- பால்: பொருட்பால்.
- இயல்: அரசியல்.
- அதிகாரம்: அறிவுடைமை.
குறள் 421:
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
விளக்கம்:
பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.
குறள் 422:
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
விளக்கம்:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
குறள் 423:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
விளக்கம்:
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
குறள் 424:
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
விளக்கம்:
நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.
குறள் 425:
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.
விளக்கம்:
உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.
குறள் 426:
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.
விளக்கம்:
உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.
குறள் 427:
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
விளக்கம்:
ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.
குறள் 428:
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
விளக்கம்:
அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள் அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.
குறள் 429:
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
விளக்கம்:
வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.
குறள் 430:
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
விளக்கம்:
அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.