TODAY CURRENT AFFAIRS IN TAMIL 30.01.24

TNPSC PAYILAGAM
By -
0



“உங்களை தேடி உங்கள் ஊரில்” :

அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 23-11-2023 அன்று அறிவித்தார். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, இத்திட்டம் 31.01.2024 புதன்கிழமை நடைமுறைக்கு வருகிறது.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம், சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட வட்டத்தில், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். மேலும், முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல், மாவட்ட ஆட்சித் தலைவரால் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.

இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், காலை 9 மணி முதல், மறுநாள் காலை 9 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர். கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும் அன்றையதினம், மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று அவற்றின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.


மணிதாவின் இலக்கான ஏழு சிகரங்கள்

சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான மணிதா பிரதான், தென் அமெரிக்க கண்டத்தின் உயரிய சிகரமான அகோன்காகுவாவில் ஏறி சாதனை படைத்துள்ளார். 

ஆர்ஜெண்டினாவில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில் அமைந்திருக்கும் இந்த சிகரத்தின் உச்சியை  அவர் அடைந்தார். இந்த சிகரத்தின் உயரம் 6,962 மீட்டர். 

மணிதாவின் இலக்கான ஏழு சிகரங்கள் வரிசையில் இது நான்காவது சிகரம். ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மிக உயரிய சிகரங்களை ஏறுவது அவரது திட்டம். இதற்கு முன்னர் 2021-ல் எவரெஸ்ட் சிகரம், 2022-ல் எல்பிரஸ் சிகரம், அதே ஆண்டில் கிளிமஞ்சரோ சிகரம் ஆகியவற்றில் ஏறி சாதனை படைத்தார்.

வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே வேலை என்ற திட்டம்

உலகில் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடிக்கின்றன. பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த வேலை நேரங்கள் பரவலாக கடைபிடிக்கப்படுகின்றன. இந்தப் பட்டியலில் தற்போது ஜெர்மனியும் இணைந்துள்ளது. 

ஜெர்மனி பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறது. வரும் பிப்ரவரி 1 முதல், வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறைக்கு வருகிறது. வாரத்தில் மூன்று நாள்கள் விடுமுறையும், நான்கு நாள்களுக்கு வேலையும் செய்வதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமடைவதோடு அவர்களது செயல்திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது.

இந்தியாஅடுத்த 3 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: மத்திய நிதியமைச்சகம்

அடுத்த மூன்றாண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்னதாக மத்திய நிதியமைச்சகம் 'இந்தியப் பொருளாதாரம்: ஒரு சீராய்வு' எனும் தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

“நிதித்துறையில் தற்போது செய்யப்பட்டு வரும் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, இந்தியாவின் பொருளாதாரம் வரக்கூடிய ஆண்டுகளில் 7 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். மேலும் 2030-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் ஜிடிபி மற்றும் 7 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதார சக்தியாக வளர்ச்சியடையும். 

தற்போதைய சீர்திருத்தங்கள் தடைபடாமல் தொடர்ந்தால், 2047 ஆம் ஆண்டுக்குள் 'வளர்ந்த நாடு' எனும் அந்தஸ்தை நாம் அடைய முடியும். 

இந்தியப் பொருளாதாரம் 2024 ஆம் நிதியாண்டில் 7 சதவீதம் அல்லது அதற்கும் மேலான வளர்ச்சி விகிதத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நிகழ்ந்தால், கரோனா தொற்றுநோய்க்குப் பிந்தைய நான்காவது ஆண்டாக பொருளாதாரம் 7% அல்லது அதற்கு மேல் வளர்ச்சியடைந்திருக்கும். இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழநி முருகன் கோயிலில் இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை:

அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி முருகன் கோயிலில் இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை வைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

வழக்கு விசாரணையின் போது, மாற்று மதத்தை சார்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் தனி பதிவேடு வைக்க வேண்டும். 

மேலும், கடவுள் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என பதிவேட்டில் உறுதிமொழி எடுத்த பின் கோயிலுக்குள் செல்லலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியல் :

2024-25-ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அங்கீகாரம் பெறுவதற்கு தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை உள்ளிட்ட மராத்தா ராணுவ நிலப்பரப்பு காட்சிகள் பரிந்துரைக்கப்படுவதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மராட்டிய ஆட்சியில் ராணுவ சக்தியின் உத்தியாக பன்னிரண்டு பகுதிகள் இருந்தன. மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் சல்ஹோ் கோட்டை, ஷிவ்னேரி கோட்டை, லோகாட், கந்தேரி கோட்டை, ராய்காட், ராஜ்காட், பிரதாப்காட், சுவா்ணதுா்க், பன்ஹாலா கோட்டை, விஜய் துா்க், சிந்துதுா்க் போன்றவற்றோடு தமிழ்நாட்டில் உள்ள செஞ்சி கோட்டையும் இடம் பெற்றுள்ளது. இந்தக் கோட்டைகள் மராட்டிய ஆட்சியின் ராணுவ சக்தியாக இருந்து, தற்போதும் 800 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரத்தை வெளிப்படுத்துகின்றன. இந்த 12 புவியியல் மற்றும் நிலப் பகுதிகள் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அங்கீகாரம் பெற இந்திய அரசு சாா்பில் யுனெஸ்கோவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி, இரு அவைகளில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்கும் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. 

ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடா், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையுடன் 31.01.24 தொடங்கி, அடுத்த மாதம் 09.02.24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இந்த நிலையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் இன்று 30.01.24 காலை கூடியுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல், பிரகலாத் ஜோச்ஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 

பொதுவாக, நாடாளுமன்ற கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பாக, கூட்டத்தொடரின் அலுவல்கள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டுவது வழக்கம். அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிப்.1-ஆம் தேதி தாக்கல் செய்கிறாா். தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு அமையும் புதிய அரசு, முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

‘பாரத் டால்’-மானிய விலையில் பருப்பு வகைகளை தமிழத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது

மத்திய அரசின் நுகா்வோா் விவகாரம், உணவு பொது விநியோகத் துறையின் இந்திய தேசிய நுகா்வோா் கூட்டமைப்பு லிமிட்டெட் (என்சிசிஎஃப்), மானிய விலையில் பருப்பு வகைகளை தமிழத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது குறித்து, அதன் தமிழக விநியோகஸ்தரான ஆசான் குளோபல் டிரேட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

மானிய விலையில் பருப்பு வகைகளை மத்திய அரசின் என்சிசிஎஃப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘பாரத் டால்’ என்ற வணிகப் பெயரில் அந்தத் தயாரிப்புகள் தமிழகத்தில் விநியோகம் செய்வதற்காக எங்களை அந்த நிறுவனம் நியமித்துள்ளது. தற்போது மாவட்டந்தோறும் நகரங்கள், கிராமங்களில் உள்ள முக்கிய இடங்களில் 50 நடமாடும் வேன்கள் மூலம் ‘பாரத் டால்’ கடலைப் பருப்பை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த எண்ணிக்கை விரைவில் 100-ஆக உயா்த்தப்படும். கோதுமை, அரிசி, பாசிப் பருப்பு போன்ற புதிய ரகங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து தமிழ் வழி கல்விச் சான்றிதழை பெறுவது தொடா்பான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது:

அதன்படி, உயா்கல்வித் துறை, வேளாண்மை, மருத்துவம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், சட்டம் ஆகிய துறைகளுக்கு உட்பட்ட கல்லூரிகள் மூடப்பட்டிருந்தால், அந்தக் கல்லூரிகள் ஏற்கெனவே இணைவு பெற்றிருந்த பல்கலைக்கழகப் பதிவாளரிடம் இருந்து தமிழ் வழியில் கல்வி பயின்ற்கான சான்றிதழைப் பெற்று அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க சட்டம் இயற்றப்பட்டது. நேரடி நியமனத்துக்கான காலிப் பணியிடங்களில் 20 சதவீத பணியிடங்களை தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களுக்கு ஒதுக்கீடு செய்ய சட்டம் வழிவகை செய்கிறது

பரிக்ஷா பே சர்ச்சா:

பிரதமர் நரேந்திரமோடி பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியான பரிக்ஷா பே சர்ச்சா டெல்லியில் (பாரத் மண்டபம்) நடைபெற்றது.

பரிக்ஷா பே சார்ச்சா என்ற பெயரில் 2018-ம் ஆண்டு முதல் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, தேர்வு நேரத்தில் அனைவரிடமும் எழும் பயம், மன அழுத்தம் உள்ளிட்டவைகளை எப்படி அணுகுவது, அவற்றை எப்படி களைவது என்பன குறித்து அறிவுரை வழங்கி வருகிறார். ஆண்டுதோறும் பல லட்சம் பள்ளி மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

நியமனம் :

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவராக முன்னாள் ரயில்வே வாரியத் தலைவர் அனில் குமார் லஹோட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

டிராய் அமைப்பின் முன்னாள் தலைவரான பி.டி.வகேலா ஓய்வு பெற்றதையடுத்து, கடந்த 4 மாதங்களாக இப்பொறுப்பு காலியாக இருந்தது.  இந்நிலையில் ரயில்வே வாரியத்தின் முன்னாள் தலைவரான அனில் குமார் லஹோட்டியை இப்பொறுப்பில் நியமிப்பதற்கு மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

மூன்றாண்டுகள் அல்லது 65 வயது வரை அவர் இந்தப் பதவியை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 லட்சம் அமெரிக்க விசாக்கள்:

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்காக, கடந்த ஆண்டில், 14 லட்சம்(1.4 மில்லியன்) அமெரிக்க விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. 

மேலும், விசா பெறுவதற்கான காத்திருப்பு நேரம் 75 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் அமெரிக்க தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, விசா பெறுவதற்கான காத்திருப்பு நேரம், சராசரியாக 1000 நாட்களாக இருந்த நிலையில், காத்திருப்பு நேரம் தற்போது 250 நாட்களாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க விசா பெறுவதற்கு இந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள், கடந்த 2022-ஆம் ஆண்டை காட்டிலும், கடந்த ஆண்டு 60 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும், அமெரிக்கா செல்வதற்கான விசா பெற விண்ணப்பிப்பவர்களில் பத்தில் ஒருவர் இந்தியராக உள்ளார் என அமெரிக்க தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனவரி 30 - தியாகிகள் தினம் அல்லது ஷஹீத் திவாஸ்

மகாத்மா காந்தி மற்றும் இந்தியாவின் மூன்று புரட்சியாளர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஜனவரி 30 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினம் அல்லது ஷஹீத் திவாஸ் என்று கொண்டாடப்படுகிறது. 

ஜனவரி 30, 1948 இல், 'தேசத்தின் தந்தை' படுகொலை செய்யப்பட்டார். மேலும் 23 மார்ச் 3 அன்று பகத் சிங், சிவராம் ராஜ்குரு, சுகதேவ் தாப்பர் ஆகிய தேசத்தின் மாவீரர்கள் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர்.

ஜனவரி 30 - உலக தொழுநோய் தினம்

உலக தொழுநோய் தினம் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று குழந்தைகளில் தொழுநோய் தொடர்பான குறைபாடுகளின் பூஜ்ஜிய நிகழ்வுகளின் இலக்கை மையமாகக் கொண்டுள்ளது. நமக்குத் தெரிந்தபடி, குறைபாடுகள் ஒரே இரவில் ஏற்படாது, ஆனால் நீண்ட காலத்திற்கு கண்டறியப்படாத நோய்க்குப் பிறகு ஏற்படும். கருப்பொருள்: Beat Leprosy

 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மாதம் தோறும்  ---- கிழமைகளில் மாவட்ட ஆட்சியர்கள் நாள் முழுவதும் ஒரு வட்டத்தில் தங்கி பொதுமக்களின் குறைகளை கேட்பதற்காக தொடங்கப்படுகிறது?

A) 4வது புதன் கிழமைகளில்
B) 1வது புதன் கிழமைகளில்
C) 3வது திங்கட்கிழமை
D) 2வது திங்கட்கிழமை

ANS :  A) 4வது புதன் கிழமைகளில்


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023


விருதுகள் கௌரவங்கள் 2023 :

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!