செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை க. ராமசாமிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிக் கௌரவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.9.2023) தலைமைச் செயலகத்தில், 2023-ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநர் க. ராமசாமிக்கு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் மு.கருணாநிதியின் திருவுருவச்சிலையும் வழங்கிக் கௌரவித்தார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் : முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமுயற்சியால் இந்தியாவில் முதன்முறையாகத் தமிழ் மொழியானது 2004-ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்ற முத்தமிழறிஞர் அவர்களின் கனவினை நிறைவேற்ற, நடுவண் அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதின் அடிப்படையில், 2006-இல் இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் ஓர் அங்கமாக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது. பின்னர் 2008-ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமைக்கப்பட்டது.
கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை : செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முக்கியத்துவம் கருதி முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 24.07.2008 அன்று தம் சொந்த நிதி ரூ.1 கோடியை வைப்புத் தொகையாக அளித்துக் ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை’யை நிறுவினார்.
‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’: இந்த அறக்கட்டளையின் மூலமாக ஆண்டுதோறும் ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்படுகிறது. இவ்விருது இந்தியாவிலேயே மிக உயரிய வகையில் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் திருவுருவச்சிலையும் அடங்கியதாகும். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஆய்வாளருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. அறக்கட்டளை தொடங்கப்பட்டபின் 2009ஆம் ஆண்டிற்கான முதல் விருது பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு 2010, ஜூன் 23 அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் 2010-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளுக்குரிய கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் 22.01.2022 அன்று நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டன. மேலும், 2020, 2021, 2022ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளை 22.08.2023 அன்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, 2023-ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவராக விளங்கும் தமிழ்நாடு முதலமைச்சரால் அமைக்கப்பெற்ற விருதுத் தேர்வுக் குழுவினரால் க. ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநரும், செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முன்னாள் பொறுப்பு அலுவலருமான க. ராமசாமிக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (5.9.2023) வழங்கிக் கௌரவித்தார்.
Source:Dinamani
TAMIL NADU GOVERNMENT AWARDS LIST 2023 / தமிழக அரசு விருதுகள்: 2023
No comments:
Post a Comment