Friday, October 27, 2023

முகலாயர் நிர்வாகம்-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

 

TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

முகலாயப் பேரரசு:

முகலாயர் நிர்வாகம் :

மைய நிர்வாகம் :

இந்தியாவின் பெரும் பகுதியில் ஓர் உறுதியான நிர்வாகத்தை முகலாயர்கள் ஏற்படுத்தியிருந்தனர். முகலாய நிர்வாகக் கட்டமைப்பின் உச்ச உயர்நிலைத் தலைவர் பேரரசரே ஆவார். சட்டங்களை இயற்றுபவரும் அவரே; அவற்றைச் செயல்படுத்துபவரும்அவரே ஆவார். அவரே படைகளின் தலைமைத் தளபதி, அவரே நீதி வழங்குபவரும் ஆவார். 

அவருக்கு அமைச்சர் குழுவொன்று உதவியது. அக்குழுவில் இடம்பெற்றிருந்த மிக முக்கிய அதிகாரிகள் பின்வருமாறு: 

  • வக்கீல் (பிரதம மந்திரி) 
  • வஜீர் அல்லது திவான் (வருவாய்த் துறை மற்றும் செலவுகள்) 
  • மீர்பாக்க்ஷி இராணுவத்துறை அமைச்சராவார். 
  • மீர்சமான் அரண்மனை நிர்வாகத்தை கவனித்தார். 
  • குவாஜி தலைமை நீதிபதியாவார். 
  • சதா-உஸ்சுதூர் இஸ்லாமியச் சட்டங்களை (சாரியா) நடைமுறைப் படுத்தினார்.

மாகாண நிர்வாகம் :

  • பேரரசு பல சுபாக்களாகப் (மாகாணங்கள்/ மாநிலங்கள்) பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சுபாவும் 'சுபேதார்' என்னும் அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருந்தது. 
  • ஒவ்வொரு சுபாவும் பல சர்க்கார்களாகப் (மாவட்டங்கள்) பிரிக்கப்பட்டிருந்தன. சர்க்கார் பர்கானாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. 
  • பல கிராமங்களை உள்ளடக்கிய பிரிவே பர்கானாவாகும்.

உள்ளாட்சி நிர்வாகம் :

  • நகரங்களும் பெருநகரங்களும் கொத்தவால் எனும் அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டன. 
  • கொத்தவால் சட்டம் ஒழுங்கைப் பராமரித்தார். 
  • கிராம நிர்வாகம் கிராமப் பஞ்சாயத்துகளிடம் (முறைப்படுத்தப்படாத கிராம அளவிலான நீதி வழங்கும் அமைப்புகள்) வழங்கப்பட்டிருந்தது. பஞ்சாயத்து உறுப்பினர்கள் தீர்ப்புகளை வழங்கினர். 

படை நிர்வாகம் :

  • முகலாய இராணுவமானது காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, பீரங்கிப்படை ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தன. 
  • அரசர் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, சிறப்பு வாய்ந்த ஆயுதங்களை ஏந்திய எண்ணிக்கையிலும் அதிகமான பாதுகாப்பு வீரர்களையும், அரண்மனைக் காவலர்களாகவும் பராமரித்தார்.

மன்சப்தாரி முறை :

  • மன்சப்தாரி முறையை அக்பர் அறிமுகம் செய்தார். இம்முறையின் கீழ் பிரபுக்கள், ராணுவ அதிகாரிகள், குடிமைப் பணி அதிகாரிகள் ஆகியோரின் பணிகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே பணியாக மாற்றப்பட்டன. இப்பணியிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு மன்சப் (படிநிலை, தகுதி அந்தஸ்து) வழங்கப்பட்டது. அப்படியான தகுதியைப் பெற்றவர் மன்சப்தார் ஆவார். 
  • மன்சப்தார் சாட், சவார் எனும் இருவிடயங்களைச் சார்ந்திருந்தன. சாட், என்பது அவரது தகுதியைக் குறிப்பதாகும். சவார் என்பது ஒரு மன்சப்தார் பராமரிக்க வேண்டிய குதிரைகள், குதிரைவீரர்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். மன்சப்தாரின் ஊதியமானது அவரால் பராமரிக்கப்படும் குதிரைகளின் எண்ணிக்கையைப் (10 முதல் 10,000 வரை) பொறுத்திருந்தது. 
  • பேரரசர் மன்சப்தார்களுக்கு உயர்ந்த ஊதியம் வழங்கினார். ஊதியம் பெறுவதற்கு முன்னர் நடைபெறும் மேற்பார்வையின்போது, மன்சப்தார் தமது குதிரை வீரர்களைக் காட்சிப்படுத்த வேண்டும். திருட்டைத் தவிர்ப்பதற்காகக் குதிரைகளுக்கு முத்திரையிடும்முறை பின்பற்றப்பட்டது. 
  • மன்சப்தாரால் பராமரிக்கப்படும் படைகளை அரசர் தமது விருப்பத்தின்படி பயன்படுத்தலாம் அக்பருடைய ஆட்சிக் காலத்தில் மன்சப்தார் பதவி பரம்பரை உரிமை சார்ந்ததாக இல்லை. அவருக்குப் பின்னர், அது பரம்பரை உரிமை சார்ந்த பணியானது.

நிலவருவாய் நிர்வாகம்:

  • அக்பரின் ஆட்சியின்போது நிலவருவாய் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது. அக்பரின் வருவாய்த்துறை அமைச்சரான ராஜா தோடர்மால் ஷெர்ஷா அறிமுகம் செய்த முறையைப் பின்பற்றினார். 
  • அம்முறையை மேலும் சீர்செய்தார். தோடர்மாலின் ஜப்த் முறை வடக்கு, வடமேற்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முறையின்படி நிலங்கள் அளவை செய்யப்பட்டு அவற்றின் இயல்புக்கும் வளத்திற்கும் ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டன. 
  • பத்தாண்டு காலத்திற்குச் சராசரி விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு  அரசுக்கு வரியாகச் செலுத்தப்பட வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டது. ஷாஜகானின் காலத்தில் ஜப்த் அல்லது ஜப்தி எனும் இம்முறை தக்காண மாகாணங்களுக்கும் நீடிக்கப்பெற்றது.
  • முகலாயப் பேரரசர்கள் பழைய இக்தா முறையை ஜாகீர் எனப் புதிய பெயரிட்டுச் செயல்படுத்தினர். இந்நிலவுரிமை ஒப்பந்த காலமுறை டெல்லி சுல்தான்களின் காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்டதாகும். 
  • இம்முறையின் கீழ் குறிப்பிட்ட ஒரு பகுதியில் நிலவரி வசூல் செய்யும் பொறுப்பும் அப்பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பும் ராணுவ அல்லது சிவில் அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய தற்போதைய பெயர் ஜாகீர்தார் ஆகும். 
  • தங்களது ஊதியத்தைப் பணமாகப் பெறாத ஒவ்வொரு மன்சப்தாரும் ஜாகீர்தார் ஆவார். ஜாகீர்தார் தம் அதிகாரிகள் மூலம் நிலவரியை வசூல் செய்தார். மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரி அமில் குஜார் ஆவார். அவருக்குப் பொட்டாதார், கனுங்கோ , பட்வாரி, முக்காதம் போன்ற துணைநிலை அதிகாரிகள் உதவி செய்தனர்.

ஜமீன்தாரி முறை:

  • நில உரிமையாளர்களிடமிருந்து நிலவரியை வசூலிக்கப் பணியமர்த்தப்பட்டவர்களே ஜமீன்தார்கள் ஆவர். ஜமீன்தார்கள் முகலாய அதிகாரிகள், படைவீரர்கள் ஆகியோரின் உதவியுடன் நிலவரியை வசூல் செய்தனர். 
  • சட்டம், ஒழுங்கு, அமைதி ஆகியவற்றையும் பாதுகாத்தனர். உள்ளூர் அளவிலான தலைவர்களும் சிற்றரசர்களும் ஜமீன்தார்கள் என்றே அழைக்கப்பட்டனர். ஆனால், பதினாராம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஜமீன்தார்களுக்குத் தங்களது ஜமீன் பகுதிகளின் மீது பரம்பரை உரிமை வழங்கப்பட்டது
  • வரிவசூல் பணிகளைச் செய்வதற்காகப் படைகளை வைத்துக்கொள்ளும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 
  • அறிஞர்களுக்கும், இறைப்பணியில் ஈடுபட்டுள்ள பெரியோர்க்கும், சமயம் சார்ந்த நிறுவனங்களுக்கும் அரசர் நிலங்களை வழங்கினார். வரிவிலக்கு அளிக்கப்பட்ட இந்நிலங்கள் சுயயூர்கள் என்றழைக்கப்பட்டன.

சமயக் கொள்கை:

  • முகலாயப் பேரரசர்கள் இஸ்லாமைப் பின்பற்றினர். தம்முடைய சமயக் கொள்கையில் அக்பர் மிகவும் முற்போக்காளராகவும், தாராள மனப்பாங்கு கொண்டவராகவும் இருந்தார். 
  • அக்பரின் அவையில் போர்த்துகீசிய கிறித்துவப் பாதிரியார்கள் மிகவும் விரும்பத்தக்கவர்களாக இருந்துள்ளனர். அக்பர் அனைத்து மதங்களிலுமுள்ள சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைத்துத் தீன்-இலாகி (தெய்வீக மதம்) என்னும் ஒரே சமயத்தை உருவாக்க முயன்றார். 
  • அக்பருடைய கொள்கையை ஜஹாங்கீரும் ஷாஜகானும் பின்பற்றினர். 
  • ஔரங்கசீப் தம்முடைய முன்னோர்களின் தாராளக் கொள்கையை மறுத்தார். 
  • முன்னரே குறிப்பிடப்பட்டதுபோல இந்துக்களின்மீது ஜிசியா வரியையும், பயணிகளின் மீதான வரியையும் மீண்டும் விதித்தார்.
  • ஏனைய மதங்களின் மீதான அவரின் சகிப்புத்தன்மை இன்மை மக்களிடையே அவரை விரும்பத்தகாதவராக ஆக்கியது.

கலை, கட்டடக்கலை:

  • பாபர், பாரசீகக் கட்டட முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி ஆக்ரா ,ப்யானா, டோலாப்பூர், குவாலியர் மற்றும் க்யூல் (அலிகார்) போன்ற பகுதிகளில் கட்டங்களைக் கட்டுவித்தார். 
  • ஹுமாயூனின் டெல்லி அரண்மனை, தீன்-இ-பானா இது பின்னாளில் ஷெர்ஷாவினால் இடிக்கப்பட்டிருக்கக் கூடும் என அறியப்படுகிறது. அவ்விடத்தில் ஷெர்சா, புரான கிலாவைக் கட்டினார். ஷெர்சாவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மிக முக்கியமான நினைவுச் சின்னம் பீகாரில் சசாரம் என்னுமிடத்தில் அமைந்துள்ள கல்லறை மாடமாகும்.
  • திவான் -இ-காஸ், திவான்-இ- ஆம், பஞ்ச் மஹால் (பிரமிடு வடிவிலான ஐந்து அடுக்குக் கட்டடம்) ரங் மஹால், சலீம் சிஸ்டியின் கல்லறை, புலந்தர்வாசா ஆகியவை அக்பரால் கட்டப்பட்டவையாகும். சிக்கந்தராவிலுள்ள அக்பரின் கல்லறை கட்டப் பணிகளை ஜஹாங்கீர் நிறைவு செய்தார். மேலும், ஆக்ராவில் நூர்ஜகானின் தந்தையான இம்மத்உத்-தௌலாவின் கல்லறையையும் கட்டினார்.
  • முகலாயப் பேரரசும், அதன் புகழும் உன்னதமும் ஷாஜகான் காலத்தில் உச்சத்தை எட்டியது. பேரரசர் அமர்வதற்காகச் விலையுயர்ந்த நவரத்தினத் கற்கள் பதிக்கப்பெற்ற மயிலாசனம் தயாரிக்கப்பட்டது. யமுனை நதிக்கரையில் உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் எழுப்பப்பட்டது. மேலும், ஆக்ராவிலுள்ள முத்து மசூதி (மோதி மசூதி) டெல்லியிலுள்ள மிகப்பெரிய ஜூம்மா மசூதி ஆகியவை ஷாஜகானால் கட்டப்பட்டவையாகும்.
  • லால் குய்லா என்று அழைக்கப்படும் டெல்லியிலுள்ள 'செங்கோட்டை' முகலாயப் பேரரசர்களின் வாழ்விடமாகும். இது 1639 இல் பேரரசர் ஷாஜகானால் மதில்களால் சூழப்பெற்ற தனது தலைநகர் ஷாஜகானாபாத்தில் கட்டப்பட்ட அரண்மனையாகும், இக்கோட்டை சிவப்புநிறக் கற்களால் கட்டப்பட்டுள்ளதால் இது செங்கோட்டை என அழைக்கப்படுகிறது.
  • ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில், கட்டடக்கலை பெரிய அளவிலான ஆதரவைப் பெறவில்லை . ஆனாலும், ஔரங்கசீப்பின் மகன் ஆஜாம் ஷாவால் தம் தாயின் அன்பைப் போற்றும் வகையில் ஔரங்கபாத்தில் கட்டப்பட்ட பிபிகா மக்பாரா என்னும் கல்லறை மாடம் குறிப்பிடத்தக்கதாகும்.

இசையும் நடனமும்

  • பல மெல்லிசைப் பாடல்களை இயற்றிய குவாலியரைச் சேர்ந்த தான் சென் ஏனைய 35 இசைக் கலைஞர்களோடு அக்பரால் ஆதரிக்கப்பட்டார் என அய்னி அக்பரி குறிப்பிடுகின்றது. 
  • ஜஹாங்கீரும் ஷாஜகானும் இசையை ஆதரித்தவர்களே. 
  • ஒளரங்கசீப் இசைக்கு எதிரானவர் என்ற பொதுக் கருத்தொன்று நிலவுகிறது. ஆனால் அவருடைய காலத்தில்தான் இந்தியாவின் செவ்வியல் இசை குறித்த பல நூல்கள் எழுதப்பட்டன. அவருடைய அரசிகளும் இளவரசிகளும் பிரபுக்களும் தொடர்ந்து இசைக்கு ஆதரவு தந்தனர். 
  • பிற்கால முகலாய அரசர்களில் ஒருவரான முகமது ஷா இசைத்துறையில் முக்கிய வளர்ச்சிகள் ஏற்படக் காரணமாக இருந்தார். 
  • பாபர் நாமா, பாதுஷா நாமா ஆகிய நூல்களில் இசைக்கருவிகளோடு பெண்கள் நடனமாடும் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

இலக்கியம்:

  • பாரசீகம், சமஸ்கிருதம் மற்றும் பிராந்திய மொழிகள் முகலாயர் காலத்தில் நன்கு வளர்ச்சியடைந்தன. முகலாயப் பேரரசிலும் தக்காண அரசுகளிலும் பாரசீக மொழியே நிர்வாக மொழியாக இருந்தது.ரஜபுத்திர அரசுகளின் மீதும் அம்மொழி தாக்கத்தை ஏற்படுத்தியதால் அவற்றின் நிர்வாகத்தில் பல பாரசீகச் சொற்கள் இடம் பெற்றன. 
  • 'அக்பர் நாமா' என்னும் நூலில் அக்பரின் வரலாற்றை அபுல் பாசல் தொகுத்து வழங்கியுள்ளார். முகலாய நிர்வாகத்தைப்பற்றி அவர் அய்னி அக்பரியில் விவரித்துள்ளார். அறிவியல், புள்ளியியல், புவியியல், பண்பாடு ஆகியவற்றின் மீது ‘அய்னி அக்பரி’ கொண்டுள்ள அக்கறைக்காகவே அது பாராட்டப்பட வேண்டும். 
  • அப்துல் ஹமீது லகோரி, முகமது வரிஸ் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய ஷாஜகான் வாழ்க்கை வரலாறான ‘பாதுஷா நாமா’ அய்னி அக்பரியை முன்னுதாரணமாகக் கொண்டு எழுதப்பட்டதே. 
  • ஒளரங்கசீப்பின் முதல் பத்தாண்டு கால ஆட்சியைப் பற்றி ஆலம்கீர் நாமா என்னும் நூலை எழுதிய முகமது காஸிம் இதே முறையைத்தான் பின்பற்றினார். 
  • பாபரின், சகதாய் துருக்கிய மொழியில் எழுதிய சுயசரிதையை அப்துல் ரகீம் கானி-இ-கானான் என்பவர் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்தார். 
  • தபிஸ்தான் என்னும் நூல் பல்வேறு மதங்களின் நம்பிக்கைகள், அம்மதங்கள் தொடர்பான நூல்கள் ஆகியன குறித்துப் பாரபட்சமற்ற விபரங்களைக் கொண்டுள்ளது. சமஸ்கிருத நூல்களை மொழி பெயர்த்ததால் பாரசீக மொழி வளம் பெற்றது. 
  • அக்பரின் அவைக்களப் புலவரும் அபுல் பாசலின் சகோதரருமான அபுல் பெய்சியின் மேற்பார்வையில் மகாபாரதம் பாரசீக மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. 
  • தாராளிகோவால் உபநிடதங்கள் ‘சர்-இ-அக்பர்’ (மாபெரும் ரகசியம்) என்னும் பெயரில் மொழி பெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாக்கும். 
  • அபுல் பெய்சியின் மஸ்னாவி, உத்பி, நசிரி ஆகியன இந்தியாவில் பாரசீகக் கவிதைகளுக்கு வளம் சேர்த்தன.
  • முகலாயர் காலத்தில் படைக்கப்பட்ட சமஸ்கிருத நூல்கள் வியக்கத்தக்கவையாகும். இக்காலச் சமஸ்கிருத இலக்கியம் காவியம் என்றழைசக்கப்படும் வரலாற்றுக் கவிதைகள் வடிவில் எழுதும் பாங்கிற்கு பெயர் பெற்றதாகும். கல்ஹணர் காஷ்மீரின் முழுமையான வரலாறு குறித்து எழுதிய ‘ராஜவலிபதகா’ எனும் நூல் அக்பர் ஆட்சிக் காலத்தில் பிரக்ஞபட்டரால் தொகுக்கப்பட்டது. பாரசீக மொழி நூல்கள் சமஸ்கிருதத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டதால் கிரேக்க, அராபியப் புலமையானது இந்தியா வந்தடைந்தது. அக்பரின் வானியலறிஞரான நீலகண்டர், தஜிகனிலகந்தி என்னும் வானியல் ஆய்வு நூலைப் படைத்தார், ஷாஜகானின் அவைக்களப் புலவரான ஜெகநாத பண்டிதர் ‘ரசகங்காதரா’ எனும் சிறப்புக்குரிய நூலை எழுதினார்.
  • முகலாயர் காலத்தில் இலக்கியத் துறைக்குச் செய்யப்பட்ட பெரும் பங்களிப்பு பல்வேறு மொழிகளைப் பேசி வந்த மக்களிடையே உருது ஒரு பொதுவான தொடர்பு மொழியாக வளர்ச்சியடைந்ததாகும். 
  • அப்துர் ரகீம் கான்-இ-கானான் என்பவர் வாழ்க்கை குறித்த, மனித உறவுகள் தொடர்பான பாரசீகர்களின் சிந்தனைகள் இழையோடும் பக்திப் பாடல்களை இந்தியின் கிளை மொழியான பிரிஜி என்னும் வடிவத்தில் எழுதினார். 
  • கிழக்கு உத்திரப் பிரதேசத்து மக்கள் பேசிய இந்தி மொழியின் வட்டார மொழியான அவதியில் துளதிதாசர் எழுதிய பாடல்கள் அவற்றின் பக்திச் சிந்தனைகளுக்காகப் பிரபலமாயின. 
  • இக்காலத்தில் ஏகநாதர், துக்காராம், ராம்தாஸ், முக்தீஸ்வர் ஆகியோரின் இலக்கியப் படைப்புகளால் மராத்திய இலக்கியம் எழுச்சி பெற்றது.முக்தீஸ்வர் மகாபாரத்தையும் இராமாயணத்தையும் இலக்கிய வளம் கொண்ட மராத்திய மொழியில் எழுதினார்.
  • விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தனது ‘ஆமுக்தமால்யதா’ (ஆண்டாளைப் பற்றிய காவியம்) மூலமாகவும், அவருடைய அவைக்களப்புலவரான அல்லசானி பெத்தண்னா தனது ‘மனுசரித்திரா' எனும் நூலின் மூலமாகவும் தெலுங்கு இலக்கியத்தின் கலங்கரை விளக்கங்களாகத் திகழ்கின்றனர். 
  • இக்காலத்தில் தமிழிலிருந்து தனியாகப் பிரிந்த மலையாளம் இலக்கிய நிலை பெற்றது. இராமாயணமும் மகாபாரதமும் மலையாள மொழியில் எழுதப்பட்டன. 
  • அஸ்ஸாமிய மொழியில் பக்திப் பாடலை முன்மாதிரியாகக் கொண்டு சங்கர தேவர் ஒரு புதிய இலக்கிய மரபை உருவாக்கினார். அஸ்ஸாமிய மொழியில் வானியல், கணிதம், யானைகள் மற்றும் குதிரைகளுக்குச் சிகிச்சையளிக்கும் முறைகள் குறித்த நூல்கள் படைக்கப்பட்டன. இராமாயணமும் மகாபாரதமும் அஸ்ஸாமிய மொழியில் எழுதப்பட்டன. 
  • கிருஷ்ணருக்கும் ராதைக்குமான காதலைச் சித்தரிக்கும் கவிதைகளைக் கொண்ட சைதன்ய வழிபாட்டு முறை வங்காள இலக்கியத்தை மேம்படுத்தியது. 
  • குரு அர்ஜுன் சிங் தொகுத்த சீக்கியரின் புனித நூலான குரு கிரந்தத்தில் இடம் பெற்றுள்ள ஒரு கடவுள் கோட்பாட்டின் மேல் நம்பிக்கை கொண்ட சீக்கிய குருக்கள், ஷேக்பரித் ஆகியோரின் பாடல்கள் பஞ்சாபி மொழியின் பரிணாம வளர்ச்சியின் முக்கிய அடையாளங்களாகும்.
  • மாபெரும் சைவப் புலவரான குமரகுருபரர், பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காசி சென்று வந்ததாகக் கூறப்படுகின்றது. அவர் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், நீதிநெறிவிளக்கம் ஆகிய முக்கிய இலக்கியங்களை இயற்றினார். தாயுமானவர் சமரச சன்மார்க்கம் எனும் அறத்தை உள்ளடக்கியப் பக்திப்பாடல்களை இயற்றினார். கிறித்தவ மதப் பரப்பாளர்களான ராபர்ட் டி நொபிலி, கான்ஸ்டான்ட்டைன் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) ஆகியோர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தங்கள் பங்களிப்பைச் செய்யத் தொடங்கியிருந்தனர்.

பொருளாதாரம்:

  • முகலாயப் பொருளாதாரம் காடு சார்ந்த வேளாண் பொருளாதாரமாகும். காடுகள் கைவினைத் தொழிலாளர்களுக்குத் தேவையான கச்சாப் பொருட்களை வழங்கியது. தச்சர், கப்பல் கட்டுவோர், மேல்பூச்சு சாயம் தயாரிப்போர் ஆகியோர்க்குத் தேவையான மரங்களைக் காடுகள் ஈந்தன. நூல் நூற்போருக்கும் நெசவு செய்வோருக்கும் கச்சாப்பட்டினை வழங்கியது. இரும்புச் சுரங்கப் பணியாளர்களுக்கும், உலோகங்களை உருக்கு வோருக்கும் தேவைப்பட்ட மரக்கரியைக் கொடுத்தது. ஆகவே உற்பத்தியாளர்களுக்கும் காடுகளுக்குமான உறவு மிக நெருக்கமாக இருந்தது.
  • கிராமப் புறங்களில் பல்வகைப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர். வேளாண்மையே பொருளாதாரத்தின் அடித்தளம். சொத்துக்கள் வைத்துக்கொள்ள உரிமை மறுக்கப்பட்ட, நிலமற்ற ஏழை விவசாயிகள் மக்கள் தொகையில் ஏறத்தாழக் கால் பங்கிருந்தனர். ஜமீன்தார்களும் கிராமத் தலைவர்களும் ஏராளமான நிலங்களைக் கொண்டிருந்தனர். அவற்றில் பணி செய்ய வேலையாட்கள் அமர்த்தப்பட்டு அவர்களுக்கான ஊதியம் பணமாகவோ பொருளாகவோ வழங்கப்பட்டது. கிணற்று நீர்ப் பாசனமே முக்கியப் பாசன முறையாக இருந்தது.
  • உலகத்தின் ஏனைய பகுதிகளில் ரபி, காரிப் ஆகிய இரு வேளாண் பருவங்களில் பயிர் செய்யப்பட்டப் பயிர் வகைகளை அய்னி அக்பரி பட்டியலிடுகிறது. 
  • புகையிலையும் மக்காச் சோளமும் பதினேழாம் நூற்றாண்டில் அறிமுகமாயின. அதற்குப் பின்னரே மிளகாயும் வேர்க்கடலையும் அறிமுகமாயின. அன்னாசிப்பழம் பதினாறாம் நூற்றாண்டில் அறிமுகமானது. ஒட்டுமுறையில் பல மாம்பழ ரகங்களை போர்த்துகீசியர் வளர்த்தார்கள். உருளைக்கிழங்கு, தக்காளி, கொய்யா ஆகியவை பின்னர் வந்தன. அவுரி மற்றுமொரு முகலாயர் கால முக்கிய வணிகப் பயிராகும். பட்டு உற்பத்தி வங்காளத்தில் பிரமிப்பூட்டும் வளர்ச்சியைப் பெற்று உலகச் சந்தைக்கு அதிகமான பட்டுத்துணியை அனுப்பி வைக்கும் தலைமைப் பட்டு உற்பத்தி மையமாயிற்று.
  • விவசாயிகள் நிலவரியைச் செலுத்துவதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டதால் அவர்கள் தங்கள் உபரியைச் சந்தையில் விற்றாக வேண்டியதிருந்தது. முகலாய ஆளும் வர்க்கத்தாருக்கு நிலவரியே மிக முக்கியமான வருவாயாகும். அது விளைச்சலில் கிடைக்கும் ஒரு பங்காகும். அரசு நிர்வாகம் நிலத்தின் உற்பத்தித் திறனை மதிப்பிட்டு, நிலத்தை அளவை செய்து, மொத்த அளவை அடிப்படையாகக் கொண்டு வரியை நிர்ணயம் செய்தது. 
  • அக்பர் ஜப்தி முறையை (தோடர்மாலால் அறிமுகம் செய்யப்பட்ட முறை) பிரகடனம் செய்தார். நிலத்தின் அளவு, விளைவிக்கப்பட்ட பயிர் ஆகியவற்றின் அடிப்படையில் விவசாயி பணமாகச் செலுத்த வேண்டிய வரி நிர்ணயிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய இவ்வரிகள் தொடர்பான விவரங்களைக் கொண்ட அட்டவணைகள் தஸ்தர் என அழைக்கப்பட்டன.
  • நகர்ப்புறப் பொருளாதாரம் கைவினைத் தொழிற் கூடங்களைச் சார்ந்திருந்தது. பஞ்சடித்துப்பட்டை இடுபவர், நூல் நூற்போர், நெய்வோர், சாயமேற்றுவோர், அச்சுப் பதிப்போர், சலவைச் செய்வோர் என அதிக எண்ணிக்கையிலான மக்களைப் பருத்தியிழைத் தொழிற் கூடங்கள் பணிகளில் அமர்த்திக் கொண்டன. இரும்பு, தாமிர, வைரச்சுரங்கங்கள் அமைத்தல், துப்பாக்கிதயாரித்தல் போன்றவை ஏனைய முக்கியத் தொழில்களாகும். “கர்கானா" என்னும் தொழிற்கூடங்களில் விலையுயர்ந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. அரச குடும்பங்களுக்குத் தேவையான பொருட்களை அரண்மனை சார்ந்த கர்கானாக்கள் உற்பத்தி செய்தன. கைவினைக் கலைஞர்கள் உற்பத்தி செய்த ஆடம்பரப் பொருட்களை வர்த்தகர்கள் உள்ளூர் மற்றும் தொலைதூரச் சந்தைகளுக்கு அனுப்பிவைத்தனர்.

வர்த்தகமும் வாணிகமும் :

  • அரிசி, சர்க்கரை, மஸ்லின் பட்டு, உணவு தானியம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் வங்காளம் முக்கிய மையமாகத் திகழ்ந்தது
  • சோழமண்டலக் கடற்கரை, தனது பருத்தித் துணி உற்பத்திக்காகப் புகழ் பெற்றிருந்தது. 
  • காஷ்மீர் சால்வைகளும் தரைவிரிப்புக்களும் கைவினைப் பொருட்களின் உற்பத்திக்குப் பெயர் பெற்றிருந்த லாகூரிலிருந்து விநியோகமாகின. 
  • பொருட்கள் இடம் விட்டு இடம் செல்வதற்கு ‘உண்டி’ என்றழைக்கப்பட்ட கடன் பத்திரங்கள் உதவின. ஒருங்கிணைக்கப்பட்டிருந்த "சராய்கள்" (ஓய்வு விடுதிகள்) வணிகர்களின் பயணங்களை ஊக்குவித்தன. இந்து, முஸ்லீம், சமணம் போன்ற அனைத்து மதங்களையும் சார்ந்த வணிகர்கள் இருந்தனர். 
  • குஜராத்தைச் சேர்ந்த போராமுஸ்லீம்கள், ரஜபுதனத்து மார்வாரிகள், சோழமண்டலக் கடற்கரை சார்ந்த செட்டியார்கள், மலபார் முஸ்லீம்கள் ஆகியோர் புகழ்பெற்ற வணிக சமூகத்தினர் ஆவர்.
  • மேற்கு ஆசியா ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுடனான வணிகத்தை ஐரோப்பியரே கட்டுப்படுத்தினர். இந்திய வணிகர்களின் பங்கேற்பை அவர்கள் கட்டுப்படுத்தினர். மேலும் பெருமளவிலான வளங்களையும், மிகப்பெரும் ராணுவத்தையும் கொண்டிருந்த போதிலும் முகலாய அரசு ஒரு கடற்படையைக் கொண்ட சக்தியாக இல்லை. தாங்கள் ஒரு பலம் பொருந்திய கடற்படைச் சகாப்தத்தில் வாழ்கிறோம் என்பதை அவர்கள் உணரவில்லை. முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
  • அக்பரின் காலமான 1556 முதல் 1605 வரை மாபெரும் அரசர்களின் காலமாகும். அவருக்கு மிக அருகேயிருந்த சமகாலத்தவர் இங்கிலாந்தின் பேரரசியார் எலிசபெத் ஆவர். இக்காலப் பகுதியில்தான் ஷேக்ஸ்பியரும் வாழ்ந்தார். இதே காலத்தில்தான் பிரான்சை போர்பார்ன் வம்சத்தின் முதல் அரசர் நான்காம் ஹென்றியும், பாரசீகத்தை சபாவி அரசவம்சத்தின் மாபெரும் வலிமைமிக்க அரசனான மகாஅப்பாஸும் ஆண்டுவந்தனர் ஐரோப்பாவில் நடைபெற்ற ஸ்பானிய ஆட்சிக்கு எதிராக நெதர்லாந்தின் கிளர்ச்சி இக்காலத்தில் தொடங்கி ஏறத்தாழ எண்பது ஆண்டுகள் தொடர்ந்து 1648இல் முடிவடைந்தது.


முகலாயப் பேரரசு:

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: