உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியல் 2023:
உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலில், 2022 இல் 40 மதிப்பெண்களுடன் 85 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2023 ஆம் ஆண்டு 39 மதிப்பெண்களுடன் 93 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான நாடுகள் ஊழலை ஒழிப்பதில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை என்பதை தரவுகள் வெளிப்படுத்தியுள்ளது.
உலகில் ஊழல் மிகுந்த, குறைந்த நாடுகளின் தரவுகள் பட்டியலை அரசு சாரா அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு கொண்ட தரவுகளின் படி 2023 ஆம் ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதாவது, நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்ற தரவுகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த தரவுகளின் அடிப்படையில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெறும் நாடுகள் ஊழலற்ற நாடு என்ற வகையில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெறுகிறது. பூஜ்ய மதிப்பெண் பெறும் நாடுகள் ஊழல்கள் மிகுந்த நாடுகளாக குறிப்பிடப்படுகிறது.
அந்த வகையில், ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில், 2023 ஆம் ஆண்டில், 180 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, எந்தவொரு நாடும் 100-க்கும் 100 மதிப்பெண்கள் பெறவில்லை. அதாவது உலகம் முழுவதும் ஊழல் மிகுந்து காணப்படுவதாகவும், மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் 50-க்கு கீழே மதிப்பெண் பெற்றுள்ளன என தரவுகள் தெரிவிக்கின்றன.
2023 ஊழல் புலனாய்வுக் குறியீட்டில் குறைந்த ஊழல் உள்ள நாடுகள்
100-க்கும் 90 மதிப்பெண் பெற்ற டென்மார்க் உலகின் மிகக் குறைந்த ஊழல் கொண்ட நாடாக தொடர்ந்து ஆறாவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.
- 100-க்கும் 90 மதிப்பெண் பெற்ற டென்மார்க்
- 87 மதிப்பெண்களுடன் பின்லாந்து
- 85 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து
- நார்வே(84)
- சிங்கப்பூர் (83)
- ஸ்வீடன் (82)
- சுவிட்சர்லாந்து (82)
- நெதர்லாந்து (79)
- ஜெர்மனி (78)
- லக்சம்பர்க் (78)
உலக ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் 2022 ஆம் ஆண்டு 40 மதிப்பெண்கள் பெற்று 85 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2023 இல் 39 மதிப்பெண்களுடன் 93 ஆவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது என்றும் அதன் ஒட்டுமொத்த மதிப்பெண் பெரிய அளவில் மாறாமல் உள்ளது என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தரவுகள் தெரிவித்துள்ளது.
இதேபோன்று கஜகஸ்தான், லெசோத்தோ, மாலத்தீவு 39 மதிப்பெண்களுடன் இந்தியாவுடன் 93 இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன. சீனா 76 ஆவது இடத்திலும் உள்ளன.
2023-உலகின் மிக ஊழல் நிறைந்த நாடுகள்:
உலகின் மிக ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியலில், வெறும் 11 மதிப்பெண்களுடன் சோமாலியா கடைசி இடத்திலும், வெனிசுலா (13), சிரியா (13), தெற்கு சூடான் (13), மற்றும் யேமன் (16) ஆகியவை தரவரிசை பட்டியலில் கடைசி இடங்களைப் பிடித்துள்ளதாகவும், இந்த நாடுகள் எல்லாம் நீண்டகாலமாக நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் ஆயுத மோதல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் 29 மதிப்பெண்களுடன் பாகிஸ்தான் 133 ஆவது இடத்திலும் மற்றும் 34 மதிப்பெண்களுடன் இலங்கை 115 ஆவது இடத்தில் உள்ளன. இந்த இரு நாடுகளும் கடன் சுமை மற்றும் அரசியல் ஸ்திரமின்மையால் சிக்கியுள்ளன என்றும், பெரும்பாலான நாடுகள் ஊழலை ஒழிப்பதில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை என்பதை தரவுகள் வெளிப்படுத்தியுள்ளது.
SOURCE : DINAMANI