TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
முற்காலப் பல்லவர்கள் கி.பி. 250 முதல் கி.பி. 350
சிவ ஸ்கந்தவர்மன்:
இவன் தன் தந்தையின் காலத்தில் இளவரசனாகக் காஞ்சியில் இருந்து, பல்லாரி ஜில்லாவில் உள்ள ‘விரிபரம்’ என்ற கிராமத்தை மறையவர் இருவர்க்குத் தானமாக விட்டான். இச்செய்தியைக் கூறுவதே ‘மயிதவோலுப் பட்டயம்’ என்ற முதல் பிராக்ருதப் பட்டயமாகும். அப்பொழுது இவன்தந்தை பல்லவ மஹாராஜன் என்பதும், இவன் இளமஹாராஜன் என்பதும், இவனது நாடு வடக்கே துங்கபத்திரையாறுவரை பரவி இருந்தது என்பதும், இவன் காஞ்சியிலிருந்து இப் பட்டயம் விடுத்ததால் இவன், புதிதாகப் பல்லவ அரசன் வென்ற தொண்டை நாட்டை இளவரசனாக இருந்து ஆண்டுவந்தான் என்பதும் இப் பட்டயத்தால் ஊகிக்கத் தக்க செய்திகள் ஆகும்.
மஹா ராஜாதிராஜன்
இவன் பட்டம் பெற்ற எட்டாம் ஆண்டில் விடப்பட்ட பட்டயம் ‘ஹிரஹதகல்லிப் பட்டயம்’ என்பது. ஹிரஹதகல்லி பல்லாரி ஜில்லாவில் உள்ள சிற்றுார் ஆகும். தானமாக விடப்பட்ட கிராமத்தோட்டம் சாதவாஹன ராஷ்டிரத்தில் உள்ளது. சாதவாஹனர்க்குச் சொந்தமாக இருந்த நாட்டில் உள்ள ஊர்த் தோட்டத்தைப் பல்லவன் தானம் கொடுத்தான் இதனால், சிவஸ்கந்தவர்மன் வடக்கே தனது நாட்டை விரிவாக்கியிருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இப்பட்டயத்தில் சிவஸ்கந்தவர்மன் தன்னைத் தர்ம-மஹா ராஜாதிராஜன் என்று குறித்திருக்கிறான். இதனால், இவன் அரசர் பலரை வென்று பல்லவநாட்டை விரிவாக்கினவன் என்பது புலனாகும்.
இவன் அக்நிஷ் டோமம், வாஜபேயம், அஸ்வமேதம் என்ற பெரு வேள்விகளைச்செய்தவன் என்று இப்பட்டயம் கூறுகின்றது. இவற்றுள் அக்நிஷ்டோமம் என்பது வசந்த காலத்தில் பலநாள் தொடர்ந்து செய்யப்படும் வேள்வியாகும்: வாஜபேயம் என்பது உயர்ந்த அரசநிலை, எய்தற்பொருட்டுச் செய்யப்படும் வேள்வியாகும்; அஸ்வமேதம் என்பது பேரரசன் என்பதைப் பிற அரசர் பலரும் ஒப்புக்கொண்ட மைக்கு அறிகுறியாகச் செய்யப்படும் பெரு வேள்வியாகும். சிவஸ்கந்தவர்மன் இவை மூன்றையும் வெற்றிகரமாகச் செய்து, அறநெறி பிறழாமல் நாட்டை ஆண்டு, தானும் நேரிய வாழ்க்கை வாழ்ந்தமையாற்போலும் தன்னைத் ‘தர்மமஹா ராஜாதிராஜன்’ என்று அழைத்துக் கொண்டான்!
நாட்டுப் பிரிவுகள்:
சிவஸ்கந்தவர்மன் காலம் ஏறத்தாழக் கி.பி. 300-325 என்னலாம். அக்காலத்தில் வேங்கடத்திற்கு அப்பாற்பட்ட தெலுங்கு நாடு பல ராஷ்டிரங்களாக (மாகாணங்களாக)ப் பிரிக்கப்பட்டிருந்தது என்பது மேற்சொன்ன பட்டயங்களிலிருந்து தெரிகிறது. அவை முண்டராஷ்டிரம், வெங்கோ (வேங்கி) ராஷ்டிரம், சாதவாஹன ராஷ்டிரம் முதலியனவாகும். இராஷ்டிரங்கள் பல விஷயங்களாகப் (கோட்டம் அல்லது ஜில்லா) பிரிக்கப்பட்டிருந்தன. தொண்டை நாடு பல்லவர்க்கு முற்பட்ட சோழர் காலத்தில் இருந்தவாறே இருபத்துநான்கு கோட்டங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தன. மாகாணத் தலைவர்களும் பிற அரசியல் உத்யோகஸ்தர்களும் இருந்தார்கள்.
விஜய ஸ்கந்தவர்மன்:
இவன் விஜய ஸ்கந்தவர்ம மஹாராஜன் என்று கூறப்பட்டவன். இவன் ஆட்சிக்காலத்தில் இளவரசனாக இருந்தவன் புத்தவர்மன் என்பவன். அவன் மனைவி பெயர் சாருதேவி என்பது; மகன் பெயர் புத்யங்குரன் என்பது. இச்சாருதேவி என்பவள் தெலுங்க நாட்டில் தாலூராக் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு நிலதானம் செய்தனள். அதனைத் தெரிவிப்பதே ‘குணப தேயப் பட்டயம்’ என்பது.
இம்மூன்று பட்டயச் செய்திகளைத் தவிர இப் பல்லவரைப் பற்றிக் கூறத்தக்க வேறு சான்றுகள் இல்லை. ஆதலால் இவர்களது அரச முறை-வரலாறு இன்ன பிறவும் முறையாகக் கூறமுடியவில்லை.
No comments:
Post a Comment