தமிழக காவல்துறை வடக்கு மண்டலம் சார்பாக பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளைக் காக்கும் 'இமைகள் திட்டம்' என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய காவல் துறை வடக்கு மண்டலத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளைக் காக்கும் 'இமைகள்' எனும் திட்டத்தை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தை டிஜிபி(25 Jun 2023) சைலேந்திரபாபு நேற்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் காவல்துறை மற்ற அரசு துறைகளுடன் இணைந்து செயல்பட நிலையான இயக்கமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முறையாக வழக்குப்பதிவு செய்வது, முனைப்புடன் புலன் விசாரணை செய்வது, 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு ஏற்பாடு செய்வது, அவர்களின் சட்டப்படியான பாதுகாப்பை உறுதி செய்வது, போன்றவற்றை உறுதி செய்யும்.