ஹூமாயூன் -முகலாயப் பேரரசு |
TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
முகலாயப் பேரரசு:
ஹூமாயூன் (1530-1540, 1555 -1556):
- ஹூமாயூன் பண்பாடும் கல்வியறிவும் மிக்கவர். ஆனால் தனது தந்தையைப் போல் பெரும் வீரர் அல்ல. பலவீனமான பொருளாதார முறை, கொள்ளையடிக்கும் இயல்புடைய ஆப்கானியர், ஆகிய இரண்டு சிக்கல்களை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. குஜராத் அரசரான பகதூர்ஷா அச்சத்தை ஏற்படுத்துபவராக இருந்தார். காபூல், காந்தகார் பகுதிகளுக்குப் பொறுப்பு வகித்த ஹூமாயூனின் சகோதரர் கம்ரான் தன்னுடைய அதிகாரத்தைப் பஞ்சாப் வரை நீட்டித்தார். பாபர் மரணமுறும் தருவாயில் சகோதரர்களை அன்புடன் நடத்துவேன் என பாபருக்குக் கொடுத்த சத்தியவாக்கை நினைவில் நிறுத்திய ஹூமாயூன் பஞ்சாப் மீதான கம்ரானின் ஆட்சியதிகாரத்தை ஓர் உள்நாட்டுப் போரைத் தவிர்ப்பதற்காக ஏற்றுக்கொண்டார்.
- பீகார், உத்திரப்பிரதேசம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஷெர்கான் (பின்னர் ஷெர்ஷா) என்பவரின் தலைமையில் வளர்ந்துவரும் ஆப்கானியரின் அதிகாரம், அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஹூமாயூனைத் தூண்டின. 1532இல் தௌரா என்னுமிடத்தில் ஆப்கானியரைத் தோற்கடித்த ஹூமாயூன், பலம் வாய்ந்த சுனார் கோட்டையை முற்றுகையிட்டார். நான்கு மாதங்களுக்குப் பின்னர் முகலாயருக்கு விசுவாசமாக இருப்பேன் எனப் பொய்யாக வாக்குறுதியளித்த ஷெர்ஷாவின் வார்த்தைகளை நம்பி ஹூமாயூன் முற்றுகையைக் கைவிட்டார். ஹூமாயூன் எடுத்த இந்த தவறான முடிவு அவரது ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது.
- பின்னர் வந்த ஆண்டுகளில் அவருடைய எதிரிகள் தங்களை வலிமைப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் இவர் தில்லியில் ‘தீன்பனா’ என்னும் புதிய நகரை உருவாக்குவதில் கழித்தார்.
- இதே சமயத்தில் பகதூர்ஷா ராஜஸ்தானைக் கைப்பற்றி இணைத்துக் கொண்ட தோடு முகலாயர்களுக்கு எதிரானவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களைத் தூண்டியும் விட்டார். வரவிருக்கும் ஆபத்தை உணர்ந்த ஹூமாயூன் பகதூர்ஷாவின் மேல் போர் தொடுத்து குஜராத்தையும் மாளவத்தையும் கைப்பற்றி அவற்றை தனது சகோதரரான அஸ்காரியின் பொறுப்பில் விட்டார். குஜராத்மக்களின் கலகங்களை அடக்க இயலாத நிலையில் அஸ்காரி ஆக்ரா செல்லத் தீர்மானித்தார். அஸ்காரி ஆக்ராவைக் கைப்பற்றி தனதாக்கிக் கொள்வார் என்ற அச்சத்தில் மாண்டுவில் தங்கியிருந்த ஹூமாயூன் குஜராத்தையும் மாளவத்தையும் கைவிட்டுவிட்டுப் படைகளோடு சகோதரரைப் பின் தொடர்ந்தார். ராஜஸ்தானில் சந்தித்துக்கொண்ட சகோதரர்கள் இருவரும் சமாதானமாயினர்.
- பகதூர்ஷா தொடர்பான போர் நிகழ்வுகளில் ஹூமாயூன், முழுமையாக வேளையில் ஷெர்கான் வங்காள ஆட்சியாளரைத் தோற்கடித்து தன்னை மேலும் வலுப்படுத்திக் கொண்டார். வங்காளத்திலுள்ள கோட்டையும் ரோக்தா கோட்டையும் அவரால் கைப்பற்றப்பட்டன. சுனார் கோட்டையைக் கைப்பற்றிய ஹூமாயூன் ஷெர்கானை எதிர் கொள்வதற்காக வங்காளம் நோக்கிப் புறப்பட்டார். இடையே கவுர் அல்லது கௌடா என்ற இடத்தை ஹூமாயூன் அடைந்தபோது அவருடைய மற்றொரு சகோதரரான ஹிண்டால் கிளர்ச்சி செய்வதாக தகவல் வந்தது. ஆகவே ஹூமாயூன் அதை அடக்குவதற்காக ஆக்ரா நோக்கிப் புறப்பட்டார். அதுவரையிலும் அமைதி காத்த ஷெர்கான் இப்போது ஹூமாயூனின் படைகளைத் தாக்கத் தொடங்கினார். மிகப்பெரும் இடர்பாடுகளுக்குப் பின்னர் ஹூமாயூன் சௌசா என்னுமிடத்தை அடைந்தபோது ஒரு முழுமையான போரே ஏற்பட்டது.
சௌசாப் போர் (1539) :
ஷெர்கான் தனது மேலான, அரசியல், ராணுவத் திறமைகளால் இப்போரில் வெற்றி பெற்றார். ஹூமாயூன் பெருந்தோல்வியைச் சந்தித்தார். இப்போரில் 7000 முகலாயப்பிரபுக்களும் வீரர்களும் கொல்லப்பட்டனர். தன்னுயிரைக் காத்துக் கொள்ளத் தப்பியோடிய ஹூமாயூன் கங்கை நதியை நீந்திக் கடந்தார். ஆக்ராவை சென்றடைந்த அவர் சகோதரர்கள் அஸ்காரி, ஹிண்டால் ஆகியோரின் உதவியோடு ஷெர்கானை எதிர்கொள்ள படையொன்றைத் திரட்டினார். இறுதி மோதல் கன்னோசியில் நடைபெற்றது.
கன்னோசி போர் (1540) :
கன்னோசி போரில் ஹூமாயூனின் படைகள் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டன. அவர் நாடற்ற அரசரானார்.
முகலாயப் பேரரசு:
No comments:
Post a Comment