Thursday, July 20, 2023

TAMIL ILAKKIYAM THIRUKURAL NOTES திருக்குறள் பண்புடைமை

  • பால்: பொருட்பால்.
  • இயல்: குடியியல்.
  • அதிகாரம்: பண்புடைமை.

குறள் 991:

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

விளக்கம்:

யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.

குறள் 992:

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

விளக்கம்:

அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்.

குறள் 993:

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

விளக்கம்:

நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர்.

குறள் 994:

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.

விளக்கம்:

நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்.

குறள் 995:

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு.

விளக்கம்:

விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும் அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.

குறள் 996:

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.

விளக்கம்:

உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும் இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்.

குறள் 997:

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்.

விளக்கம்:

அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.

குறள் 998:

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்

பண்பாற்றார் ஆதல் கடை.

விளக்கம்:

நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்.

குறள் 999:

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள்.

விளக்கம்:

நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்.

குறள் 1000:

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று.

விளக்கம்:

பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும்.

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: