Friday, October 27, 2023

அக்பர் - முகலாயப் பேரரசு -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

அக்பர் - முகலாயப் பேரரசு
அக்பர் - முகலாயப் பேரரசு


TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

முகலாயப் பேரரசு:

அக்பர் (1556-1605)

  • 1556 இல் ஹூமாயூன் இயற்கை எய்திய பின்னர், அவருடைய பதினான்கு வயது மகன் அக்பர் அரசராக முடிசூட்டப் பெற்றார். அக்பர் சிறுவனாக இருந்ததால், பைராம்கான்  ஆளுநர் பொறுப்பேற்று அக்பர் சார்பாக ஆட்சி புரிந்தார். 
  • ஆனால், சூர் வம்சத்தைச் சேர்ந்த ஹெமு என்னும் தளபதி 1556 இல் டெல்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றிக் கொண்டார். அதே ஆண்டில் பைராம்கான் பானிப்பட் போர்க்களத்தில் (இரண்டாம் பானிப்பட் போர் 1556) ஹெமுவைத் தோற்கடித்துக் கொன்றார். 
  • நாட்டின் அன்றாட ஆட்சி விவகாரங்களில் பைராம்கானின் மேலாதிக்கத்தை அக்பரால் சகித்துக்கொள்ள இயலவில்லை. அவருடைய தூண்டுதலின் காரணமாக பைராம்கான் குஜராத்தில் கொல்லப்பட்டார். இதனால், அக்பரால் அரசை முழுமையாகக் கட்டுப்படுத்த முடிந்தது. படையெடுப்பின் மூலமாகவும் நட்புறவின் மூலமாகவும் அக்பர் இந்தியாவின் பெரும் பகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.

ஹால்டிகாட் போர் :

  • மேவார் அரசரான ராணா உதய்சிங்கை அக்பர் தோற்கடித்து 1568 இல் சித்தூரையும் 1589 இல் ராந்தம்பூரையும் கைப்பற்றினார். 1576 இல் உதய் சிங்கின் மகனான ராணா பிரதாப்பை ஹால்டிகாட் போரில் வெற்றி கொண்டார். தோல்வியுற்ற போதிலும் சேத்தக் என்னும் தமது குதிரையில் தப்பிய பிரதாப்சிங் காட்டில் இருந்தவாறே போரைத் தொடர்ந்தார்.
  • துணிச்சல் மிகுந்த இந்த ரஜபுத்திரர்களின் நினைவுகள் ராஜபுதனத்தில் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது அவரைப் பற்றிப் பல கதைகள் உள்ளன.

மன்சப்தாரி முறை :

  • அக்பர் ஒரு முறைப்படுத்தப்பட்ட மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறையை உருவாக்கினார். அம்முறை பேரரசின் வெற்றிக்குப் பெரும்பங்காற்றியது. அவர் மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தார். 
  • பிரபுக்கள், குடிமைப் பணி சார்ந்த இராணுவ நிர்வாகம் சார்ந்த அதிகாரிகள் ஆகிய அனைவரும் ஒன்றுபடுத்தப்பட்டு ஒரே பணியின் கீழ் கொண்டுவரப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் மன்சப்தார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. 
  • மன்சப்தார் தகுதி ஜாட், சவார் என இருவகைப்பட்டது. ஜாட் என்பது ஒவ்வொரு மன்சப்தாரும் பெறும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதாகும் அவ்வெண்ணிக்கை 10 முதல் 10,000 வீரர்கள் வரை ஆனதாகும். சவார் என்பது மன்சப்தாரின் கீழிருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும். வீரர்களின் எண்ணிக்கை, குதிரைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அதிகரிப்பது அல்லது குறைப்பதன் மூலம் ஒரு மன்சப்தாரின் உயர்வும் தாழ்வும் நிர்ணயம் செய்யப்பட்டன. 
  • மன்சப்தாரி முறையானது பிரபுக்களின் இனக்குழுத் தளத்தை பல்வகைப்பட்டதாக மாற்றியமைத்தது. அக்பரின் தொடக்க காலங்களில் பிரபுக்கள் முற்றிலுமாக மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்களாகவும் பாரசீகத்தைச் சார்ந்தவர்களாகவும் மட்டுமே இருந்தனர். ஆனால் மன்சப்தாரி முறை அறிமுகமான பின்னர் ரஜபுத்திரரும் ஷேக்சதா என்றழைக்கப்பட்ட இந்திய முஸ்லீம்களும் பிரபுக்கள் வரிசையில் இடம் பெறலாயினர். மன்சப்தார்களின் ஊதியம் பணமாக நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதற்கு மாறாக அவர்களுக்கு நிலங்கள் (ஜாகீர்) ஒதுக்கப்பட்டன. (தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து ஒரு மன்சப்தார் பணம் வசூலித்துக்கொள்ளலாம்.) இந்த ஜாகீர்கள் அடிக்கடி மாற்றப்பட்டன. மன்சப்தார் பதவியானது பரம்பரை உரிமை சார்ந்ததல்ல. ஒரு மன்சப்தார் மரணமடைந்துவிட்டால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஜாகீரை அரசு உடனடியாகக் கையகப்படுத்தும்.

அக்பரின் மதக் கொள்கை :

  • அக்பர் ஒரு வைதீக முஸ்லீமாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் சூபி தத்துவங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஓர் இணக்கமான போக்கை மேற்கொண்டார். 
  • ஏனைய மதங்கள் தொடர்பான கோட்பாடுகளைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட அவர் அனைவருக்கும் அமைதி (சுல்-இ-குல்) என்னும் தத்துவத்தைப் பரப்புரை செய்தார். 
  • மதங்களுக்கு இடையிலான தொடர்புகள் பற்றி அக்பர் மேற்கொண்ட தத்துவ விவாதங்கள் மீது வெறுப்புக் கொண்ட சமகால வரலாற்று அறிஞரான பதானி அக்பர் இஸ்லாமைப் புறக்கணித்தார் எனக் குற்றம் சாட்டினார். 
  • அக்பர் இபாதத் கானா எனும் வழிபாட்டுக் கூடத்தை நிறுவினார். தொடக்கத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் இங்கு கூடி ஆன்மீக விசயங்கள் குறித்து விவாதித்தனர். பின்னர் இந்துக்களையும் கிறித்தவர்களையும் ஜொராஸ்திரியர்களையும் சமணர்களையும் கடவுள் மறுப்பாளர்களையும் இவ்விவாதங்களில் பங்கேற்க வரவேற்றார். இபாதத் கானாவில் நடைபெற்ற விவாதங்கள் மதங்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தியால் 1582இல் அக்பர் அவற்றை நிறுத்தினார். 
  • அக்பர் பல்வேறு மதங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற ஞானிகளோடு எடுத்துக் காட்டாக புருசோத்தம், தேவி (இந்து மதம்), மெகர்ஜிராணா (ஜொராஸ்திரிய மதம்), அக்வாவிவா, மான்சரட் எனும் போர்த்துக்கீசியர் (கிறித்தவ மதம்), ஹிர விஜய சூரி (சமண மதம்) ஆகியோரை தனிப்பட்ட விதத்தில் தொடர்பு கொண்டு உண்மை எதுவென அறிய முயன்றார். இத்தகைய விவாதங்களின் விளைவாகப் பல்வகைப்பட்ட இப்பெயர்களுக்குப் பின்னே ஒரே ஒரு கடவுள் மட்டும் இருப்பதாக அவர் உணர்ந்தார். 
  • அக்பருடைய தத்துவத்தை விளக்குவதற்கு அக்பரும் பதானியும் பயன்படுத்திய சரியான சொல் தௌகித்-இ-இலாகி (தீன் இலாகி) என்பதாகும். தௌகித்-இ-இலாகி என்ற சொல்லின் நேரடிப் பொருள் தெய்வீக ஒரு கடவுள் கோட்பாடாகும்.இது ஒரு புதிய மதமல்ல. ஆனால் இதை சூபி மரபின் ஒரு வகைமுறையாகக் கருதலாம். அக்பர் இப்பிரிவின் பீர் (மத குரு) என்ற முறையில் அவர் சீடர்களைச் (முரிக்கள் சூபி சீடர்கள்) சேர்த்திருந்தார். அக்பரின் உண்மையான நோக்கம் மதச் சார்பற்ற கோட்பாடுகளை, பல்வேறு நம்பிக்கைகளைச் சார்ந்தவர்களுக்குச் சரி சமமான சகிப்புத் தன்மையையும் சம மதிப்பையும் வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்ட ஓர் அரசை உருவாக்குவதாகும். 
  • சமஸ்கிருத, அராபிய, கிரேக்க மற்றும் ஏனைய மொழி நூல்களைப் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்வதற்காக ஒரு பெரிய மொழியாக்கத் துறையை அக்பர் உருவாக்கினார். இராமாயணம், மகாபாரதம், அதர்வவேதம், விவிலியம், குரான் ஆகியவை அனைத்தும் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன. தௌகித்-இ-இலாகி (தீன் இலாகி) அக்பருக்குப் பின்னர் இல்லாமல் போனது.
  • அபுல்பாசல், அப்துல் பெய்சி, அப்துர் ரகீம் கான் -இ-கான் ஆகிய நூலாசிரியர்கள் சிறந்த கதை ஆசிரியரான பீர்பால், திறமையான அதிகாரிகளான ராஜா தோடர்மால், ராஜா பகவன்தாஸ், ராஜா மான்சிங் ஆகியோர் அக்பரின் அவையில் இடம்பெற்றிருந்தனர். பாடலாசிரியரும் இசை மேதையுமான தான்சென் ஓவியர் தஷ்வந் ஆகியோர் அக்பரின் அவையை அலங்கரித்தனர்.

1605 இல் அக்பர் இயற்கை எய்தினார். அவருடைய உடல் ஆக்ராவுக்கு அருகே சிக்கந்தராவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


முகலாயப் பேரரசு:

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: