TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
எல்லோரா - அஜந்தா - மாமல்லபுரம்:
மகாராஷ்டிர மாநிலத்தின் ஒளரங்காபாத் மாவட்டத்தில் எல்லோரா, அஜந்தா என்னுமிடங்களில் திரளாகக்குகைகளும் கோவில்களும் அமைந்துள்ளன. எல்லோரா குகைக் கோவில்கள் அவற்றின் சிற்பங்களுக்காகப் பெயர்பெற்றவை. அஜந்தா குகைக் கோவில்கள் அவற்றின் ஓவியங்களுக்காகப் புகழ் பெற்றவை. இக்கோவில்களின் காலம் சுமார் பொ.ஆ. 500-950 ஆகும். ஆனால், குகைக் கோவில்களை உருவாக்கும் நடவடிக்கை இதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டிருக்க வேண்டும். முதல் குகைக்கோவில் ஆசீவகர்ளுக்காக உருவாக்கப்பட்டது. சில கோவில்கள் முற்றுப்பெறாதவையாகும்.
எல்லோரா:
- எல்லோராவிலுள்ள குடைவரைக் கோவில்களில் 34 குகைகள் சரணத்ரி மலையில் அமைந்துள்ளன. கோணவியல், கட்டுமானத் தொழில்நுட்பம், உலோகவியல் ஆகிய துறைகளைப் பற்றிய அறிவு இந்தியக் கட்டடக்கலையாளர்களுக்கு இல்லாமல் இருந்திருந்தால் இவை போன்ற நேர்த்தியான பெருங்கட்டடங்களை உருவாக்கியிருக்க முடியாது. இக்குகைத் தொகுப்புகளை உருவாக்கியோர் சாளுக்கியரும் ராஷ்டிரகூடரும் ஆவர்.
- இவ்வாறான புதிய பாணியில் கோவில்களைக் கட்டுவதை முதலில் மேற்கொண்டவர்கள் அவைதீக மதத்தவர்களே.
- பின்னர்தான் வைதீக மரபைச் சார்ந்தவர்களும் தங்கள் மதம் சார்ந்த சித்தாத்தங்களைப் பரப்புவதற்கு இந்த ஊடகத்தைக் கைக்கொண்டனர். இவ்வாறு ஆசீவகமும் சமணமும் பௌத்தமும் பிராமணீயமும் இக்கோவில்களை எழுப்பின. தொடக்ககாலக் கோவில்கள் எளிமையாகவும் அளவாகவும் கலை தொடர்பான உள்ளடக்கத்தைக் கொண்டிராமலும் இருந்தன.
- எல்லோராவில் ஐந்து குகைகளில் சுவரோவியங்கள் காணப்படுகின்றன. ஆனால் கைலாசநாதர் கோவிலில் உள்ளவை மட்டும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன.
- சமணர் கோவில்களில் உள்ள சில சுவரோவியங்களும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. விலங்குகள், பறவைகள், மரங்கள், பூக்கள் ஆகியவை நேர்த்தியாக எழிலோடு தீட்டப்பட்டுள்ளதோடு ஆசை, அன்பு, பரிவு ஆகிய மனித இயல்புகளின் வெளிப்பாடும் தொழில் வல்லமையுடன் தீட்டப்பட்டுள்ளன.
- எல்லோரா குகைகளை 1983இல் உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
அவைதீக மதக் கோவில்கள் I / பௌத்தக் குகைகள்:
- எல்லோரோவில் மொத்தம் 12 பௌத்தக் குகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவம் கொண்ட கட்டடக்கலைப்பாணியைக் கொண்டுள்ளது. அவற்றில் சில அளவில் சிறியன. மற்றவை இரண்டு அல்லது மூன்று அடுக்குகளைக் கொண்டவை.
- பௌத்தத் துறவிகள் தங்கியிருந்து சீடர்களுக்கு மத நூல்களில் பயிற்சி வழங்கும் மையமாகச் செயல்படும் விதத்தில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
- மத்தியிலுள்ள பெரிய அறையும் பக்கவாட்டில் அமைந்துள்ள சிறிய அறைகளும் துறவிகள் கல்வி வழங்குவதற்காகவும் போதனைகள் செய்வதற்கும் பயன்பட்டுள்ளன.
- ஆறாவது குகையில் ஒரு மேசையின் மீதுள்ள கையெழுத்துப் பிரதியை ஒரு மனிதன் வாசிப்பதைப் போன்று செதுக்கப்பட்டுள்ள சிற்பம் இதை உறுதி செய்கின்றது.
- சுவர்களில் உள்ள சதுர, செவ்வகக் கட்டங்களில் புத்தரின் வாழ்க்கையில் நடைபெற்ற பல நிகழ்வுகள் காட்சிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
- இக்குகைகளில் இடம்பெற்றுள்ள சிற்பங்களைக் கொண்டு மூன்று வகைப்பட்ட தனிப் பண்புக்கூறுகளை அடையாளம் காணலாம். மிக முக்கியமானதும் மையமானதும் புத்தரின் மூன்று வகைத் தோற்றங்களே; 1. தியான புத்தர் (தியான முத்ரா) 2. போதனை செய்யும் புத்தர் (வியாக்கியான முத்ரா) 3. வலது கை ஆள்காட்டி விரலால் பூமியைத் தொடும் புத்தர் (பூமி ஸ்பர்ஸ முத்ரா).
பெண் கடவுள்கள்:
- பௌத்த குகைகளில் தாரா, கதிரவாணிதாரா, சுந்தா, வஜ்ரத்தீஸ்வரி, மகாமயூரி, சுஜாதா, பன்தாரா, பிரிகுட்டி ஆகிய பெண் தெய்வங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
- குகை எண் 12இல் பெரிய உருவம் கொண்ட பெண்மணி, இடையில் ஒட்டியாணத்துடன், நாகப்பாம்பினால் ஆன தலைப்பாகையுடன் காட்சியளிக்கும் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது.
- அதே குகையில் காதிரிவாணி - தாரா என்னும் பெண் தெய்வம் கையில் ஒரு நாகப்பாம்பைப் பிடித்தபடி நிற்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
அவைதீக மதக் கோவில்கள் II / சமணக் குகைகள்:
- எல்லோரோவில் சில சமணக் குகைகளும் காணப்படுகின்றன. இவை மற்றவற்றிலிருந்து வேறுபட்டு தனித்தன்மையுடன் காணப்படுகின்றன.
- ஆனால் அவை முற்றுப்பெறாத நிலையில் உள்ளன. பணியாட்கள் சூழ யக்ச - மாதாங்கா, மகாவீரர், பார்சவநாதர், கோமதீஸ்வரர் ஆகியோரின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
வேதமதக் குகைகள்:
- இங்குள்ள குகைகளில் காலத்தால் முந்தியவை ஓரளவு சிறிதாகவும் எளிமையாகவும் உள்ளன. கைலாசநாதர் குகையைத் தவிர மற்றவை அனைத்தும் சதுர வடிவம் கொண்டவை. கைலாசநாதர் குகை (16) மட்டும் மிகப் பெரிய ஒற்றைக் கல்லிலான வடிவமாகும். இது உறுதியான ஒரே பாறையிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.
- இக்கோவில் இரண்டு அடுக்குகளைக் கொண்டது. இது சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்தைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. அவற்றின் மேலுள்ளது கைலாசநாதர் கோவிலாகும். கீழ் அடுக்கில் யானை வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
- பார்ப்பதற்கு அக்கோவிலை இந்த யானைகள் தாங்கியிருப்பதைப் போல் உள்ளது. கோவிலின் வெளிப்பகுதி மிக நன்றாகச் செதுக்கப்பட்ட சாளரங்களையும் இந்துப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தெய்வங்களின் வடிவங்களையும காதல் மோகத்தை வெளிப்படுத்துகின்ற ஆண் பெண் மிதுன வடிவங்களையும் கொண்டுள்ளது.
- கோவில் நுழைவாயிலின் இடப்பக்கம் இடம்பெற்றுள்ள கடவுள் வடிவங்கள் பெரும்பாலும் சைவக் கடவுள்களாகவும் வலப்பக்கம் உள்ளவைவைணவக் கடவுள்களாகவும் உள்ளன.
- முன்பகுதியிலுள்ள முற்றம் மிகப்பெரிய கொடிக்கம்பங்களையும் நந்தி மண்டபமொன்றையும் கொண்டுள்ளது.
- சிவன்பார்வதி திருமண விழாக் காட்சி, இராவணன் கைலாய மலையைத் தூக்குவதற்கு முற்படுதல், மகிசாசுரனை துர்காதேவி வதம் செய்தல் ஆகியவை அழகிய சிற்பங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். தெய்வங்களின் கைகளிலுள்ள ஆயுதங்கள், இசைக்கருவிகள் ஆகியவை கோவில் சுவர்களில் சதுர செவ்வகக் கட்டங்களில் தொடர்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.
- பெண் நீர்த் தெய்வமான கங்கை ஒரு முதலையின் மீது அமர்ந்திருப்பதும் யமுனை ஆமையொன்றின் மீது அமர்ந்திருக்கும் காட்சியும் கருத்தைக் கவரும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.
அஜந்தா:
- மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் நகரத்திற்கு வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் அஜந்தா குகைகள் அமைந்துள்ளன. எரிமலைப் பாறைகளிலிருந்து மொத்தம் 30 குகைகள் குடைந்தெடுக்கப்பட்டுள்ளன. இவை சுவரோவியங்களுக்குப் பெயர்பெற்றனவாக இருந்தாலும் இங்குச் சிற்பங்களும் உள்ளன. ஹீனயான பௌத்த மதப் பிரினைச் சேர்ந்தவர்களே முதன்முதலில் அஜந்தா குகைகளை அமைக்கத் துவங்கினர். பொ.ஆ.மு. 200 பொ.ஆ. 200
- வரையில் தக்காண பீடபூமிப் பகுதிகளை ஆண்ட அரசர்கள் இம்முயற்சிகளுக்கு ஆதரவளித்தனர். அரசர்களில் துவங்கி வணிகர்கள் வரை ஆதரவு வழங்கியோரைப் பற்றிக் கல்வெட்டுகள் பேசுகின்றன. முதற்கட்டக் குகைகள் பொ.ஆ.மு. 200 - பொ.ஆ. 200 காலகட்டத்தைச் சேர்தவையாகும். இரண்டாவது கட்டக் குகைகள் சுமார் பொ.ஆ.200 - பொ.ஆ.400 காலப்பகுதியைச் சேர்ந்தனவாகும்.
ஓவியம்:
- அஜந்தா குகைகள் சிறப்பு வாய்ந்த சுவரோவியங்களின் கருவூலமாகும். முதல் கட்ட ஓவியங்கள் பெரும்பாலானவை குகை எண் ஒன்பதிலும் பத்திலும் காணப்படுகின்றன.
- இவை சாதவாகனர் காலத்தைச் சேர்ந்தனவாகும். அஜந்தா குகையோவியங்களைத் தீட்டியவர்கள் அறிவுநுட்பத்துடன் திட்டமிட்ட தொழில்நுட்பங்களைப் பின்பற்றியுள்ளனர்.
- முதலில் பாறைச் சுவரின் மீது தாவரங்களின் நார், நெல் உமி, மணல் மற்றும் கல்பொடி கலந்து செய்த மென்சாந்தைப் பூசினார்கள். இதன் மீது சுண்ணாம்பு ஒரு மெல்லியப் பூச்சாகப் பூசப்பட்டுள்ளது.
- இப்பூச்சு வண்ணங்களை உள்வாங்கும் தன்மை உடையது. வண்ணங்களைப் பூசுவதற்காக இப்பரப்பின் மீது துணி விரித்து ஒட்டப்பட்டுள்ளதும் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.
- வண்ணங்கள் இயற்கைப் பொருள்களிலிருந்தும் தாதுக்களிலிருந்தும் எடுக்கப்பட்டன. சிவப்பு, வெள்ளை, மஞ்சள், நீலம், பச்சை ஆகியவையே முக்கிய வண்ணங்கள். ஓவியங்களில் அழகியல் கூறுகள், மாலைகள், காது வளையங்கள், தலைப்பாகைகள், கழுத்தணிகள், மனிதக் கைகளின் மிகச் சரியான அசைவுகள் ஆகியவன வெளிப்படுகின்றன.
- கதைகளைச் சொல்லும் சுவரோவியங்கள் கருத்தைக்கவர்வதாயும் செய்திகளைக் கூறுவதாயும் அமைந்துள்ளன. ஜாதகக் கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில காட்சிகள் புத்தரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சில முக்கியப் பகுதிகள் ஆகியனவே ஓவியங்களின் மையக் கருவாக உள்ளன.
- வானுலகவாசிகளான கின்னரர்கள், வித்யாதாரர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். பிற்காலத்தைச் சேர்ந்த ஓவியங்களில் போதிசத்துவர் அளவில் பெரிதான புடைப்போவியமாக காண்பிக்கப்பட்டுள்ளார்.
- பல்வகைப்பட்ட மனித உணர்வுகள் ஓவியங்களாக வடிக்கப்பட்டிருந்தாலும் பரிவு, இரக்கம், அமைதி ஆகிய உணர்வுகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. ஒளியும் நிழலும் அறிவுக் கூர்மையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
- பல்வேறுவண்ணங்களில் மனித உருவங்கள் வரையப்பட்டுள்ளமைக்கு வெவ்வேறு இனக்குழுக்களைச் சார்ந்த மக்களைக் குறிப்பதாகப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது.
கட்டடக் கலையும் சிற்பமும்
- கட்டடக்கலை நோக்கில் அஜந்தா குகைகளை இரு குழுக்களாகப் பார்க்கலாம். ஒன்று சைத்தியங்கள்; மற்றொன்று விகாரங்கள். சைத்தியா பல வளைவுகள் ஒருங்கிணையும் முகடுகளையும் நீண்ட அறைகளையும் கொண்டுள்ளது.
- அறையின் ஒரு கோடியில் புத்தருடைய சிலை மரபார்ந்த பாணியில் உள்ளது. புத்தருடைய சிற்பங்கள் அன்பின், ஆதரவின் ஒட்டுமொத்த உருவாக உள்ளன.
- பெரிய தோற்றமும் அதிக எடையும் சிற்பங்களின் பொது இயல்பாக உள்ளது.
- குழந்தைகளோடு காணப்படும் யக்சிகள், ஹரிதி ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. போதிசத்துவர் தனியாகச் செதுக்கப்பட்டுள்ளதும் மற்றொரு சிறப்பம்சமாகும்.
- போதிசத்துவர் அவலோகிதேஸ்வரர் ஓவியங்களிலும் சிற்பங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
மாமல்லபுரம்
- பல்லவர்களின் அடையாளமாகக் கருதப்படும் மாமல்லபுரம் (மகாபலிபுரம்) கடற்கரைக் கோவில் ராஜசிம்மனின் (பொ.ஆ. 700 - 728) ஆட்சிக் காலத்தில் எழுப்பியதாகும்.
- இக்கோவில் மூன்று கருவறைகளைக் கொண்டுள்ளது. அவற்றில் முக்கியமாவை சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் படைத்தளிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் வெளிப்புறச் சுவர் விஷ்ணுவிற்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளது. எல்லைச் சுவற்றின் உட்பக்கம் விரிவான செதுக்கு வேலைப்பாடுகளையும் சிற்பங்களையும் கொண்டுள்ளது.
- தென்னிந்தியாவில் கட்டுமானக் கோவில்களில் இது முதன்மையானதாகும். இப்பகுதியிலுள்ள ஏனைய கோவில் கட்டடங்களைப் போலின்றி இக்கடற்கரைக் கோவில் பாறையில் செதுக்கப்பட்ட ஐந்து அடுக்குகளைக் கொண்ட கோவிலாகும். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விமானங்கள் மாமல்லபுர பல்லவர் கோவில்களின் சிறப்புப் பண்பாகும்.
- இங்குள்ள ஒற்றைக்கல் தேர்கள் பஞ்சபாண்டவர் ரதம் என அறியப்படுகின்றன. அர்ச்சுன ரதத்தில் கலை நுணுக்கத்தோடு செதுக்கப்பட்ட சிவன், விஷ்ணு, மிதுனா, துவாரபாலக சிலைகள் உள்ளன. இவ்வைந்து ரதங்களில் மிக நேர்த்தியானது தர்மராஜ ரதமாகும்.
- இது சதுர வடிவிலான அடித்தளத்தையும் மூன்றடுக்கு விமானத்தையும் கொண்டுள்ளது. பீம ரதம் செவ்வக வடிவ அடித்தளத்தையும் அழகான ஹரிஹரர், பிரம்மா, விஷ்ணு, ஸ்கந்தர், சிவன், அர்த்தநாரிஸ்வரர், கங்காதரர் ஆகியோரின் சிற்பங்களையும் கொண்டுள்ளது.
- மாமல்லபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள கலை வெளிப்பாட்டில் மிக முக்கியமானது கங்கை நதி ஆகாயத்திலிருந்து இறங்கிவரும் ஆகாய கங்கை காட்சியாகும். (இது பாகீரதன் தவம், அர்ஜூனன் தவம் என்றும் அறியப்படுகிறது.)
- புராண உருவங்களை பிரபலமான உள்ளூர் கதைகளோடு இணைத்து சிற்பங்களாகக் காட்சிப்படுத்துவது மனித மற்றும் விலங்குகளின் வாழ்க்கைக் கூறுகளை சீராகக் கலக்கும் கலைஞனின் திறமையைப் பறைசாற்றுகின்றன.
- கிருஷ்ண மண்டபச் சுவர்களில் மிக அழகாகவும் கலை நுணுக்கத்தோடும் செதுக்கப்பட்டுள்ள பசுக்கள், பசுக் கூட்டங்கள் போன்ற கிராமத்து காட்சிகள் ரசிப்பதற்கான மற்றுமொரு கலை அதிசயமாகும்.
முடிவுரை
- பல்லவர் காலத்தில் குடைவரைக் கோவில்கள் என்பன இயல்பான ஒன்றாகும். தக்காணப்பகுதியில் ஐஹோல், வாதாபி ஆகிய இடங்களிலும் காஞ்சிபுரம் மாமல்லபுரம் ஆகியவற்றிலும் உள்ள கட்டுமானக் கோவில்களும் தனித்து நிற்கும் கோவில்களும் இக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட கட்டடக்கலை மேன்மைகளுக்குச் சான்றுகளாகும்.
- தக்காண பாணியிலான சிற்பங்கள், குப்தக் கலையோடு கொண்டிருந்த ஒப்புமை இதில் காணப்படுகிறது. பல்லவச் சிற்பங்கள் பௌத்த மரபுகளுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் தக்காணம் மற்றும் தமிழ்நாட்டு கட்டடக்கலையும் சிற்பக்கலையும் வட இந்திய மரபிலிருந்து பிறந்தவை அல்ல.
- அவைசுயமானவை. பண்டைய மரபுகளிலிருந்து தங்களது அடிப்படை வடிவத்தைப் பெற்றவை. மற்றவற்றிலிருந்து வேறுபட்டவை, தனித்து அடையாளம் காணக் கூடியவை. தனது மக்களின் அறிவுக் கூர்மையை தெளிவாகப் பிரதிபலிப்பவை.
No comments:
Post a Comment