மத்திய இடைக்கால பட்ஜெட் 2024-2025

TNPSC PAYILAGAM
By -
0



நாடாளுமன்றத்தில் 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு நிதி அறிக்கை ஜூலை மாதத்தில் தாக்கல் செய்யும்.

பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்:

மக்களவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சமூக நீதியை அரசின் கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

மத்திய அமைச்சரவை ஒப்புதல்:

மத்திய இடைக்கால பட்ஜெட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

குடியரசுத் தலைவருடன் சந்திப்பு:

மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.

வருமான வரியில் மாற்றமில்லை:

நாட்டில் வருமான வரி கட்டுவோரின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 2.4 மடங்கு அதிகரித்துள்ளது. வருமான வரி கட்டும் முறை எளிதாக்கப்பட்டுள்ளது.

வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. இறக்குமதி வரிகளிலும் எந்த மாற்றமும் இல்லை. நேரடி மற்றும் மறைமுக வரிகளிலும் மாற்றமில்லை.

நடப்பு நிதியாண்டில் வரி வருவாய் 26.02 லட்சம் கோடி கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு கடன்:

அடுத்த 50 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் விதமாக மாநிலங்களுக்கு ரூ. 75,000 கோடி கடனாக வழங்கப்படும்.

உள்கட்டமைப்பு செலவு அதிகரிப்பு:

2024-25-ஆம் ஆண்டுக்கான உள்கட்டமைப்பு செலவுத் தொகை 11.11 லட்சம் கோடியாக அதிகரிகப்பட்டுள்ளது. உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்க லட்சத்தீவுகளில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

அந்நிய முதலீடு:

கடந்த 10 ஆண்டுகளில் அந்நிய முதலீடு 596 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

2023-24-ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி அரசின் செலவுத் தொகை 44.90 லட்சம் கோடியாக உள்ளது.

2024-25-ஆம் ஆண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 5.1 சதவிகிதமாக குறைக்கப்படும். 2025-26-ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 4.5 சதவிகிதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2024-25-ஆம் ஆண்டில் ரூ. 11.75 லட்சம் கோடி வெளிச் சந்தையில் இருந்து கடனாக திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய ஒட்டுமொத்த கடன் தொகை 14 லட்சம் கோடியாக உள்ளது.

மீன்வளத்துறையில் வேலை வாய்ப்புகள்:

கடந்த 10 ஆண்டுகளாக கடல்சார் உணவு ஏற்றுமதி இருமடங்காக அதிகரித்துள்ளதுள்ளது. மீன் வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ஐந்து ஒருங்கிணைந்த கடல் உயிரின பூங்காக்கள் அமைக்கப்படும்.

உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பால் உற்பத்தியாளர்கள் ஊக்கமளிக்கும் வகையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது என்றும் நாட்டில் பால் மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன்  அறிவித்தார்.இந்தியாவின் பால் உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்து 230 மில்லியன் டன்களாக ஆக உள்ளது.

40,000 வந்தே பாரத் ரயில் பெட்டிகள்:

40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் திட்ட ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும்

நாட்டின் விமான நிலையங்கள் 149-ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து விமான நிலையங்கள் விரிவாக்கம் பணி நடைபெறும்.

3 ரயில் வழித்தடங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவாக்கம் தொடரும்.

ஆராய்ச்சிக்கு ஒரு லட்சம் கோடி:

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க வட்டியில்லா கடனாக ரூ. ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கர்பப்பை புற்றுநோய் தடுப்பூசி:

ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் அனைத்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

கர்பப் பை புற்றுநோயை தடுக்க 9 முதல் 14 வயதுள்ள பெண்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இலவச மின்சாரம்:

வீட்டின் மொட்டை மாடியில் சூரிய மின்தகடு(சோலார்) அமைத்தால் மாதம்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. மேலும், இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2 கோடி வீடுகள்:

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும். 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டித் தரப்படும்.

பெண்களுக்கான திட்டம்:

மகளிருக்கு இடஒதுக்கீடு, முத்தலாக் தடை, வீடு கட்டும் திட்டத்தில் பெண்களுக்கு ஒதுக்கீடு ஆகியவற்றால் பெண்கள் பலனடைந்துள்ளனர். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 70 சதவிகிதம் பெண்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது.

தொழில்கள் தொடங்குவதற்காக பெண்களுக்கு ரூ. 30 கோடிக்கு முத்ரா திட்டத்தில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

கல்வித் துறை வளர்ச்சி:

தேசிய கல்விக் கொள்கை 2020, இந்திய கல்வித்துறையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பெண்கள் உயர்கல்வி பெறுவது கடந்த 10 ஆண்டுகளில் 28 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 7 ஐஐடிகள், 16 ஐஐஐடிகள், 17 ஐஐஎம்கள், 15 எய்ம்ஸ் மற்றும் 390 பல்கலைக்கழகங்கள், 3,000 ஐடிஐகள் உருவாக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1.1 கோடி இளைஞர்கள் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.

விவசாயிகள் பலன்:

மின்னணு வேளாண் சந்தையால் 8 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர். ரூ.34 லட்சம் கோடி உதவித் தொகை ஏழை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

11.8 கோடி விவசாயிகள் மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.

இலவச ரேஷன்:

நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் சென்றடைந்துள்ளன.

அனைவருக்கும் வீடு, குடிநீர், குறைந்த விலையில் சமையல் எரிவாயு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். 10 ஆண்களில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

வளர்ந்த நாடு:

வளர்ந்த நாடு என்ற இந்தியாவின் கனவு 2047-க்குள் நனவாகும். நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய நிதியம்:

தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் ழங்குவதற்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்

புதிய செயலி 

ஊட்டச்சத்துக் குறைபாடுகளைச் சரி செய்வதற்காக புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் .

மக்களின் சராசரி வருமானம்

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தைக்கு ஜிஎஸ்டி உதவியாக இருக்கிறது. மக்களின் சராசரி வருமான 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

 தனிக்குழு 

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளை அதிகரிக்க தனிக்குழு அமைக்கப்படும்.தேசிய மருத்துவ ஆணையத்தின், அறிக்கையின்படி, நாட்டில் தற்போது 358 அரசு மற்றும் 296 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன

பற்றாக்குறை அளவீடுகள்:

1.நிதிப்பற்றாக்குறை: 2024-25க்கான நிதிப்பற்றாக்குறை 16,85,494 கோடியாக இருக்கும், இது பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1% ஆகும்.

2. வருவாய் பற்றாக்குறை மற்றும் பயனுள்ள வருவாய் பற்றாக்குறை: வருவாய் பற்றாக்குறை 6,53,383 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் பயனுள்ள வருவாய் பற்றாக்குறை 2,67,801 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

3. முதன்மை பற்றாக்குறை: 2024-25 ஆம் ஆண்டிற்கான முதன்மை பற்றாக்குறை ரூ 4,95,054 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அமைச்சகங்களுக்கான ஒதுக்கீடுகள்

  • பாதுகாப்பு அமைச்சகம்: ₹6.1 லட்சம் கோடி
  • சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்: ₹2.78 லட்சம் கோடி
  • ரயில்வே அமைச்சகம்: ₹2.55 லட்சம் கோடி
  • நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்: ₹2.13 லட்சம் கோடி
  • உள்துறை அமைச்சகம்: ₹2.03 லட்சம் கோடி
  • ஊரக வளர்ச்சி அமைச்சகம்: ₹1.77 லட்சம் கோடி
  • ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்: ₹1.68 லட்சம் கோடி
  • தகவல் தொடர்பு அமைச்சகம்: ₹1.37 லட்சம் கோடி
  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்: 1.27 லட்சம் கோடி
  • கல்வி அமைச்சகம்: ₹1.24 லட்சம் கோடி
  • சுகாதார அமைச்சகம்: ₹90,171 கோடி

முக்கிய பொருட்களின் செலவு (₹ கோடியில்)

1. ஓய்வூதியம்: ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான கடமைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ₹2,39,612 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2. பாதுகாப்பு: கணிசமான ₹4,54,773 கோடி ஒதுக்கீடு தேசிய பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

3. மானியங்கள்: உரம் (₹1,64,000 கோடி), உணவு (₹2,05,250 கோடி), மற்றும் பெட்ரோலியம் (₹11,925 கோடி) ஆகியவை பொது நலனுக்கான முக்கியத் துறைகளை நிவர்த்தி செய்யும் குறிப்பிடத்தக்க மானியங்கள்.

4. விவசாயம் மற்றும் அது சார்ந்த செயல்பாடுகள்: விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்காக ₹1,46,819 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

5. கல்வி: கணிசமான அளவு ₹1,24,638 கோடி ஒதுக்கீடு தேசிய முன்னேற்றத்திற்காக கல்வியில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

6. சுகாதாரம்: சுகாதாரத் துறைக்கு ₹90,171 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இது பொது நலனுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

7. வட்டி செலுத்துதல்: ₹11,90,440 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வட்டி செலுத்துதல்களை நிர்வகித்தல் என்பது நிதித் திட்டமிடலின் முக்கிய அங்கமாக உள்ளது.

8. மற்றவை: தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு, ஊரக வளர்ச்சி மற்றும் சமூக நலன் போன்ற பல்வேறு துறைகள் இலக்கு ஒதுக்கீடுகளைப் பெறுகின்றன, இது முழுமையான வளர்ச்சியை வலியுறுத்துகிறது.

நிர்மலா சீதாராமனின் சாதனை:

நாட்டின் நிதியமைச்சராக தொடா்ந்து 6 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் என்ற பெருமையையும் நிா்மலா சீதாராமன் பெறுகிறாா்.

தொடா்ந்து 5 பட்ஜெட்களை தாக்கல் செய்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சா்கள் அருண் ஜேட்லி, ப.சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் சாதனையை அவா் முறியடித்துள்ளார்.

கடந்த 1959 முதல் 1964 -ஆம் ஆண்டுவரை தொடா்ந்து 6 மத்திய பட்ஜெட்களை தாக்கல் செய்த முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாய் சாதனையையும் அவா் சமன் செய்தார்.

SOURCE : DINAMANI

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!