின் சிலைகள் சிறப்புமிக்கவை.
தாராசுரம் கோவில்
இரண்டாம் இராஜராஜனால் (1146-1172) கட்டப்பட்ட தாராசுரம் கோவில் சோழர் காலக் கட்டுமானக் கலைக்கு மற்றொரு சிறந்த உதாரணம் ஆகும். இக்கோவிலின் கருவறைச்சுவரின் தளத்தில் ‘பெரிய புராண’ நிகழ்வுகள் குறுஞ்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. நாயன்மார்களில் முதல் நால்வரில் ஒருவரான சுந்தரரின் கதையைச் சித்தரிக்கும் சுவரோவியமும் இங்குள்ளது. அரசு நிர்வாகத்தில் சேக்கிழார் செல்வாக்குப் பெற்றிருந்ததை இந்த ஓவியம் ஏற்பளிப்பு செய்வதாக உள்ளது.
வணிகம்
வேளாண் உற்பத்தி அதிகரிப்புடன் கைவினைத் தொழில்கள் நடவடிக்கைகளாலும் உற்பத்திப்பொருள் அதிகரித்து, பண்டமாற்று முறை வணிக வளர்ச்சிக்கு இட்டுச்சென்றது. இந்த வணிக நடவடிக்கைகளில், தென் இந்தியாவின் தொடக்க காலத்தில் அறிந்திராத விலை, லாபம், சந்தை போன்ற கருத்தாக்கங்கள் இப்போது ஈடுபடுத்தப்பட்டன. அஞ்சுவண்ணத்தார், மணிக்கிராமத்தார் ஆகிய இரு வணிகக்குழுக்கள் பற்றி அறியமுடிகின்றது. அஞ்சுவண்ணத்தார் குழு யூதர்கள், கிறிஸ்தவர்கள், இசுலாமியர்கள் உள்ளிட்ட மேற்கு ஆசியர்களைக் கொண்டிருந்தது. இவர்கள் கடல்வழி வணிகர்கள் ஆவர். மேற்குக் கடற்கரையின் துறைமுக நகரங்களில் இவர்கள் குடியேறியிருந்தார்கள். உள்நாட்டு வணிகம் செய்தவர்கள் மணிக்கிராமத்தார் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் கொடும்பாளூர், உறையூர், கோவில்பட்டி, பிரான்மலை போன்ற நாட்டின் உட்புற நகரங்களில் வசித்தனர். காலப்போக்கில் இந்த இரு வணிகக்குழுவினரும் ஒன்றாகி, ஐநூற்றுவர், திசை ஆயிரத்து - ஐநூற்றுவர், வளஞ்சியர் போன்ற பெயர்களுடன் இயங்கினர். இவர்களது தலைமை வணிகக் குழு கர்நாடகத்திலுள்ள ஐஹோல் என்ற இடத்தில் இயங்கியது. ஐநூற்றுவர் வணிகக் குழு மேற்கொண்ட கடல் கடந்த வணிகம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நடைபெற்றது. முனைச்சந்தை (புதுக்கோட்டை), மயிலாப்பூர், திருவொற்றியூர் (சென்னை), நாகப்பட்டினம், விசாகப்பட்டினம், கிருஷ்ணப்பட்டினம் (தெற்கு நெல்லூர்) ஆகிய இடங்கள் கடல் வணிகக்குழுக்களின் மையங்களாக மாறின. உள்நாட்டு வணிகம் விலங்குகள், படகுகள் வழியாக மேற்கொள்ளப்பட்டன. சோழநாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள் சந்தனம், அகில், சுவையூட்டும் பொருள்கள், விலையுயர்ந்த ரத்தினங்கள், மிளகு, எண்ணெய், நெல், தானியங்கள், உப்பு ஆகியவை ஆகும். கற்பூரம், செம்பு, தகரம், பாதரசம் போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. பாசன நடவடிக்கைகளில் வணிகர்களும் ஆர்வம் கொண்டனர். வளஞ்சியர் குழு வெட்டிய ஐநூற்றுவப்பேரேரி என்ற பாசன ஏரி புதுக்கோட்டையில் உள்ளது
5. கல்விப் புரவலர்களாக சோழர்
சோழ அரசர்கள் கல்விப்புரவலர்களாக விளங்கினார்கள். அறக்கட்டளைகளை நிறுவி, சமஸ்கிருதக் கல்விக்குப் பெரும் ஆதரவளித்தார்கள். அப்போது எழுத்தறிவு பரவலாக இருந்தது என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. முதலாம் இராஜேந்திரன் தென் ஆற்காடு பகுதியில் உள்ள எண்ணாயிரத்தில் வேதக் கல்லூரி ஒன்றை நிறுவினார். இக்கல்லூரியில் 340 மாணவர்கள் பயின்றார்கள். 14 ஆசிரியர்கள் பணியாற்றினர். வேதம், இலக்கணம், வேதாந்தம் ஆகியவை இங்குக் கற்பிக்கப்பட்டன. அவருக்குப் பின்வந்த அரசர்களும் அவரைப் பின்பற்றினார்கள். இதன் விளைவாக, மேலும் இரு சமஸ்கிருதக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இவை 1048இல் புதுச்சேரிக்கு அருகிலுள்ள திருபுவனியிலும், 1067இல் செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள திருமுக்கூடலிலும் அமைந்தன. இந்த சமஸ்கிருதக்கல்வி மையங்களில் வேதங்கள், சமஸ்கிருத இலக்கணம், சமயம், தத்துவங்கள் ஆகியவை கற்றுத்தரப்பட்டன. ஆசிரியர்களுக்கான ஊதியமாக அவர்களின் பணிக்காலத்திற்கு ஏற்ப நிலம் வழங்கப்பட்டது. பெரும் இலக்கியப் படைப்புகளான கம்ப இராமாயணம், பெரிய புராணம் ஆகியன இக்காலகட்டத்தைச் சேர்ந்தவை ஆகும்.
No comments:
Post a Comment