வினை வகைகள்
வினைச்சொற்கள் முற்று, எச்சம் என்பதாக மட்டுமன்றி, அவை பயன்படுவதன் அடிப்படையில் பலவாகப் பகுத்துரைக்கப்படுகின்றன.
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை அறிதல்
ஒரு வாக்கியத்தைக் கொடுத்து இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக என வினாக்கள் அமையும்.
1. தன் வினை வாக்கியம்:
தன்வினை என்பது ஒருவர் தானே செய்வது.
ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும்.
(எ.கா) கரையைச் சேர்வான்
என்னும் தொடரில், சேர்தலாகிய தொழிலை ஒருவன் செய்வான் என்பது பொருள்.
செல்வி பாடம் கற்றாள்.
முருகன் திருந்தினான்.
2. பிறவினை வாக்கியம்
பிறவினை என்பது பிறரைச் செய்யும்படி ஆக்குவது.
ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் ஆகும்.
'பித்து' 'வித்து' எனும் சொற்கள் சேர்ந்து வரும்.
(எ.கா) கரையில் சேர்ப்பான்
என்பது சொல்லாயின், வேறு யாரையோ அல்லது எதையோ சேரும்படி இவன் செய்வான் என்பது பொருளாகும், முன்னதில் சேரும் வினை இவனுடையது. பின்னதில் அவ்வினை வேறு ஒரு பொருளுக்கு உரியது.
ஆசிரியை பாடம் கற்பித்தார்
அவன் திருத்தினான்
பிறவினையாகும்போது வி, பி ஆகிய விகுதிகளில் ஒன்று, சேர்ந்து வருவதும் உண்டு.
நட - நடப்பி - நடப்பித்தான்செய் - செய்வி - செய்வித்தான்
என்பனபோல வரும். சொல் வடிவை விட, அது உணர்த்தும் பொருளை வைத்தே தன்வினையா, பிறவினையா என அறிதல் வேண்டும்.
தன்வினை - பிறவினை
திருந்தினான் - திருத்தினான்
உருண்டான் - உருட்டினான்
பயின்றான் - பயிற்றுவித்தான்
பெருகு - பெருக்கு
செய் - செய்வி
வாடு - வாட்டு
நடந்தான் - நடத்தினான்
சேர்கிறேன் - சேர்க்கிறேன்
ஆடினாள் - ஆட்டுவித்தாள்
பாடினான் - பாடுவித்தான்
கற்றார் - கற்பித்தார்
தேடினான் - தேடுவித்தான்
உண்டாள் - உண்பித்தாள்
அடங்குவது - அடக்குவது
3.செய்வினை வாக்கியம்
ஒரு வாக்கியம் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும் வாக்கியத்தில், செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்துவரும். சில சமயம் ‘ஐ’ மறைந்தும் வரும்.
(எ.கா) புத்தகம் படிக்கிறேன்கொசு கடித்ததுநாயை அடிக்கிறான்பாரதியார் குயில்பாட்டைப் பாடினார்.தச்சன் நாற்காலியைச் செய்தான்அவள் மாலையைத் தொடுத்தாள்ராதா பொம்மையைச் செய்தாள்
இத்தொடர்களில் உள்ள வினைச் சொற்கள் செய்வினைச் சொற்களாகும்.
4. செயப்பாட்டு வினை வாக்கியம்
செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமையும். எழுவாயோடு ‘ஆல்’ என்ற 3-ம் வேற்றுமை உருபும், பயனிலையோடு‘பட்டது’ ‘பெற்றது’ என்ற சொற்கள் சேர்ந்து வரும்.
(எ.கா) கல்லணை(செயப்படுபொருள்) கரிகாலனால்(எழுவாய்) கட்டப்பட்டது(பயனிலை)
தஞ்சை சோழர்களால் புகழ்பெற்றது..
புத்தகம் (என்னால்) படிக்கப்படுகிறது.
நான் (கொசுவால்) கடிக்கப்பட்டேன்.
நாய் (அவனால்) அடிக்கப்படுகிறது.
இத் தொடர்களில் செயப்பாட்டு வினைகள் உள்ளன. செய்வினையில் படிக்கிறேன் என்றிருந்த சொல், செயப்பாட்டு வினையில் படிக்கப்படுகிறது என மாறுகிறது. படு என்னும் துணைவினைச் சொல் இவை அனைத்திலும் சேர்ந்து வருகிறது.
No comments:
Post a Comment