பொது சிவில் சட்ட (Uniform Civil Code bill) மசோதா-முதல் மாநிலம்
நாட்டின் முதல் மாநிலமாக உத்தரகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட (யுசிசி) மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உரைக்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. பொது சிவில் சட்ட (யுசிசி) மசோதாவை நிறைவேற்றிய முதல் மாநிலமாக உத்தரகண்ட் திகழ்கிறது.
உத்தரகண்டில் கடந்த 2022 பேரவைத் தோ்தலில், ‘மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்’ என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. தோ்தலில் வென்று பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதும், பொது சிவில் சட்ட மசோதா வரைவை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு உருவாக்கிய 172 பக்கங்கள் கொண்ட பொது சிவில் சட்ட மசோதா 392 பிரிவுகளைக் கொண்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
பழங்குடியினருக்கு விலக்கு: உத்தரகண்ட் முழுமைக்கும், வேறு மாநிலங்களில் தங்கியுள்ள உத்தரகண்ட் மாநில மக்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். அரசமைப்பின்படி, பாரம்பரிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலின பழங்குடிகளுக்கு பொது சிவில் சட்டம் பொருந்தாது என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலதார திருமணத்துக்கு தடை: சட்டத்தின் முக்கிய அம்சமாக, பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமணம், விவாகரத்து குறித்த பொது விதிகளை மசோதா கொண்டுள்ளது.
‘லிவ்-இன்’ உறவு-பதிவு கட்டாயம்: திருமணங்களைப் போன்று, லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயாமாகிறது.
லிவ்-இன் உறவின் இருக்க விரும்புவோா் 18 வயதுக்குள்ளாக இருக்கக் கூடாது.
அதில் யாரேனும் ஒருவா் 21 வயதுக்கு உள்பட்டு இருந்தால் அவா்களின் பெற்றோா் அல்லது காப்பாளருக்கு பதிவாளா் தகவல் தெரிவிக்க வேண்டும். தங்களின் லிவ்-இன் உறவை ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய தவறுவோருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.10,000 அபராதம் / இரண்டும் விதிக்கப்படும். தவறான தகவல்களைச் சமா்ப்பித்து பதிவு செய்யப்பட்டால், அவா்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்.
லிவ்-இன் உறவை முடிவுக்கு கொண்டு வர அனுமதி அளித்தும் மசோதாவில் விதிகள் இடம்பெற்றுள்ளன. மசோதாவில் லிவ்-இன் உறவில் இருக்கும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதுடன், உறவில் தனித்துவிடப்பட்ட பெண்களுக்கு தங்கள் துணையிடமிருந்து குழந்தை பராமரிப்புக்கான செலவைப் பெறவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.