TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
SOUTH INDIAN HISTORY
முற்காலச் சோழர்கள்
பண்டைய தமிழ்நாட்டை ஆண்ட மூன்று முக்கிய பேரரசுகளில் ஒன்றாக சோழர் குலம் இருந்துள்ளது. இவர்கள் உறையூர் மற்றும் காவேரிப்பூம்பட்டிணத்தை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். சங்க இலக்கியம் மற்றும் பிற்கால நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் நாம் இவர்களைப் பற்றி அறிந்தாலும், அவை அனைத்தும் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. கிரேக்கத்தில் பெப்பிலஸ் மரிஸ் எரித்ரை என்று கூறப்படும் பயணக் கட்டுரையிலும், வரைபடங்களிலும் முற்காலச் சோழர்களின் நாடு மற்றும் அதன் நகரங்கள், துறைமுகங்கள், வாணிபம் போன்றவை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
முற்காலம் என்பது சங்ககாலத்தையும் அதற்கும் முந்திய தொன்ம காலத்தையும் குறிக்கும்.
செம்பியன் என்பவர் சோழர் குலத்தின் முன்னோனாக கருதப்படுகிறார். இந்திர விழாவை இவரே ஆரம்பித்தார்.புறாவிற்காக சதையை அறுத்துக்கொடுத்தவர் என்று கூறப்பெறுகிறார்.இவரின் கதை வடபாரத சிபி மன்னனோடு ஒத்துப்போவதால் இருவரும் ஒருவரே என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
எல்லாளன் பொ.ஊ.மு. 205 இல் இருந்து பொ.ஊ.மு. 161 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச் இலங்கை வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவர் ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. மகாவம்சத்தின்படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ நாட்டைச் சேர்ந்தவர். இவர் "பெருமை மிக்க உஜு இனக்குழுவைச்" சேர்ந்தவர் என்று மகாவம்சம் கூறுகிறது.
இளஞ்சேட்சென்னி, பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன். இவன் உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். பொ.ஊ.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் சோழ அரசர்கள் வரிசையில் உள்ளவன். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சங்க இலக்கிய நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. புறநானூற்றிலும், அகநானூற்றிலும் இவனைப் பற்றிய பாடல்கள் உள்ளன.பரணர் என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது பெருங்குன்றூர் கிழார் என்பவரும் இவனைப்பற்றிப் பாடியுள்ளனர்.
கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தான் சென்னி. வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என இவனைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறியுள்ளனர்.
இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே, முற்காலச் சோழர்களுள் புகழ் பெற்றவனும், கூடுதலாக அறியப்பட்டவனுமான கரிகால் சோழன். கரிகாலன் சிறுவனாய் இருந்த போது இளஞ்சேட்சென்னி இறந்தான் என்பது முடத்தாமக் கண்ணியர் இயற்றிய பொருநராற்றுப்படை மூலம் தெரியவருகிறது.
கரிகால் சோழன்
கரிகால் சோழன் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவார். இவர் தந்தையின் பெயர் இளஞ்சேட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.
தனக்கு ஒப்பாரும் இல்லை, தனக்கு மிக்காரும் இல்லை எனப் புகழ் பெற்றவன்.
சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான்.
கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று.
கரிகாற்சோழனின் மகள் ஆதிமந்தியா. ஆதிமந்தியா செய்யுள்கள் சில பாடியுள்ளார்.
கரிகாலன் பற்றிய குறிப்புகள்
பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை, கலிங்கத்துப் பரணி, பழமொழி நானூறு முதலான நூல்கள் இவரைப் பற்றிய சில குறிப்புகளைத் தருகின்றன.
பழமொழி நானூறு தரும் செய்தி
சோழன் மகன் கரிகாலன் பகைவரால் சுடப்பட்ட இல்லத்திலிருந்து பிழைத்து மறைவாக வாழ்ந்தார். "பிடர்த்தலை" என்னும் பெயர் பெற்ற பட்டத்து யானையால் அடையாளம் கண்டு மாலை சூட்டப்பட்டு அரியணை ஏறிச் செங்கோல் செலுத்தினார். எனவே உயிர் பிழைத்திருந்தால் எதையும் செய்யலாம்.
பட்டினப்பாலை தரும் செய்தி
புலிக் குகை போன்ற பகைவர் சிறையில் வளர்ந்த யானை வளர்ச்சி பெற்ற பின்னர் தான் விழுந்திருந்த பகைவரின் பொய்குழியின் கரை இடியுமாறு குத்தி மேலேறி தன் பெண் யானையுடன் சேர்ந்தது போலக் கரிகாலன் அரியணை ஏறினாராம்.திண்ணிய காப்புச் சிறையில் இருந்த கரிகாலன் பிறர் கண்டு அஞ்சத் தக்க தாயமாகிய ஆட்சியை ஊழ் வலிமையால் பெற்று நாடாண்டார். இவ்வாறு பெற்றதனால் நிறைவடையாமல் நாட்டை விரிவுபடுத்தினார்.
பட்டினப்பாலை நூலுக்குத் தரப்பட்டுள்ள தனிப்பாடல் தரும் செய்தி
கரிகாலன் காலில் தீ பட்டு அவரது கால் கருகிப் போயிற்று.அதனால் அவர் கரிகாலன் என்னும் பெயர் பெற்றானோ என எண்ணுமாறு இந்தப் பாடல் அமைந்துள்ளது.
வெண்ணிப் போர்
இவரது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவர் முறியடித்துவிட்டார். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமான் பெருஞ்சேரலாதன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி வடக்கிருந்து உயிர் நீத்தார். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக் குயத்தியார் என்னும் புறநானுற்றுப் புலவர் விளக்குகிறார்.
இவரது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்க்காமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவர் முறியடித்தார். கரிகாலனின் படைகள் அவரது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப் பாலையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.
இறப்பு
கரிகாற் பெருவளத்தான் இறுதியில் குராப்பள்ளி என்ற இடத்தில் உலக வாழ்வை நீத்தார் என்பது தெரிகிறது. ‘குராப்பள்ளி’ என்பது குராமரத்தைத் தலமரமாகக் கொண்ட திருவிடைச் சிவத்தலமாகும் என்று கருதப்படுகிறது.
வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும் அவர் இறந்ததால் ஏற்பட்ட ஆறாத்துயரத்தைப் பற்றியும் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.
பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால்வளவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது.
நெடுங்கிள்ளி, முதலாம் கரிகால் சோழனுக்குப் பின் பட்டத்துக்கு வந்த சோழ அரசனாவான். இவன் முதலாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சிபீடமேறி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. நெடுங்கிள்ளி முற்காலச் சோழர் வரிசையில் ஒருவன். இவன் ஆட்சிபீடம் ஏறியபோது சோழ நாடு நல்ல நிலையிலேயே இருந்ததெனினும், நெடுங்கிள்ளிக்கும், நலங்கிள்ளி என்னும் இன்னொரு சோழனுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டி அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக சோழ நாடு சீரழிந்ததாக சங்க இலக்கியங்கள் மூலம் தெரிய வருகின்றது.கோவூர் கிழார் என்னும் புலவர் பாடிய 44 ஆம், 45 ஆம் புறநானூற்றுப் பாடல்கள், இவ்விரு சோழர்களுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி மற்றும் அதனால் மக்களும், விலங்குகளும்கூடப் படும் துன்பங்கள் பற்றிய செய்திகளைத் தருகிறது. அது மட்டுமன்றி இரு சோழர்களுக்கும் இடித்துரைத்து ஆலோசனை கூறும் தொனியையும் இப் பாடல்களிலே காண முடிகின்றது.
நலங்கிள்ளி முற்காலச் சோழர்களுள் ஒருவன். இன்னொரு முற்காலச் சோழ மன்னனான நெடுங்கிள்ளி என்பவனுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டி தொடர்பாகவே இவனுடைய பெயர் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது.புறநானூற்றில் 14 பாடல்களுக்குக் குறையாமல் நலங்கிள்ளியைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். இவற்றில் பாதிக்கும் மேலான பாடல்களை பாடியுள்ள கோவூர்கிழார், கரிகாலனைப்போன்று, நலங்கிள்ளியும் தமிழ் அரசர்களில் தலைமை ஏற்றான் என்று கூறுகிறார்.
கிள்ளிவளவன் : நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரைப் பற்றிப் பாடிய புலவர்களே குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பற்றியும் பாடியிருப்பதால், கிள்ளிவளவனும் இவர்கள் காலத்திலேயே வாழ்ந்தவனாவான். கோவூர்கிழாரின் ஒரேவொரு பாடலில், பாடப்பட்டுள்ள மற்றொரு கிள்ளிவளவன், குராப்பள்ளியில் இறந்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இவ்விரு மன்னர்களுமே ஒருவரே என்று கூறப்படுகிறது. இது எவ்வாறாயினும் கோவூர்கிழாரின் பாடல், கிள்ளிவளவன் கருவூரைக் கைப்பற்றிய பிறகே இயற்றப்பட்டதாகும். ஆலத்துர் கிழார் தம் பாடலில், கருவூரைக் கைப்பற்றுவதற்கு முன் நிகழ்ந்த ஒரு முற்றுகையைப்பற்றி கூறுகிறார். கிள்ளிவளவனின் புகழைப்பற்றி பத்து புலவர்கள் பதினெட்டு பாடல்கள் பாடியுள்ளனர். சிறுகுடி என்னும் பகுதியின் தலைவனான பண்ணன், என்ற இவனது நண்பனைப் புகழ்ந்து பாடப்பெற்றுள்ள பாடல் இவன் (கிள்ளிவளவனே) இயற்றியதே. இவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான்.
கோப்பெருஞ்சோழன் : உறையூரிலிருந்து அரசாண்டு வந்த சோழர் குல மன்னர் கோப்பெருஞ்சோழன். இம்மன்னன் தாமே ஒரு புலவராய் இருந்ததோடு, பிசிராந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின் நெருங்கிய நட்பை பெற்றிருந்தார்
செங்கணான் : சங்ககாலச் சோழன் செங்கணான் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் நடந்த போரில் சேரமான் கணைக்காலிரும்பொறையைக் கைதுசெய்து கொண்டுவந்து உறையூர்க் குடவாயில் கோட்டத்துச் சிறையில் வைத்தான். சிறைக் காவலர் காலம் தாழ்த்தித் தந்த தண்ணீரைப் பருகாமல் கணைக்காலிரும்பொறை தன்மானத்தை விளக்கும் பாடல் ஒன்றை எழுதி வைத்துவிட்டு உயிர் துறந்தான். சங்ககாலச் சோழரின் கடைசி அரசன் சோழன் செங்கணான். சங்ககாலச் சேரரின் கடைசி அரசன் கணைக்கால் இரும்பொறை. இவர்கள் காலம் பொ.ஊ. 125-150
கழுமலப் போரில் பிடிபட்ட கணைக்காலிரும்பொறையைப் புலவர் பொய்கையார் களவழி நாற்பது பாடிச் செங்கணானிடமிருந்து விடுவித்துக் கொண்டார். காலம் பொ.ஊ. 400-க்குச் சற்று முன்பின். (பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை தோன்றிய காலம்)
சிவாலயங்கள் கட்டிய கோச்செங்கணான். காலம் பொ.ஊ. 500-க்குச் சற்று முன்பின். (தேவாரம் தோன்றிய காலத்துக்குச் சற்று முன்)
தலவிருட்சம் அமைத்த மன்னர் : தில்லைக்குத் தில்லை, மதுரைக்குக் கடம்பம், காஞ்சிக்கு மா, குற்றாலத்திற்குக் குறும்பலா என்று ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு மரத்தை தலவிருட்சமாக அமைத்த மன்னர் கோச்செங்கணான் எனும் கடைச்சங்க காலத்துச் சோழ மன்னர்
சங்ககாலத்துச் சோழ மன்னர்களுள் இராசசூய யாகத்தைச் செய்த பெருங்கிள்ளி, மிகப்பலம் வாய்ந்த மன்னனாக இருந்திருக்க வேண்டும். சேரமன்னன் மாரி வெண்கோவும், பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியும் பெருங்கிள்ளியின் ஆட்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைக் கண்ட ஒளைவயார் பாடிய வாழ்த்துப்பாவில் இம்மூன்று மன்னர்களையும் குறிப்பிட்டதிலிருந்து ஒருவாறு அறியலாம்.
பெருநற்கிள்ளி : பெருங்கிள்ளிக்கும், சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கும் நடந்த போரில், தேர் வண்மலையன் என்ற தலைவன் சோழ மன்னனுக்கு ஆதரவாக போரிட்டதாக கொளு கூறுகிறது. சோழ மன்னனின் நண்பனையோ இல்லை பகைவனையோ யார் என்று அறுதியிட்டு கூறமுடியவில்லை.
இம்மன்னன் தலையாலங்கானத்துப் பெரும் போரில் மாபெரும் சோழ , சேர , ஐம்பெரும் வேளிர் மற்றும் சிற்றரசுப்படைகளைத் திரட்டினாலும் தலையாலங்கானத்திலே தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னனிடம் தோல்வியுற்றான் .
No comments:
Post a Comment