TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
INDIA AS A SECULAR STATE, SOCIAL HARMONY
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, சமூக நல்லிணக்கம்
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு
மதச்சார்பின்மை என்பது மத அமைப்புகளிலிருந்து அரசைப் பிரிக்கும் கோட்பாட்டைக் குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு மாநிலத்திற்கு விருப்பமான மதம் இல்லை என்றும் பொருள் கொள்ளலாம். 1851 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜார்ஜ் ஹோலியோக் என்பவரால் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
இந்திய மதச்சார்பின்மை என்பது மேற்கத்திய கருத்தாக்கத்திலிருந்து ஒரு மாற்றத்துடன் பெறப்பட்டது. மேற்கின் கருத்து என்பது "தர்ம நிரபேக்ஷதா" என்ற கருத்தின் அடிப்படையில் மத விஷயங்களில் அரசின் முழுமையான தலையிடாத கொள்கையாகும், அதாவது மதத்தின் மீதான அரசின் அலட்சியம். ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவின் வரலாற்று நிலை காரணமாக, இரண்டு பெரிய மதங்கள், அதாவது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் பல வகுப்புவாத கலவரங்கள் மற்றும் வன்முறை வெடிப்புகள் இருந்தன.
எனவே, குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒழுக்கத்தை நிலைநாட்டவும் தேவைப்பட்டால், மத விஷயங்களில் அரசின் தலையீட்டை இந்திய அரசியலமைப்பு வழங்குகிறது. மதச்சார்பின்மையின் இந்திய தத்துவம் "சர்வ தர்ம சம்பவத்தை" அடிப்படையாகக் கொண்டது, அதாவது அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை.
இந்தியா என்பது பல மதங்கள் மற்றும் சமூகங்களின் கலவையாகும். காரணம், இந்து, புத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், சமணம் உள்ளிட்ட பல மதங்களின் பிறப்பிடமாக இந்தியா விளங்குகிறது. இந்தியா ஒரு மத நாடு என்பதை இது காட்டுகிறது, ஆனால் நிர்வாகத்தில் குழப்பம் மற்றும் சிரமங்களை தவிர்க்க மதச்சார்பின்மை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அரசியலமைப்பு விதிகள்
இந்திய அரசியலமைப்பில், மதச்சார்பற்ற என்ற சொல் 1976 இல் 42 வது திருத்தத்தின் முகப்புரையில் சேர்க்கப்பட்டது. இந்த திருத்தத்திற்கு முன், அரசியலமைப்பில் எங்கும் இந்த வார்த்தை வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் மதச்சார்பற்ற நாடு என்ற கருத்து அரசியலமைப்பை உருவாக்குபவர்களால் எப்போதும் ஆதரிக்கப்பட்டது, இது பகுதி III இன் கீழ் அடிப்படை உரிமையான மத சுதந்திரத்திற்கான உரிமையில் சாட்சியமளிக்கப்படுகிறது.
பிரிவு 14 [1] பொது சமத்துவத்தைப் பற்றி பேசுகிறது மற்றும் எந்தவொரு தனிநபருக்கும் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது என்றும் சட்டத்தின் முன் அனைத்து நபர்களும் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் கூறுகிறது.
பிரிவு 15 [2] இந்திய மதச்சார்பின்மையின் கருத்தை மிகப் பெரிய அளவிற்கு விரிவுபடுத்துகிறது, இது அரசால் எந்த வடிவத்திலும் பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிரான விதிகளை வகுக்கிறது. பிரிவு 15 மற்றும் 16 மதம், வர்க்கம், இனம், பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் யாருக்கும் எதிராக பாகுபாடு காட்டுவதைத் தடை செய்கிறது. மறுபுறம், பிரிவு 16 (1) எந்தவொரு காரணத்தையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நபருக்கும் சம வாய்ப்புகளை உத்தரவாதம் செய்கிறது.
பிரிவுகள் 25-28 இந்திய எல்லைக்குள் வாழும் ஒவ்வொரு நபருக்கும் மத சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்கிறது. இந்தக் கட்டுரைகள் குறிப்பாக கிடைக்கக்கூடிய மத சுதந்திரங்கள் மற்றும் சில நியாயமான கட்டுப்பாடுகள் பற்றி பேசுகின்றன. பிரிவு 25 [3] இந்தியாவில் உள்ள நபர்களுக்கு "மனசாட்சியின் சுதந்திரம் மற்றும் சுதந்திரமான தொழில், நடைமுறை மற்றும் மதத்தை பரப்புவதற்கான" உரிமையை வெளிப்படையாக வழங்குகிறது . பிரிவு 26 [4] கூறுகிறது, "மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்". பிரிவு 27 [5] கூறுகிறது, "எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் மேம்படுத்துவதற்காக வரி செலுத்துவதற்கான சுதந்திரம்". பிரிவு 28 [6] "சில கல்வி நிறுவனங்களில் மத போதனை அல்லது மத வழிபாடுகளில் கலந்துகொள்வதற்கான சுதந்திரம்" பற்றி பேசுகிறது.
சமூக நல்லிணக்கம்
19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமயம் சார்ந்த சீர்திருத்த இயக்கங்களை இரண்டாக வகைப்படுத்தலாம். பிரம்ம சமாஜம், பிரார்த்தனை சமாஜம், அலிகார் இயக்கம் போன்ற சீர்திருத்த இயக்கங்கள் ஒருவகை , ஆரிய சமாஜம், இராமகிருஷ்ணா மிஷன், தியோபந்த் இயக்கம் போன்ற சமயப் புத்தெழுச்சி மீட்டெடுப்பு இயக்கங்கள் மற்றொருவகை. இவைகளைத் தவிர ஒடுக்குமுறைப்பாங்குடைய சமூகக் கட்டமைப்பை எதிர்க்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. புனேயில் ஜோதிபாபூலே, கேரளாவில் நாராயணகுரு, அய்யங்காளி, தமிழகத்தில் இராமலிங்க அடிகள், அயோத்திதாசர் ஆகியோர் இவ்வகைப்பட்டோராவர்.
வங்காளத்தில் தொடக்கக் கால சீர்திருத்த இயக்கங்கள்:
(அ) இராஜா ராம்மோகன் ராயும், பிரம்ம சமாஜமும்
- இராஜா ராம்மோகன் ராய் (1772-1833) மேலைநாட்டுக் கருத்துக்களால் கவரப்பட்டு, சீர்திருத்தப்பணிகளை முன்னெடுத்த தொடக்ககாலச் சீர்திருத்த வாதிகளில் ஒருவராவார். பெரும் அறிஞரான அவர், தனது தாய்மொழியான வங்காள மொழியில் புலமை பெற்றிருந்ததோடு சமஸ்கிருதம், அரபி, பாரசீகம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். இராஜா ராம்மோகன் ராய் பொருளற்ற சமயச் சடங்குகளையும், கேடுகளை விளைவிக்கும் சமூக மரபுகளையும் எதிர்த்தார். இருந்த போதிலும் கடந்த காலத்துடனான தொடர்பை அவர் பாதுகாக்க விரும்பினார். தன்னுடைய சமய, தத்துவ சமூகப்பார்வையில் அவர் ஒருகடவுள் கோட்பாடு, உருவவழிபாடு எதிர்ப்பு போன்ற கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தார். உபநிடதங்களுக்குத் தான் கொடுத்த விளக்கங்களின் அடிப்படையில் இந்துக்களின் மறை நூல்கள் அனைத்தும் ஒரு கடவுள் கோட்பாட்டை அல்லது ஒரு கடவுளை வணங்குவதை உபதேசிப்பதாகக் கூறினார்.
- சமூகத்தில் நிலவிவரும் உடன்கட்டை ஏறுதல் (சதி), குழந்தைத் திருமணம், பலதார மணம் போன்ற மரபு சார்ந்த பழக்கங்கள் குறித்து பெரிதும் கவலை கொண்ட அவர், அவற்றிற்கு எதிராகச் சட்டங்கள் இயற்றும்படி ஆங்கில அரசாங்கத்திற்கு விண்ணப்பித்தார். விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள உரிமை உடையவர்கள் எனும் கருத்தை முன்வைத்தார். பலதார மணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்றார். மக்களைப் பகுத்தறிவோடும், பரிவோடும், மனிதப் பண்போடும் இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். 1829இல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் 'சதி' எனும் உடன்கட்டையேறும் பழக்கத்தை ஒழித்துச் சட்டம் இயற்றியதில் இராஜா ராம் மோகன் ராய் முக்கிய பங்கு வகித்தார்.
- ராம்மோகன் ராய் பெண்ணடிமைத்தனத்தைக் கண்டனம் செய்தார். ஆண்கள் பெண்களை கீழானவர்களாக நடத்தும் அன்றைய கால நடைமுறையை எதிர்த்தார். பெண்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் எனும் கருத்தை வலுவாக முன்வைத்தார். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலக்கல்வியும் மேலை நாட்டு அறிவியலும் அறிமுகம் செய்யப்படுவதை முழுமையாக ஆதரித்தார்.
- இராஜா ராம்மோகன் ராய் 1828 இல் பிரம்ம சமாஜத்தை நிறுவி ஆகஸ்டு 20ஆம் நாள் கல்கத்தாவில் ஒரு கோவிலை நிறுவினார். அக்கோவிலில் திருவுருவச் சிலைகள் எதுவும் வைக்கப்படவில்லை . இங்கு எந்த ஒரு மதத்தையும் அல்லது மறைமுகமாகக் குறிப்பிடப்படலாகாது என எழுதிவைத்தார். பிரம்ம சமாஜம் உருவவழிபாட்டை தவிர்த்ததோடு பொருளற்ற சமயச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் எதிர்த்தது. இருந்தபோதிலும் தொடக்கம் முதலாக பிரம்ம சமாஜத்தின் கருத்துக்கள் கற்றறிந்த மேதைகள், கல்வியறிவு பெற்ற வங்காளிகள் என்ற அளவில் மட்டுமே செயல்பட்டது. சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களைத் தன்பால் ஈர்ப்பதில் சமாஜம் தோல்வியடைந்தாலும், நவீன வங்காளப் பண்பாட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மீதான அதனுடைய தாக்கம் மிகவும் போற்றுதலுக்குரியதாகும்.
(ஆ) மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்
இராஜா ராம்மோகன் ராய் 1833இல் இயற்கையெய்திய பின்னர் அவர் விட்டுச்சென்றப் பணிகளை, கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் தந்தையரான தேவேந்திரநாத் தாகூர் (1817-1905) தொடர்ந்தார். அவர் நம்பிக்கை பற்றிய நான்கு கொள்கைக்கூறுகளை முன்வைத்தார்.
- தொடக்கத்தில் எதுவுமில்லை, எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார். அவரே இவ்வுலகத்தைப் படைத்தார்.
- அவர் ஒருவரே உண்மையின், எல்லையற்ற ஞானத்தின், நற்பண்பின், சக்தியின் கடவுளாவார். அவரே நிலையானவர், எங்கும் நிறைந்திருப்பவர், அவருக்கிணையாருமில்லை.
- நம்முடைய வீடுபேறு, இப்பிறவியிலும் அடுத்த பிறவியிலும் அவரை நம்புபவரையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது.
- அவரை நம்புவதென்பது, அவரை நேசிப்பதிலும் அவர் விருப்பத்தைச் செயல்படுத்துவதிலும் அடங்கியுள்ளது.
(இ) கேசவ் சந்திர சென்னும் இந்தியாவின் பிரம்ம சமாஜமும்
- தேவேந்திரநாத் மிதவாதச் சீர்திருத்தவாதியாவார். ஆனால் சமாஜத்தில் அவருடன் பணியாற்றிய இளையவர்கள் விரைவான மாற்றங்களையே விரும்பினர். அவர்களுள் மிக முக்கியமானவரான கேசவ் சந்திரசென் (1838-84),1857 இல் சபையில் இணைந்தார்.
- 1866இல் பிரம்மசமாஜத்தின் உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டதால் கேசவ் சந்திர சென் சமாஜத்திலிருந்து விலகி புதிய அமைப்பான “இந்திய பிரம்ம சமாஜத்தை” உருவாக்கினார். இதன் பின்னர் தேவேந்திரநாத் தாகூரின் அமைப்பு ‘ஆதி பிரம்ம சமாஜம்’ என அழைக்கப்படலாயிற்று.
- குழந்தைத் திருமணத்தை சமாஜம் கண்டனம் செய்திருந்த போதும் அதற்கு மாறாக கேசவ் சந்திர சென் தனது பதினான்கு வயது மகளை இந்திய இளவரசன் ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்தபோது, குழந்தைத் திருமணத்தை எதிர்த்தோர் இந்திய பிரம்ம சமாஜத்திலிருந்து விலகி ‘சாதாரண சமாஜ்’ எனும் அமைப்பை நிறுவினர்.
(ஈ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
- வங்காளத்தைச் சேர்ந்த மற்றொரு முதன்மையான சீர்திருத்தவாதி ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் (1820-1891) ஆவார்.
- இராஜா ராம் மோகன் ராயும் மற்றவர்களும் சமூகத்தைத் திருத்துவதற்கு மேலைநாட்டுப் பகுத்தறிவுச் சிந்தனைகளின் துணையை நாடிய போது வித்யாசாகர் இந்து மறை நூல்களே முற்போக்கானவை என வாதிட்டார். விதவைகளை எரிப்பதும் விதவை மறுமணத்தைத் தடை செய்வதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதற்கு மறை நூல்களிலிருந்தே சான்றுகளை முன்வைத்தார். அவர் தனது கருத்துக்களுக்கு ஆதரவான வாதங்களைக் கொண்ட சிறுநூல்களை வெளியிட்டார்.
- அவர் நவீன வங்காள உரைநடையின் முன்னோடியாவார். பெண்கல்வியை மேம்படுத்துவதில் முக்கியப்பங்காற்றிய அவர் பெண்களுக்கான பள்ளிகள் நிறுவப்பட உதவிகள் செய்தார். இந்து சமூகத்தில் குழந்தைப் பருவத்திலேயே விதவைகளான சிறுமிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவே தனது முழுவாழ்வையும் அர்ப்பணித்தார். பண்டித ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் தலைமையேற்ற இயக்கத்தின் விளைவாய் 1856 இல் மறுமண சீர்திருத்தச் சட்டம் (விதவைகள் மறுமணச் சட்டம்) இயற்றப்பட்டது. இச்சட்டம் குழந்தை விதவைகளின் நிலையை மேம்படுத்துவதையும் நிரந்தரமாக விதவையாய் இருக்கவேண்டிய ஆபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
- 1860 இல் முதன்முறையாக திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்டது. அப்பெருமை ஈஸ்வர் சந்திர வித்யாசாகரையேச் சாரும். திருமணத்திற்கான வயது பத்து என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அது 1891இல் பன்னிரெண்டாகவும், 1925இல் பதிமூன்றாகவும் உயர்த்தப்பட்டது. ஆனால் கவலைக்குரிய விதத்தில் திருமண வயது ஒப்புதல் கமிட்டி (1929) கூறியபடி இச்சட்டம் காகிதத்தில் மட்டுமேயிருந்தது. நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஒருசில படித்த மனிதர்களுமே அதனைப் பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர்.
(உ) பிரார்த்தனை சமாஜம்
- மகாராஷ்டிரப் பகுதியானது சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு கிடைக்கப்பெற்ற மற்றொரு பகுதியாகும். பிரம்ம சமாஜத்துக்கிணையாக பம்பாயில் 1867இல் நிறுவப்பட்ட அமைப்பே பிரார்த்தனை சமாஜம். இதனை நிறுவியவர் ஆத்மராம் பாண்டுரங் (1825-1898) ஆவார்.
- இந்த சமாஜத்தின் இரண்டு மேன்மைமிக்க உறுப்பினர்கள் R.C. பண்டர்கர், நீதிபதி மகாதேவ் கோவிந்த் ரானடே ஆகிய இருவருமாவர். இவ்விருவரும் சாதிமறுப்பு, சம்பந்தி, சாதி மறுப்புத் திருமணம், விதவை மறுமணம், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் போன்ற நடவடிக்கைகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாவர். மகாதேவ் கோவிந்த் ரானடே (1842-1901) விதவை மறுமணச் சங்கம் (1861), புனே சர்வஜனிக் சபா (1870), தக்காணக் கல்விக்கழகம் (1884) ஆகிய அமைப்புகளை நிறுவினார்.
இந்து புத்தெழுச்சி இயக்கம்
(அ) சுவாமி தயானந்த சரஸ்வதி மற்றும் ஆரிய சமாஜம், 1875
- பஞ்சாபில், ஆரிய சமாஜம் சீர்திருத்த இயக்கங்களுக்குத் தலைமையேற்றது. இது 1875இல் நிறுவப்பட்டது, இவ்வமைப்பை நிறுவியவர் மேலை கங்கைச் சமவெளியில் அலைந்து திரிந்து கொண்டிருந்த சுவாமி தயானந்த சரஸ்வதி (1824-83) ஆவார்.
- சுவாமி தயானந்தர் பின்னர் தனது கருத்துகளைப் போதிப்பதற்காகப் பஞ்சாபில் தங்கினார். அவருடைய நூலான ‘சத்யார்த்த பிரகாஷ்’ பெரும்பாலோரால் படிக்கப்பட்டது. குழந்தைத் திருமணம், விதவை மறுமணத்திற்கு மறுப்பு போன்ற பழக்கங்களும் அயல்நாடு சென்றால் தீட்டு என்று சொல்லப்படுதலும் மறைநூல்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அறிவித்தார். அவர் முன்வைத்த நேர்மறையான கொள்கைகள் கட்டுப்பாடான ஒரு கடவுள் வழிபாடு, உருவ வழிபாட்டை நிராகரித்தல், பிராமணர் மேலாதிக்கம் செலுத்தும் சடங்குகள், சமூக நடைமுறைகள் ஆகியவற்றை மறுத்தல் என்பனவாகும். ஆரிய சமாஜம் இந்து மதத்திலிருந்த மூடநம்பிக்கைகளை மறுத்தது. அதனுடைய முழக்கம் ‘வேதங்களுக்குத் திரும்புவோம்’ என்பதாகும்.
- ஆரிய சமாஜம் பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த மதமாற்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. அதன் முக்கியக் குறிக்கோள் ‘எதிர்மத மாற்றம் என்பதாகும்.’ ஏற்கனவே இஸ்லாமுக்கும் கிறித்தவ மதத்திற்கும் மாறிய இந்துக்களை மீண்டும் இந்துக்களாக மாற்ற ‘சுத்தி (Suddhi)' எனும் சுத்திகரிப்புச் சடங்கை சமாஜம் வகுத்துக்கொடுத்தது.
- ஆரிய சமாஜம் சமூக சீர்திருத்தக்களத்திலும் கல்வியைப் பரப்பும் பணியிலும் முக்கிய சாதனைகள் புரிந்தது. சமாஜம் பல தயானந்தா ஆங்கில வேதப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் உருவாக்கியது.
(ஆ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
- கல்கத்தாவுக்கு அருகேயிருந்த தட்சிணேசுவர
- ம் என்னும் ஊரைச்சார்ந்த எளிய அர்ச்சகரான இராமகிருஷ்ண பரமஹம்சர் (1836-1886) பஜனைப்பாடல்களை மனமுருகிப் பாடுவதைப்போன்ற வழிமுறைகள் பேரின்ப நிலையை அடைந்து அந்நிலையில் ஆன்மரீதியாக கடவுளோடு ஒன்றிணைவதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
- புனிதத்தாயான கடவுள் காளியின் தீவிர பக்தரான அவர் அக்கடவுளின் திருவிளையாடல்கள் முடிவற்றவை என அறிவித்தார். அவருடைய கருத்தின்படி அனைத்து மதங்களும் உலகளாவிய, எல்லோருக்குமான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன.
- அவற்றைப் பின்பற்றினால் அவை வீடுபேற்றுக்கு இட்டுச்செல்லும். ‘ஜீவன்’ என்பதே ‘சிவன்’ எனவும் அவர் கூறினார் (வாழ்கின்ற அனைத்து உயிர்களும் இறைவனே). மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவையாகும் என்றார்.
இராமகிருஷ்ணா மிஷன்
- இராமகிருஷ்ணருடைய முதன்மையான சாதனையே, பிரம்மசமாஜம் போன்ற சீர்திருத்த அமைப்புகள் முன்வைத்தப் பகுத்தறிவுக் கருத்துகளின் பால் அதிருப்தியுற்ற கல்வியறிவு பெற்ற இளைஞர்களைத் தன்பால் ஈர்த்ததுதான்.
- 1886இல் அவர் இயற்கை எய்திய பின்னர் அவருடைய சீடர்கள் தங்களை ஒரு மதம் சார்ந்த சமூகமாக அமைத்துக்கொண்டு இராமகிருஷ்ணரையும் அவரின் போதனைகளையும் இந்தியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் பரப்பும் பெரும்பணியை மேற்கொண்டனர். இப்பெரும்பணியின் பின்புலமாய் இருந்தவர் சுவாமி விவேகானந்தர்.
- கிறித்தவசமயப் பரப்பு நிறுவனங்களின் நிர்வாகக் கட்டமைப்பைப் பின்பற்றி விவேகானந்தர் இராமகிருஷ்ணா மிஷனை நிறுவினார். இராமகிருஷ்ணா மிஷன் சமயச் செயல்பாடுகளோடு மட்டும் தனதுப்பணிகளை நிறுத்திக்கொள்ளவில்லை. மக்களுக்குக் கல்வியறிவு வழங்குவது, மருத்துவ உதவி, இயற்கைச் சீற்றங்களின் போது நிவாரணப்பணிகளை மேற்கொள்வது போன்ற சமூகப்பணிகளிலும் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.
(இ) சுவாமி விவேகானந்தர்
- பின்னாளில் சுவாமி விவேகானந்தர் என்றழைக்கப்பட்ட நரேந்திரநாத் தத்தா (1863-1902) இராமகிருஷ்ண பரமஹம்சருடைய முதன்மைச் சீடராவார். படித்த இளைஞரான அவர் இராமகிருஷ்ணரின் கருத்துகளால் கவரப்பட்டார். மரபுசார்ந்த தத்துவ நிலைப்பாடுகளில் மனநிறைவு பெறாத அவர், நடைமுறை வேதாந்தமான மனிதகுலத்திற்குத் தொண்டுசெய்தல் எனும் கோட்பாட்டைப் பரிந்துரைத்தார்.
- மதத்தோடு தொடர்புடையது எனும் ஒரே காரணத்திற்காக அனைத்து நிறுவனங்களையும் பாதுகாக்கும் மனப்பாங்கினை அவர் கண்டனம் செய்தார். பண்பாட்டுத் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அவர் இந்து சமூகத்திற்குப் புத்துயிரளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
- அவருடைய சிந்தனைகள், பொருள் உற்பத்தியில் மேலைநாடுகள் செய்திருந்த சாதனைகளைக் கண்டு தாழ்வுமனப்பான்மை கொண்டிருந்த இந்தியர்களுக்கு தன்னம்பிக்கையூட்டுவதாய் அமைந்தது. 1893இல் சிக்காகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்து சமயம் பற்றியும் பக்தி மார்க்கத் தத்துவம் குறித்தும் அவராற்றிய சொற்பொழிவுகள் அவருக்குப் பெரும்புகழ் சேர்த்தது.
- இந்து சமயச் சடங்குகளில் கலந்துகொள்ளக்கூடாதென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களும் அதுபோன்ற சடங்குகளில் கலந்துகொள்ளக் கட்டாயம் அனுமதிக்கப்படவேண்டும் என்றார்.
- விவேகானந்தரின் செயலாக்கமிக்க கருத்துகள் மேற்கத்தியக் கல்வி பயின்ற வங்காள இளைஞர்களிடையே அரசியல் மாற்றங்களுக்கான நாட்டத்தை ஏற்படுத்தியது. வங்கப்பிரிவினையைத் தொடர்ந்து நடைபெற்ற சுதேசி இயக்கத்தின் போது இளைஞர்களில் பலர் விவேகானந்தரால் ஊக்கம் பெற்றனர்.
(ஈ) பிரம்மஞான சபை
- மேடம் H.P. பிளாவட்ஸ்கி (1831-1891) மற்றும் கர்னல் H.S. ஆல்காட் (1832-1907) ஆகியோரால் பிரம்மஞானசபை 1875இல் அமெரிக்காவில் நிறுவப்பட்டது. இவ்வமைப்புப் பின்னர் 1886இல் இந்தியாவில் சென்னை அடையாறுக்கு மாற்றப்பட்டது.
- பிரம்மஞானசபை இந்து செவ்வியல் நூல்களைக் குறிப்பாக உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியவற்றைப் படிப்பதற்கு உற்சாகமூட்டியது. இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் பிரம்மஞானசபை முக்கியப் பங்காற்றியது.
- இந்து மறை நூல்களின் மீது மேலைநாட்டவர் காட்டிய ஆர்வம், படித்த இந்தியர்களிடையே தங்கள் பாரம்பரியம், பண்பாடு குறித்த அளப்பரியப் பெருமிதத்தை ஏற்படுத்தியது.
அன்னிபெசன்ட்டின் பங்களிப்பு
- ஆல்காட்டின் மறைவுக்குப் பின்னர் இவ்வமைப்பின் தலைவராக அன்னிபெசன்ட் (1847-1933) தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வியக்கம் மேலும் செல்வாக்குப் பெற்றது.
- இந்திய தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்ற அவர் தன்னாட்சி இயக்கச் சங்கத்தை அமைத்து அயர்லாந்திற்கு வழங்கப்பட்டதைப் போல இந்தியாவிற்கும் தன்னாட்சி வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
- அன்னிபெசன்ட் பிரம்மஞானக் கருத்துக்களைத் தன்னுடைய நியூ இந்தியா (New India), காமன்வீல் (Commonweal) எனும் செய்தித்தாள்களின் மூலம் பரப்பினார்.
சாதி எதிர்ப்பு இயக்கங்கள்
(அ) ஜோதிபா பூலே
- ஜோதிபா கோவிந்தராவ் பூலே 1827இல் மகாராஷ்டிராவில் பிறந்தார். அவர் 1852ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் திறந்தார்.
- சத்திய சோதக் சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம், Truth Seekers Society) எனும் அமைப்பை, பிராமணரல்லாத மக்களும் சுயமரியாதையோடும், குறிக்கோளோடும் வாழத் தூண்டுவதற்காய் நிறுவினார்.
- பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார். ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவித்திரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். ஜோதிபா பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும் விதவைகளுக்கென காப்பகங்களையும் உருவாக்கினார். அவர் எழுதிய நூலான ‘குலாம்கிரி’ (அடிமைத்தனம்) அவருடையப் பெரும்பாலான தீவிரக் கருத்துக்களைச் சுருக்கிக் கூறுகிறது.
(ஆ) நாராயண குரு
- கேரளாவில் ஏழைப் பெற்றோர்க்கு மகனாகப் பிறந்த நாராயண குரு (1854-1928) மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் அறிஞராகவும் கவிஞராகவும் திகழ்ந்தார்.
- பயங்கரமான சாதிக் கொடுமைகளையும், ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துயரங்களையும் கண்டு மனம் வெதும்பிய அவர் அம்மக்களின் மேம்பாட்டிற்காகத் தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார்.
- அவர்களின் மேம்பாட்டிற்குப் பணியாற்றுவதற்காக ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் எனும் அமைப்பை உருவாக்கினார்.
- அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலைக் கட்டிய அவர் அதை அனைவருக்கும் அர்ப்பணித்தார். குமாரன் ஆசான், டாக்டர் பால்பு போன்ற சிந்தனையாளர்களும் எழுத்தாளார்களும் இவருடைய சிந்தனைகளால் தூண்டப்பெற்று இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றனர்.
(இ) அய்யன்காளி
- அய்யன்காளி 1863இல் திருவனந்தபுரத்தல் உள்ள வெங்கனூரில் பிறந்தார். அப்போது அப்பகுதி திருவிதாங்கூர் அரசரின் ஆட்சிப்பகுதியாகும்.
- குழந்தையாய் இருக்கும் போதே அவர் சந்தித்த சாதியப்பாகுபாடு அவரை சாதி எதிர்ப்பியக்கத்தின் தலைவராக மாற்றியது.
- பின்னர் அவர் பொது இடங்களுக்குச் செல்லுதல், பள்ளிகளில் கல்வி கற்க இடம் பெறுதல் போன்ற அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினார்.
- ஸ்ரீநாராயணகுருவால் ஊக்கம் பெற்ற அய்யன்காளி 1907இல் சாது ஜன பரிபாலன சங்கம் (ஏழை மக்கள் பாதுகாப்புச் சங்கம் - Association for the protection of the Poor) எனும் அமைப்பை நிறுவினார்.
இஸ்லாமிய சீர்திருத்தங்கள்
- 1857ஆம் ஆண்டுப் பெரும்புரட்சி ஒடுக்கப்பட்ட பின்னர் இந்திய முஸ்லீம்கள் மேற்கத்தியப் பண்பாட்டைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்தனர்.
- மேற்கத்தியக் கல்வி, பண்பாடு, மேற்கத்திய சிந்தனைகள் ஆகியவை தங்கள் மதத்திற்கு ஆபத்தாய் அமையுமோ என அச்சமூகம் அஞ்சியது. ஆகையால் முஸ்லீம்களில் ஒரு சிறிய பிரிவினரே மேற்கத்தியக் கல்வி பயில முன்வந்தனர்.
சர் சையத் அகமத்கான்
- டெல்லியில் உயர்குடி முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த சையத் அகமத்கான் படிப்பறிவின்மையே குறிப்பாக, நவீன கல்வியறிவின்மையே இஸ்லாமியர்களுக்குப் பெருந்தீங்கு விளைவித்து, அவர்களைக் கீழ்நிலையில் வைத்துவிட்டது எனக்கருதினார். மேலைநாட்டு அறிவியலையும், அரசுப்பணிகளையும் ஏற்றுக்கொள்ளும்படி அவர் இஸ்லாமியர்களை வற்புறுத்தினார். அறிவியல் கழகமொன்றை நிறுவிய அவர் ஆங்கில நூல்களைக் குறிப்பாக அறிவியல் நூல்களை உருதுமொழியில் மொழியாக்கம் செய்தார்.
- மேலெழுந்துவரும் தேசிய இயக்கத்தில் இணைவதைக் காட்டிலும் ஆங்கில அரசுடன் நல்லுறவு மேற்கொண்டால் இஸ்லாமியர் நலன்கள் பேணப்படும் என அவர் நம்பினார். எனவே அவர் இஸ்லாமியருக்கு ஆங்கிலக்கல்வியைப் பயிலும் படியும் அதில் கவனம் செலுத்தும்படியும் அறிவுரை கூறினார்.
அலிகார் இயக்கம்
- சர் சையத் அகமத்கான் 1875ஆம் ஆண்டு அலிகார் நகரில் அலிகார் முகமதிய ஆங்கிலோ - ஓரியண்ட ல் கல்லூரியை (Aligarh Mohammedan Anglo-Oriental College) நிறுவினார்.
- ‘அலிகார் இயக்கம்’ எனப்பட்ட அவரது இயக்கம் இக்கல்லூரியை மையப்படுத்தி நடைபெற்றதால் அப்பெயரைப் பெற்றது.
- இந்திய முஸ்லீம்களின் கல்விவரலாற்றில் இக்கல்லூரி ஒரு மைல் கல்லாகும். 1920இல் இக்கல்லூரி தரம் உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகமானது.
தியோபந்த் இயக்கம்
- தியோபந்த் இயக்கம் ஒரு மீட்பியக்கமாகும். இவ்வியக்கம் பழமைவாத முஸ்லீம் உலேமாக்களால், தொடங்கப்பெற்றது.
- இவ்வுலேமாக்கள் முகமது குவாசிம் நானோதவி (1832-1880), ரஷித் அகமத் கங்கோத்ரி (1826-1905) ஆகியோரின் தலைமையில் 1866 இல் உத்தரப்பிரதேசத்தில் சகரன்பூரில் ஒரு பள்ளியை நிறுவினர்.
- இப்பள்ளியின் பாடத்திட்டம் ஆங்கிலக் கல்வியையும் மேலைநாட்டுப் பண்பாட்டையும் புறக்கணித்தது. இப்பள்ளியில் உண்மையான இஸ்லாமிய மதம் கற்றுத்தரப்பட்டது. இதன் நோக்கம் இஸ்லாமிய சமூகத்தின் ஒழுக்கத்தையும் மதத்தையும் மீட்டெடுப்பதாய் அமைந்தது.
- மௌலானா முகமத்-உல்-ஹசன் தியோபந்தின் புதிய தலைவரானார். அவரின் தலைமையில் இயங்கிய ஜமைத் - உல் - உலேமா (இறையியலாளர்களின் அவை) ஹசனுடைய கருத்துக்களான, இந்திய ஒற்றுமை எனும் ஒட்டுமொத்தச் சூழலில் முஸ்லீம்களின் அரசியல், சமய உரிமைகளின் பாதுகாப்பு என்பது குறித்த உறுதியான வடிவத்தை முன்வைத்தது.
பார்சி சீர்திருத்த இயக்கம்
- பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பார்சி சீர்திருத்த இயக்கம் பம்பாயில் தொடங்கப்பட்டது. 1851இல் பர்துன்ஜி நௌரோஜி என்பார் "ரஹ்னுமாய் மஜ்தயாஸ்னன் சபா" (பார்சிகளின் சீர்திருத்தச் சங்கம்) எனும் அமைப்பை ஏற்படுத்தினார்.
- ராஸ்ட் கோப்தார் (உண்மை விளம்பி) என்பதே அதன் தாரக மந்திரமாக இருந்தது. பெர்ரம்ஜி மல்பாரி என்பார் குழந்தைத் திருமணப் பழக்கத்திற்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டுமென இயக்கம் நடத்தினார்.
- இச்சமூகம் பெரோசா மேத்தா, தீன்சா வாச்சா போன்ற சிறந்த தலைவர்களை உருவாக்கியது. அவர்கள் தொடக்க கால காங்கிரசில் முக்கியப் பங்கு பணியாற்றினர்.
சீக்கியர் சீர்திருத்த இயக்கம் (நிரங்கரிகள், நாம்தாரிகள்)
- பஞ்சாப் சீக்கியச் சமூகத்திலும் சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நிரங்கரி இயக்கத்தின் நிறுவனரான பாபா தயாள்தாஸ் நிரங்கரி (உருவமற்ற) இறைவனை வழிபட வேண்டுமென வலியுறுத்தினார்.
- சிலைவழிபாடு, சிலைவழிபாட்டோடு தொடர்புடைய சடங்குகள் ஆகியவற்றை மறுத்தல், குருநானக்கின் தலைமையையும் ஆதிகிரந்தத்தையும் மதித்தல் ஆகியன அவருடைய போதனைகளின் சாரமாக விளங்கின. மது அருந்துவதையும், மாமிசம் உண்பதையும் கைவிடும்படி வலியுறுத்திக் கூறினார்.
- பாபாராம் சிங் என்பவரால் தொடங்கப் பெற்ற நாம்தாரி இயக்கம் சீக்கியரிடையே நடைபெற்ற மற்றுமொரு சமூக, சமயச் சீர்திருத்த இயக்கமாகும். நாம்தாரி இயக்கம் சீக்கியர்களின் அடையாளங்களை (கிர்பான் - வாளைத் தவிர) அணிய வற்புறுத்தியது.
- வாளுக்குப் பதிலாகத் தனது சீடர்களை லத்தியை வைத்துக் கொள்ளும்படி ராம்சிங் கூறினார். இவ்வியக்கம் ஆணும் பெண்ணும் சமம் எனக் கருதியது. விதவை மறுமணத்தை ஆதரித்தது. வரதட்சணை முறையையும் குழந்தைத் திருமணத்தையும் தடை செய்தது.
- ஆரிய சமாஜம், கிறித்தவ சமயப்பரப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்த ஒரு சூழலில் சிங்சபா எனும் அமைப்பு அமிர்தசரசில் நிறுவப்பட்டது.
- சீக்கிய மதத்தின் புனிதத்தை மீட்டெடுப்பதே சபாவின் முக்கியக் குறிக்கோளாக அமைந்தது. ஆங்கிலேயரின் ஆதரவுடன் அமிர்தரஸில் சீக்கியர்களுக்கென கால்சா கல்லூரி உருவாக்கப்பட்டது. சிங்சபாவே அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பாகும்.
தமிழ் நாட்டின் சமூக சீர்திருத்தவாதிகள்:
(அ) இராமலிங்க சுவாமிகள்
- வள்ளலார் எனப் பிரபலமாக அறியப்பட்ட, இராமலிங்க சுவாமிகள் அல்லது இராமலிங்க அடிகள் (1823 - 1874) சிதம்பரத்திற்கு அருகேயுள்ள மருதூர் எனும் கிராமத்தில் பிறந்தார்.
- தந்தையாரின் மறைவுக்குப்பின்னர் அவரது குடும்பம் சென்னையிலிருந்த அவருடைய சகோதரரின் இல்லத்திற்குக் குடிபெயர்ந்தது. முறையான கல்வியை அவர் பெற்றிராவிட்டாலும் அளப்பரியப் புலமையைப் பெற்றிருந்தார்.
- உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்கவேண்டுமென்றார். “துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்" எனும் கருத்தினை முன்வைத்தார்.
- அவர் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடிகொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடமும் காட்டினார். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார். 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார். பின்னர் அது சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- 1866இல் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தைக் கணக்கில் கொண்டு 1867இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார். அவர் இயற்றிய ஏராளமான பாடல்கள் திருவருட்பா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டன.
- நாட்டில் நிலவிய பசிக்கும் வறுமைக்கும் இராமலிங்கர் சாட்சியாய் இருந்தார். "பசியினால் இளைத்துப்போன, மிகவும் சோர்வுற்ற ஏழைமக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லுவதை நான் பார்த்தேன். இருந்தும் அவர்களின் பசி போக்கப்படவில்லை என் இதயம் கடுமையாக வேதனைப்படுகிறது. கடுமையான நோயினால் வேதனைப்படுபவர்களை எனக்கு முன்பாகப் பார்க்கிறேன். எனது இதயம் நடுங்குகிறது. ஏழைகளாகவும் இணையில்லா நன்மதிப்பையும் களைப்படைந்த இதயத்தையும் கொண்டுள்ள அம்மக்களை நான் பார்க்கிறேன், நான் பலவீனம் அடைகிறேன்."
(ஆ) அயோத்தி தாசர்
- பண்டிதர் அயோத்தி தாசர் (1845-1914) ஒரு தீவிரத் தமிழ் அறிஞரும் சித்த மருத்துவரும் பத்திரிக்கையாளரும் சமூக அரசியல் செயல்பாட்டாளரும் ஆவார்.
- சென்னையில் பிறந்த அவர் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.
- சரளமாகப் பேசக் கூடியவர். சமூகநீதிக்காக இயக்கம் நடத்திய அவர், சாதியத்தின் கொடிய பிடியிலிருந்து ஒடுக்கப்பட்டோர் விடுதலைபெறப் பாடுபட்டார். சாதிகளற்ற அடையாளத்தை நிறுவமுயன்ற அவர் சாதிய மேலாதிக்கத்திற்கும் தீண்டாமைக்கும் எதிராகக் கண்டனக்குரல் எழுப்பினார்.
- கல்வியை வலிமை பெறுவதற்கான கருவியாகக் கருதிய அவர் தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கென பல பள்ளிகள் உருவாக்கப்படுவதற்கு உந்து சக்தியாகத் திகழ்ந்தார்.
- ஒடுக்கப்பட்டோரின் கோவில் நுழைவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவதற்காகப் பண்டிதர் அயோத்திதாசர் அத்வைதானந்தா சபா எனும் அமைப்பை நிறுவினார். 1882இல் அயோத்தி தாசரும் ஜான் ரத்தினம் என்பவரும் "திராவிடர்க் கழகம்" எனும் அமைப்பை நிறுவினர். மேலும் 1885இல் "திராவிட பாண்டியன் எனும் இதழையும் தொடங்கினார். "திராவிட மகாஜனசபை" என்ற அமைப்பை 1891இல் நிறுவிய அவர் அவ்வமைப்பின் முதல் மாநாட்டை நீலகிரியில் நடத்தினார்.
- பிரம்மஞான சபையை நிறுவியவர்களில் ஒருவரான கர்னல் H.S. ஆல்காட் ஏற்படுத்தியத் தாக்கத்தின் விளைவாக 1898இல் இலங்கை சென்ற அவர் அங்கே பௌத்தத்தைத் தழுவினார். அதே ஆண்டில் பௌத்த மதத்தின் வழியே பகுத்தறிவின் அடிப்படையிலான சமயத்தத்துவத்தைக் கட்டமைப்பதற்காக “சாக்கிய பௌத்த சங்கம்” எனும் அமைப்பை சென்னையில் நிறுவினார்.
- 1907இல் “ஒரு பைசா தமிழன்” என்ற பெயரில் ஒரு வாராந்திரப் பத்திரிக்கையைத் தொடங்கி அதை 1914இல் அவர் காலமாகும் வரையிலும் தொடர்ந்து வெளியிட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்தப் பெண் தலைவர்களின் பங்களிப்பு
சீர்திருத்தம் என்பது பல நூற்றாண்டுகளாக சமூகத்தில் ஆழமாக வேரூன்றிய சில சமூக நடைமுறைகளை ஒழிப்பதைக் குறிக்கிறது.
இந்த நடைமுறைகள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் இடையூறாக இருக்கின்றன.
சமுதாயச் சீர்திருத்தங்களை அடைய ஆண்கள் மட்டுமல்ல நிறையப் பெண்களும் பாடுபட்டுள்ளனர்.
அத்தகையப் பெண் சீர்திருத்தவாதிகளில் குறிப்பிடத் தகுந்த சிலர் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, மருத்துவர் எஸ்.தர்மாம்பாள் மற்றும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஆகியோராவர்.
மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி (1886-1968)
- சமுதாய மாற்றத்தில் தமிழகம் முன்னணியில் இருந்தது.தமிழ்நாட்டின் சிறந்த கலாச்சார பாரம்பரியத்தில் இருக்கும் சில கருப்பு புள்ளிகள் பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டு அவை அகற்றப் பட்டன.அத்தகைய ஒரு கரும்புள்ளி 'தேவதாசி' அமைப்பு ஆகும்.
- இந்த முறைக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிய முக்கியமான தலைவர்களில் ஒருவர் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி.மருத்துவர். முத்துலட்சுமி ரெட்டி 1886 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார்.இந்தியாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் இவர் ஆவார்.
- 1923 ஆம் ஆண்டில் அவரது சகோதரி புற்றுநோயால் இறந்தார். அன்று அவர் புற்றுநோயை அழிக்க சபதம் எடுத்தார். எனவே, அவர் 1949 ஆம் ஆண்டில் புற்றுநோய் நிவாரண மருத்துவமனையைத் தொடங்கினார்.சென்னை அடையாரில் உள்ள புற்றுநோய் நிறுவனம் அவரது அரும்பெரும் முயற்சியால் தொடங்கப்பட்டது.முதல் பாரதப் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் அந்த நிறுவனத்திற்கு அடித்தளம் அமைத்தார்.அவர் மருத்துவத்தில் மட்டுமல்ல, அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தங்களிலும் ஆர்வமாக இருந்தார்.
- கொடூரமான நடைமுறையான தேவதாசி முறையை தமிழ்நாட்டிலிருந்து அகற்றுவதற்காகத் தன் வாழ்நாட்களை அவர் அதற்காக அர்ப்பணித்தார்.தேவதாசி அமைப்புக்கு எதிராகத் தீவிரமாக பிரச்சாரம் செய்ததற்காக காந்திஜியால் அவர் தனிப்பட்ட முறையில் பாராட்டப்பட்டார்.
- தேவதாசி அமைப்புக்கு எதிரானப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டும் விதமாக அவர் 1927 ஆம் ஆண்டு தமிழக சட்ட மேலவைக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
- இதன் விளைவாக, 1947 ஆம் ஆண்டில் ஓ. பி. ராமசாமி ரெட்டியார் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் இருந்த மதராஸ் மாகாண அரசு தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டத்தை இயற்றியது.
- மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து 1930 ஆம் ஆண்டில் அவர் மதராஸ் சட்டமன்றத்தில் இருந்து பதவி விலகினார். 1930 ஆம் ஆண்டில், அவர் புனேவில் அகில இந்திய மகளிர் மாநாட்டை ஏற்பாடு செய்தார்.அவர் 1933 முதல் 1947 ஆம் ஆண்டு வரை இந்தியப் பெண்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவராக இருந்தார்.மதராஸில் உள்ள சாந்தோமில் (தற்போது அடையாரில்) அவ்வை இல்லம் என்ற பெயரில் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தையும் தொடங்கியுள்ளார்.
- மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, தனது அர்ப்பணிப்பு மற்றும் அயராத உழைப்பின் மூலம் கடின உழைப்பு ஒருபோதும் தோல்வியடையாது என்றக் கருத்தை உலகிற்கு நிரூபித்துள்ளார்.அவர் தனது 82 வது வயதில் 1968 ஆம் ஆண்டில் காலமானார்.
- இவர் தனது பெயருக்கு முன்னால் பல்வேறு துறைகளில் முதலிடம் என்ற சிறப்பினைக் கொண்டிருந்தார்.மகாராஜா ஆண்கள் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட முதல் பெண் மாணவி.
- 1907 ஆம் ஆண்டில் மதராஸ் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப் பட்ட முதல் மற்றும் ஒரே பெண் மாணவர்.அரசு மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனையில் பயிற்சி மாணவராக பணி செய்த முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணர்.பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்.
- 1954 ஆம் ஆண்டில் மாநில சமூக நல ஆலோசனைக் குழுவின் முதல் தலைவர்.தமிழகச் சட்டமேலவையின் முதல் பெண் துணைத் தலைவர்.1937 ஆம் ஆண்டில் மதராஸ் மாநகராட்சிக் குழுவில் மேயருக்கு அடுத்த நிலையில் பணியாற்றிய முதல் பெண் உறுப்பினர்.
மருத்துவர் எஸ்.தர்மாம்பாள் (1890-1959)
- செல்வம், அதிகாரம், கல்வி மற்றும் தகுதிநிலை காரணமாக அல்லாமல், மாறாக நாட்டிற்காக ஆற்றிய அர்ப்பணிப்பு காரணமாக பலர் பிரபலமடைந்துள்ளனர்.
- மனிதநேயம் மற்றும் நல்லெண்ணம் மூலம் சேவை செய்ய முடியும் என்பதை நிரூபித்த அத்தகைய சீர்திருத்தவாதிகளுள் ஒருவர் மருத்துவர் எஸ்.தர்மாம்பாள் ஆவார்.சமூக சேவையில் அதிக ஈடுபாடுகளைக் கொண்டிருந்த அவர் சித்த மருத்துவம் பயின்றார். அதன்பின் அவர் சென்னையில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார்.பின்னர் அவர் பொது சேவையில் ஈடுபட்டார்.
- மருத்துவர் எஸ். தர்மாம்பாள் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள கருந்தட்டான்குடியில் பிறந்தார்.பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இவர், விதவை மறுமணம், சாதிக் கலப்பு திருமணம் மற்றும் பெண் கல்வி ஆகியவற்றைச் செயல்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் இசையின் வளர்ச்சியிலும் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.
- அவர் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் (1937-40) பங்கேற்று பல முறை சிறைக்குச் சென்றார்.1940 ஆம் ஆண்டு வரை தமிழ் ஆசிரியர்களுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. மற்ற ஆசிரியர்களைப் போல அவர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, அவர் 'இழவு வாரம்' என்ற ஒரு போராட்டத்தைத் தொடங்கினார்.இதன் விளைவாக கல்வி அமைச்சர் திரு. அவிநாசிலிங்கம் செட்டியார் மற்ற ஆசிரியர்களைப் போலவே தமிழ் ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டுமென்று கட்டளையிட்டார்.
- மாணவர்கள் தமிழில் தங்கள் அறிவை மேம்படுத்தவும், தேர்வுகளில் தமிழ் பாடத்தில் நல்ல மதிப்பெண்கள் பெறவும் "சென்னை மாணவர் மன்றம்" நிறுவப்பட்டது.அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மன்றத்தின் தலைவராக இருந்தார்.தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கான அவரது சேவையைப் பாராட்டி 1951 ஆம் ஆண்டில் அவருக்கு "வீரத் தமிழன்னை" என்ற பட்டம் வழங்கப்பட்டது.
- முற்போக்கு மகளிர் சங்கத்தின் 1938 ஆம் ஆண்டு மாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவரான இவர், அந்த மாநாட்டில் ஈ.வெ.ராமசாமிக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கினார்.மேலும் அவர் எம். கே. தியாகராஜ பாகவதருக்கு "ஏழிசை மன்னர்" என்ற பட்டத்தையும் வழங்கினார்.
- தனது வாழ்க்கை முழுவதையும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் மக்களுக்காகத் தியாகம் செய்து அர்ப்பணித்த அவர் தனது 69 வயதில் 1959 ஆம் ஆண்டில் இறந்தார்.
மூவலூர் ராமாமிர்தம் (1883-1962)
- இவர் ஒரு தமிழ் சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர் மற்றும் திராவிட இயக்கத்தின் அரசியல் ஆர்வலர் ஆவார். இவர் மதராஸ் மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிப்பதற்காகப் பணியாற்றினார்.
- இவர் திருவாரூரில் பிறந்தார். மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மூவலூர் கிராமத்தில் வளர்க்கப்பட்டார். எனவே, இவர் பொதுவாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் என்று அழைக்கப்பட்டார்.1936 ஆம் ஆண்டில் வெளியான இவரது சுயசரிதப் புதினமான தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர், தேவதாசிகளின் அவல நிலையை அம்பலப்படுத்தியது.
- முதலில் தேசியக் கட்சியான இந்திய தேசியக் காங்கிரஸின் ஆதரவாளராக இருந்த இவர், பெரியார் 1925 ஆம் ஆண்டில் காங்கிரஸை விட்டு வெளியேறிய பின்னர், பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் உறுப்பினரானார்.1930 ஆம் ஆண்டில், மதராஸ் மாகாணத்தில் தேவதாசி முறையை சட்டத்தின் மூலம் ஒழிக்க முத்துலட்சுமி ரெட்டி மேற்கொண்ட முயற்சியை இவர் ஆதரித்தார்.
- இவர் 1937-1940 ஆம் ஆண்டுகளில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றார். நவம்பர் மாதம் 1938 ஆம் ஆண்டில், அந்தப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக அவர் ஆறு வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.இவரது புதுமையான முயற்சியால் உருவாக்கப்பட்ட பொது விழிப்புணர்வும், தேவதாசி முறையை ஒழிப்பதற்கான இவரது தொடர்ச்சியான பிரச்சாரமும், 1947 ஆம் ஆண்டு மதராஸ் தேவதாசி (அர்ப்பணிப்புத் தடுப்பு) சட்டம் அல்லது தேவதாசி ஒழிப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் முக்கிய உந்துகோலாக இருந்தன.
- 1949 ஆம் ஆண்டில் பெரியார் அவரை விட மிகவும் இளைய பெண்ணான மணியம்மையை மணந்த போது, அவர் பெரியாரின் இயக்கத்தை விட்டுப் பிரிந்துச் சென்றார்.பின்னர் அவர் பெரியாரின் சீடரான சி. என். அண்ணாதுரை அவர்களால் தொடங்கப்பட்ட “திராவிட முன்னேற்றக் கழகத்தின்” (தி.மு.க) ஆதரவாளரானார்.அவர் 1962 ஆம் ஆண்டில் இறக்கும் வரை தி.மு.க கட்சியின் ஆதரவாளராக இருந்தார்.
- தனது வாழ்நாள் இலட்சியம் நிறைவேறியதைக் கண்டு கண்ணுற்ற பிறகு அவர் ஜூன் 27, 1962 ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார்.அவரது நினைவாக, ஏழைப் பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக ஒரு சமூக நலத் திட்டமான "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தை" தமிழக அரசு நிறுவியுள்ளது.
- இதற்கான தகுதிகள் பின்வருமாறு
- கல்வியறிவு - மணமகள் 10 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஒருவேளை மணமகள் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராயின் அவர் 5 ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது.
- வருமான வரம்பு - ஆண்டிற்கு ரூ.12,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- வயது வரம்பு - மணமகள் 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment