இப்பகுதியில் கேள்விகளை நன்கு படித்துப் பார்த்தாலே எளிதில் விடை அளிக்கலாம்.
- கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடர் விடை வடிவத்தில் இருந்தால், இதற்குரிய சரியான வினாவை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு வினாவில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும்.
- கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடர் வினா வடிவத்தில் இருந்தால், இதற்குரிய சரியான விடையை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடையில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும்.
- இவ்வகை வினாக்களுக்கு தனியே தயார் ஏதும் செய்ய வேண்டியதில்லை, கொடுக்கப்பட்டிருக்கும் விடைகளை மிகவும் கவனமாக படித்து பதில் அளித்தால் போதும்.
வினா
தாம் எதிர்பார்க்கும் கருத்தைப் பெறுவதற்கு ஒருவரிடம் எவ்வாறு வினவ வேண்டும் என்பதை விளக்குவது வினாப்பகுதி. வினா ஆறு வகைப்படும்.
அவை,
- அறிவினா
- அறியாவினா
- ஐய வினா
- கொளல் வினா
- கொடை வினா
- ஏவல் வினா
1. அறிவினா
தான் தெரிந்தவற்றை மற்றவரிடம் கேட்பது அறிவினா.
நேர்காணலின் போது நேர்காணல் செய்பவர் போட்டியாளரை பார்த்து கேட்பது
(எ-கா) :திருக்குறளை எழுதியவர் யார்?
2. அறியாவினா
தனக்கு தெரியாத ஒன்றை தெரிந்தவரிடம் கேட்டு அறிவது அறியாவினா
மாணவர் ஆசிரியரிடம் கேட்பது
(எ-கா) :ஐயா, இதற்கு என்ன பொருள் ?
3. ஐய வினா
இதுவா அதுவா எனத் தெளிய முடியாத நிலையில் ஒரு பொருளை ஐயுற்று வினவும் வினா ஐயவினா .
(எ-கா) :அங்கே கிடப்பது பாம்பா? கயிறா?
4. கொளல் வினா
ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து பெறுவதற்காக வினவப்படும் வினா, கொளல்வினா
(எ-கா) :கோகுல் உன்னிடம் கூடுதல் இந்திய வரைபடம் உள்ளதா?
5. கொடை வினா
தன் பொருளை பிறருக்கு கொடுக்கும் பொருட்டு வினவப்படும் வினா கொடை வினா எனப்படும்
(எ-கா) :பணம் வேண்டுமா?
6. ஏவல் வினா
ஒருவர் ஒரு செயலை மற்றவரைச் செய்விக்க வேண்டும் என்பதற்காக வினவுவது ஏவல்வினா
(எ-கா) :படித்தாயா?
விடை
வினாவிற்கு ஏற்றவாறு பதில் அளிப்பது விடையாகும்.
விடை எட்டு வகைப்படும்.
- சுட்டு விடை
- மறை விடை
- நேர் விடை
- ஏவல் விடை
- வினா எதிர் வினாதல் விடை
- உற்றது உணர்தல் விடை
- உறுவது கூறல் விடை
- இனமொழி விடை
1. சுட்டு விடை
கேட்கப்படும் கேள்விக்கு ஒன்றைக் கருதி அல்லது சுட்டிக்காட்டி விடையளிப்பது சுட்டு விடை எனப்படும்.
(எ-கா) :கோவிலுக்குச் செல்லும் வழி இதுதான்.
2. மறை விடை
வினாவிற்கு எதிர்மறையாகக் கூறும் விடை மறைவிடை எனப்படும்.
(எ-கா) :நீ நீந்துவாயா? நீந்த மாட்டேன்
3. நேர் விடை
வினவும் வினாவிற்கு உடன்பாட்டு பொருளில் விடையளித்தல் நேர் விடை எனப்படும்
(எ-கா) :நாளை அலுவலகம் செல்வாயா? செல்வேன்
4. ஏவல் விடை
வினாவில் உள்ள செயலை வினவியவரைச் செய்யச் சொல்வது ஏவல் விடை எனப்படும்.
வினவியவரையே ஏவுவதால் ஏவல் விடையாகும்
(எ-கா) :கடைக்கு செல்வாயா? நீயே செல்
5. வினா எதிர் வினாதல் விடை
கேட்கப்படும் வினாவிற்கு விடை வினாவாகவே கூறுவது வினா எதிர் வினாதல் விடை எனப்படும்.
(எ-கா) :நீ தேர்வுக்குப் படித்தாயா? படிக்காமல் இருப்பேனா
6. உற்றது உரைத்தல் விடை
வினவப்பட்ட வினாவிற்குத் தனக்கு நேர்ந்ததை விடையாகக் கூறுவது உற்றது உரைத்தல் விடை எனப்படும்.
(எ-கா) :நீ பாடுவாயா? பல் வலிக்கிறது.
7. உறுவது கூறுதல் விடை
கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு நிகழப் போவதை கூறுவது உறுவது கூறுதல் விடை எனப்படும்.
(எ-கா) :எட்டிக்காய் சாப்பிடுகிறாயா? கசக்கும்
8. இனமொழி விடை
கேட்கப்படும் வினாவிற்கு வேறு ஒரு விடையைக் கூறுவது இனமொழி விடை எனப்படும்.
நீ ஆடுவாயா? பாடுவேன்
No comments:
Post a Comment