Wednesday, October 25, 2023

இயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள்: -TNPSC UNIT - I: GENERAL SCIENCE:NOTES IN TAMIL

TNPSC UNIT - I: GENERAL SCIENCE:NOTES IN TAMIL
இயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள்:



TNPSC UNIT - I: GENERAL SCIENCE:NOTES IN TAMIL

இயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள்:


இயற்பியல் அளவுகள் இயற்பியல் விதிகளை விவரிக்க பயன்படும் அளவுகள் இயற்பியல் அளவுகள் எனப்படும்.தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடு, தெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது அளவீடு (Measurement ) எனப்படும்.தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவு அலகு (Unit) எனப்படும்.

பொதுவாக பயன்படுத்தப்படும் அலகு முறைகள் 
  • FPS முறை என்பது Foot, Pound, Second அலகுமுறை ஆகும்.
  • CGS முறை என்பது Centimetre, Gram, Second அலகுமுறை ஆகும்.
  • MKS முறை என்பது Metre, Kilogram, Second அலகுமுறை ஆகும்.

SI அலகு முறை :

SI அலகு முறை எந்த ஓர் அளவீடும் அனைவருக்கும் ஒரே அளவைத்தான் தரவேண்டும். இது திட்ட அளவீடு (Standard Measurement ) எனப்படும்.

மீட்டர், கிலோகிராம்,விநாடி என்பவை திட்ட அலகுகள் ( Standard Units ) எனப்படும்.

1960 - ல் 11-வது அனைத்துலக எடைகள் மற்றும் அளவுகள் சங்கத்தால், மாற்றங்களுடன் கூடிய MKS முறை, அனைத்து நாடுகளிலும் இன்று பின்பற்றும் SI அலகு முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இது “System International d'Units” என்பதன் சுருக்கமாகும்.SI அலகு முறையில் 7 அடிப்படை அளவுகளும் இரண்டு துணை அளவுகளும் உள்ளது.

இயற்பியல் அளவுகள் இருவகைப்படும்:

1.அடிப்படை அளவுகள் 
2.வழி அளவுகள்

அடிப்படை அளவுகள்

வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிடப்பட இயலாத இயற்பியல் அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும். எ.கா: நீளம், நிறை, காலம். அடிப்படை அளவுகளை அளந்தறியப் பயன்படும் அலகுகள் அடிப்படை அலகுகள் எனப்படும். SI (System International Unit) அலகு முறையில் ஏழு அடிப்படை அளவுகள் உள்ளன. 

அடிப்படை அளவுகள் அடிப்படை அலகுகள்
  • நீளம் மீட்டர் (m)
  • நிறை கிலோகிராம் (kg)
  • காலம் வினாடி (s)
  • வெப்பநிலை கெல்வின் (K)
  • மின்னோட்டம் ஆம்பியர் (A)
  • பொருளின் அளவு மோல் (mol )
  • ஒளிச்செறிவு கேண்டிலா (cd)



நீளம்

நீளம் என்றால் என்ன? ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு நீளம் எனப்படும். இது ஒரு புத்தகத்தின் இரு விளிம்புகளுக்குஇடைப்பட்ட தூரமாகவோ அல்லது ஒரு கால்பந்து விளையாட்டுத் திடலின் இரு மூலைகளுக்கு இடைப்பட்ட தூரமாகவோ அல்லது உனது வீட்டிற்கும், பள்ளிக்கும் இடைப்பட்ட தூரமாகவோ இருக்கலாம்.
  • நீளத்தின் SI அலகு மீட்டர்
  • நீளத்தின் அலகு மீட்டர். அதன் குறியீடு ‘m’ எனக் குறிக்கப்படுகிறது.
  • 1 சென்டி மீட்டர் (செ.மீ) = 10 மில்லிமீட்டர் (மி.மீ)
  • 1 மீட்டர் (மீ) =100 சென்டி மீட்டர் (செ.மீ)
  • 1கிலோமீட்டர் (கி.மீ) = 1000 மீட்டர் (மீ)
நிறை

நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு ஆகும். நிறையின்S.Iஅலகு கிலோகிராம். இது கி.கி என குறிப்பிடப்படுகிறது. நிறையின் மேல் செயல்படும் புவிஈர்ப்பு விசையே எடை ஆகும். பூமியின் மீது ஒரு பொருளின் எடை அதன் நிறைக்கு நேர்தகவில் இருக்கும்.
  • நிறையின் SI அலகு கிலோகிராம்
  • 1000 மில்லிகிராம் = 1கிராம்
  • 1000 கிராம் = 1கிலோகிராம்
  • 1000 கிலோகிராம் = 1டன்
பூமியை விட நிலவில் ஈர்ப்பு விசை குறைவு. எனவே, அங்கு எடை குறைவாக இருக்கும். ஆனால், இரண்டிலும் நிறை சமமாகவே இருக்கும். நிலவின் ஈர்ப்புவிசை புவியின் ஈர்ப்பு விசையைப்போல ஆறில் ஒரு பங்கு இருப்பதால், நிலவில் ஒரு பொருளின் எடை பூமியில் உள்ளதைவிட ஆறு மடங்கு குறைவாகவே இருக்கும்.

பொதுத்தராசு

பொருளின் நிறையை அளவிட நாம் பொதுத் தராசினைப் பயன்படுத்துகிறோம். ஒரு தெரிந்த நிலையான நிறையோடு, ஒரு தெரியாத பொருளின் நிறையை ஒப்பிடுவதன் மூலம் அந்தப் பொருளின் நிறையானது கணக்கிடப்படுகிறது. அது படித்தர நிறை என்றும் அழைக்கப்படுகிறது.

மின்னணுத் தராசு:

துல்லியமான எடையைக் கணக்கிட மின்னணுத் தராசு எனும் கருவி பயன்படுகிறது. ஆய்வகங்களில் பல சோதனைகளைச் செய்வதற்காக, பொதுவாகமின்னணுத்தராசைப் பயன்படுத்தி வேதிப் பொருள்களின் எடையை மிகத் துல்லியமாக அளவிடுகின்றனர். மேலும், மின்னணுத் தராசினைக்கொண்டு உணவு, மளிகைப் பொருள்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றின் எடையையும் கணக்கிடலாம்.

வெப்பநிலை:

வெப்பத்தின் அல்லது குளிர்ச்சியின் அளவைக் கண்டறிய நம்பகத்தன்மை வாய்ந்த அளவு ஒன்று தேவைப்படுகிறது. அந்த அளவே 'வெப்பநிலை' ஆகும்.

வெப்பநிலை என்பது, பொருளொன்று பெற்றிருக்கும் வெப்பத்தின் அல்லது குளிர்ச்சியின் அளவைக் குறிப்பிடும் இயற்பியல் அளவாகும். ஒரு பொருளுக்கு வெப்பத்தை அளிக்கும்போது அதன் வெப்பநிலை அதிகரிக்கிறது மாறாக, ஒரு பொருளிலிருந்து வெப்பத்தை வெளியேற்றும்போது அதன் வெப்பநிலை குறைகிறது.

ஒரு அமைப்பிலுள்ள துகள்களின் சராசரி ஆற்றலே 'வெப்பநிலை' என்று வரையறுக்கப்படுகிறது. வெப்ப நிலையின் அலகு 'கெல்வின்' ஆகும். வெப்பநிலையை நேரடியாகக் கண்டறிய 'வெப்பநிலைமானிகள்' பயன்படுத்தப்படுகின்றன. வெப்பநிலைமானிகள், சில பொதுவான திட்ட அளவுகளைக் கொண்டு தரப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும், வெப்பநிலையானது செல்சியஸ், ஃபாரன்ஹீட், கெல்வின் போன்ற அலகுகளில் அளவிடப்படுகிறது.

மின்னோட்டம் (I)

ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னூட்டங்கள் (Charges) பாய்வதை மின்னோட்டம் என்கிறோம். மின்னோட்டத்தின் எண் மதிப்பானது, ஒரு கடத்தியின் வழியே ஒரு வினாடியில் பாயும் மின்னூட்டங்களின் அளவு என வரையறுக்கப்படுகிறது

மின்னோட்டம் = மின்னூட்டத்தின் அளவு / காலம்

I = Q/t

மின்னூட்டம் 'கூலூம்' என்ற அலகினால் அளவிடப்படுகிறது. மின்னோட்டத்தின் SI அலகு 'ஆம்பியர்' ஆகும். இது 'A' என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது. ஒரு கடத்தியின் வழியே ஒரு விநாடியில் ஒரு கூலும் மின்னூட்டம் பாய்ந்தால், அந்த மின்னோட்டத்தின் மதிப்பு ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது. மின்னோட்டமானது, 'அம்மீட்டர்' என்றகருவியின் மூலம் அளக்கப்படுகிறது.

பொருளின் அளவு

பொருளின் அளவு என்பது, ஒரு பொருளில் உள்ள துகள்களின் எண்ணிக்கையின் அளவாகும். துகள்கள் என்பவை அணுக்கள், மூலக்கூறுகள், அயனிகள், எலக்ட்ரான்கள் அல்லது புரோட்டான்களாக இருக்கலாம். பொதுவாக பொருளின் அளவானது, அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் நேர்தகவில் இருக்கும்.

ஒரு பொருளில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் மோல் எனும் அலகால் அளவிடப்படுகின்றன. இது ஒரு SI அலகு ஆகும்.

மோல் என்பது 6.023 × 1023 துகள்களைக் கொண்ட பொருளின் அளவைக் குறிக்கிறது. இது 'mail என்று குறியீட்டால் குறிக்கப்படுகிறது.

6.023 x 1023 எனும் எண் அவோகேட்ரா எண் என்றும் வழங்கப்படுகிறது

ஒளிச்செறிவு

ஒளி மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையில் ஓரலகு திண்மக் கோணத்தில் வெளிவரும் ஒளியின் அளவு 'ஒளிச்செறிவு எனப்படும். ஒளிச்செறிவின் SI அலகு 'கேண்டிலா'ஆகும். இதனை 'cd' என்ற குறியீட்டால் குறிக்கலாம்.

எரியும் மெழுகுவர்த்தி ஒன்று வெளியிடும் ஒளியின் அளவு தோராயமாக ஒரு கேண்டிலாவிற்குச் சமமாகும். ஒளிமானி (Photometer) அல்லது ஒளிச்செறிவுமானி (Luminous intensity meter) என்பது ஒளிச்செறிவினை அளவிடும் கருவியாகும். அது ஒளிச்செறிவினை நேரிடையாக 'கேண்டிலா' அலகில் அளவிடுகிறது

ஒளிப்பாயம் அல்லது ஒளித்திறன் என்பது, ஒளி உணரப்பட்ட திறனைக் குறிக்கிறது. இதன் SI அலகு 'லுமென்' (lumen) எனப்படும்.

ஒரு ஸ்ட்ரேடியன் திண்மக்கோணத்தில், ஒரு கேண்டிலா ஒளிச்செறிவுடைய ஒளியை ஒரு ஒளிமூலம் வெளியிடுமானால் அந்த ஒளிமூலத்தின் திறன் ஒரு லுமன் என வரையறுக்கப்படுகிறது.

காலம்:

கால இடைவெளியை அளவிடுவதற்கு கடிகாரங்கள் பயன்படுகின்றன. பண்டைய காலத்திலிருந்து பல்வேறு விதமான கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. காலத்தைத், துல்லியமாகக் கணக்கிடுவதற்காக அறிவியல் அறிஞர்கள், கடிகாரம் செயல்படும் முறைகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளனர்.

1. காட்சியின் அடிப்படையில் கடிகாரத்தின் வகைகள்
  • ஒப்புமை வகைக் கடிகாரங்கள்
  • எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள்
2. செயல்படும் முறையின் அடிப்படையில் கடிகாரத்தின் வகைகள்
  • குவார்ட்ஸ் கடிகாரங்கள்
  • அணுக்கடிகாரங்கள்
1. குவார்ட்ஸ் கடிகாரங்கள்

இவை 'குவார்ட்ஸ்' எனப்படும் படிகத்தினால் கட்டுப்படுத்தப்படும் 'மின்னணு அலைவுகள்' (Electronic Oscillations) மூலம் இயங்குகின்றன. இப் படிக அதிர்வுகளின் அதிர்வெண்ணானது மிகத் துல்லியமானது. எனவே, குவார்ட்ஸ் கடிகாரங்கள் இயந்திரவியல் கடிகாரங்களைவிட மிகவும் துல்லியமானவை. இக்கடிகாரங்களின் துல்லியத் தன்மையானது 10 வினாடிக்கு ஒரு வினாடி என்ற அளவில் இருக்கும்.

2. அணுக்கடிகாரங்கள்

அணுக்கடிகாரங்கள் அணுவின் உள்ளே ஏற்படும் அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. இவை 1013 வினாடிக்கு ஒரு வினாடி என்ற அளவில் துல்லியத்தன்மை கொண்டவை. இவை பூமியில் இருப்பிடத்தைக் காட்டும் அமைப்பு (GPS), பூமியில் வழிகாட்டும் செயற்கைக் கோள் அமைப்பு (GLONASS) மற்றும் பன்னாட்டு நேரப்பங்கீட்டு அமைப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

கிரீன்விச் சராசரி நேரம் (GMT)

இது இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகருக்கு அருகில், கிரீன்விச் என்னுமிடத்தில் உள்ள இராயல் வானியல் ஆய்வுமையத்தின் (Royal Astronomical Observatory) நேரமாகும். இது 0° தீர்க்கக் கோட்டில் கணக்கிடப்படுகிறது. புவியானது, 15° இடைவெளியில் அமைந்த தீர்க்கக் கோடுகளின் அடிப்டையில் 24 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை நேரமண்டலங்கள் (Time Zones) என்று அழைக்கப்படுகின்றன. அடுத்தடுத்த இரண்டு நேர மண்டலங்களுக்கு இடையே உள்ள காலஇடைவெளி 1 மணி நேரம் ஆகும்.

இந்திய திட்ட நேரம் (IST)

இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் (Mirzapur) எனும் இடத்தின் வழியாகச் செல்லும் தீர்க்கக் கோட்டை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்ட நேரம் கணக்கிடப்படுகிறது. இக்கோடானது 82.5° (கிழக்கு) தீர்க்கக் கோட்டில் அமைந்துள்ளது.

IST = கிரீன்விச் சராசரி நேரம் + 5.30 மணி

வழி அளவுகள்

அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ, வகுத்தோ அல்லது கணித முறைப்படி இணைத்தோ பெறப்படும் பிற இயற்பியல் அளவுகள் வழி அளவுகள் எனப்படும். எ.கா : பரப்பளவு , கனஅளவு. வழி அளவுகளை அளவிடப் பயன்படும் அலகுகள் வழி அலகுகள் எனப்படும்.
  • பரப்பு = நீளம் × அகலம் மீ2
  • கன அளவு = நீளம் × அகலம் × உயரம் மீ3
  • வேகம் = தூரம் / காலம் மீ வி-1
  • மின்னூட்டம் = மின்னோட்டம் × நேரம் கூலும்
  • அடர்த்தி = நிறை / கனஅளவு கிகிமீ-3


SI அலகு முறையில் துணை அளவுகள் :

துணை அளவுகள்அலகுகுறியீடு
தளக்கோணம்ரேடியன்rad
திண்மக்கோணம்ஸ்டிரேடியன்sr


தளக்கோணம்

இரு நேர் கோடுகள் அல்லது இரு தளங்களின் குறுக்கு வெட்டினால் உருவாகும் கோணம் தளக்கோணம் எனப்படும். தளக்கோணத்தின் SI அலகு ரேடியன் ஆகும். இது rad எனக் குறிக்கப்படுகிறது.

திண்மக்கோணம்

மூன்று அல்லது அதற்த மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக்கொள்ளும்போது உருவாகும் கோணம் திண்மக்கோணம் எனப்படும். திண்மக் கோணமானது ஒரு கூம்பின் உச்சியில் உருவாகும் கோணம் என்றும் வரையறுக்கப்படுகிறது, திண்மக் கோணத்தின் SI அலகு ஸ்ட்ரேடியன் ஆகும். இது SI என்று குறிக்கப்படுகிறது.

1995 ஆம் ஆண்டு வரை கோணம் மற்றும் தளக் திண்மக் கோணம் ஆகியவை துணை அளவுகள் என் தனியாக வகைப்படுத்தப்பட்டிருந்தன. 1995 ஆம் ஆண்டில் இவை வழி அளவுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

ஒரு கோளத்தின் ஆரத்தின் இருமடிக்குச் சமமான புறப்பரப்பு கொண்ட சிறிய வட்டப்பகுதி ஒன்று மையத்தில் ஏற்படுத்தும் கோணம் ஒரு ஸ்ட்ரேடியன் எனப்படும்.

இயற்பியல் அளவுகள் அலகுகள் மற்றும் பரிமாணங்கள் :


TNPSC EXAM KEY POINTS :

  • ஓடோமீட்டர் என்பது தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவைக் கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும்
  • மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள், 1790ல் ஃபிரெஞ்சு நாட்டினரால் உருவாக்கப்பட்டது.
  • தற்காலத்தில் நீளத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் அளவுகோல், பதினாறாம் நூற்றாண்டில் வில்லியம் பெட்வெல் என்ற அறிவியல் அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உள்ள எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தில் பிளாட்டினம் - இரிடியம் உலோகக் கலவையிலான படித்தர மீட்டர் கம்பி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த மீட்டர் கம்பியின் நகல் ஒன்று டில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
  • ஒரு நாளில் மனிதனின் இதயத் துடிப்புகளின் எண்ணிக்கையை தோராயமாகக் கணக்கிடுக (இதயம் தோராயமாக ஒரு நிமிடத்தில் 75 முறை துடிப்பதாகக் கொள்க).
  • 1கிலோகிராம் என்பது ஃபிரான்ஸில் உள்ள செவ்ரெஸ் என்ற இடத்தில் சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தால் 1889 முதல் வைக்கப்பட்டுள்ள, பிளாட்டினம்-இரிடியம் உலோகக் கலவையால் ஆன் ஒரு உலோகத் தண்டின் நிறைக்குச் சமம்.
  • செவ்வாய் கோளின் காலநிலை பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்காக 1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அமெரிக்காவின் தேசிய வானியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (National Aeronautics and Space Administration- NASA) 'Mars Climate Orbiter' எனும் எனும் சுற்றுக்கலத்தை அங்கு அனுப்பியது. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, செவ்வாய் கோளை நெருங்கி வந்தபோது, சுற்றுக்கலமானது 1999, செப்டம்பர் 23 அன்று கண்ணிற்குப் புலப்படாமல் மறைந்து போனது. கொலராடோவில் இருந்த விண்கலம் செலுத்தும் குழுவிற்கும், கலிஃபோர்னியாவில் இருந்த பணி வழிநடத்தும் குழுவிற்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக சுற்றுக்காலக் கணக்கீட்டில் பிழை ஏற்பட்டது என்று அறிக்கை வெளியானது. இப்பணியில் ஈடுபட்ட இரு குழுக்களில், ஒரு குழு ஆங்கிலேய FPS அலகு முறையையும் மற்றொரு குழு MKS அலகு முறையையும் பயன்படுத்தி கணக்கீடு செய்துள்ளனர். இதனால் சுமார் 125 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது.
  • 1960 ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் நடைபெற்ற எடைகள் மற்றும் அளவீடுகள் குறித்த 11ஆவது பொது மாநாட்டில், அறிவியல் அறிஞர்கள், இயற்பியல் அளவுகளுக்கான பொதுவான அளவீட்டின் அதற்கான தேவையை உணர்ந்து, அங்கீகாரத்தை வழங்கினர்.
  • நீளம், நிறை, காலம், வெப்பநிலை, மின்னோட்டம், பொருளின் அளவு மற்றும் ஒளிச்செறிவு ஆகியவை அடிப்படை அளவுகள் எனப்படுகின்றன.
  • வெப்பநிலை என்பது, பொருளொன்று பெற்றிருக்கும் வெப்பத்தின் அல்லது குளிர்ச்சியின் அளவைக் குறிப்பிடும் இயற்பியல் அளவாகும். இதன் SI அலகு கெல்வின்.
  • ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னூட்டங்கள் (எலக்ட்ரான்கள்) பாய்வதை மின்னோட்டம் என்கிறோம். மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர். பொருளின் அளவிற்கான SI அலகு மோல்.
  • ஒளிச்செறிவு கேண்டிலா எனும் அலகால் அளவிடப்படுகிறது.
  • குவார்ட்ஸ் கடிகாரங்கள் குவார்ட்ஸ் எனப்படும் படிகத்தினால் கட்டுப்படுத்தப்படும் மின்னணு அலைவுகள் மூலம் இயங்குகின்றன.
  • அணுக்கடிகாரங்கள் அணுவினுள் ஏற்படும் அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன.
  • துல்லியத் தன்மை என்பது, கண்டறியப்பட்ட மதிப்பானது உண்மையான மதிப்பிற்கு எவ்வளவு நெருக்கமாக அமைந்துள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • அளவிடுதலில் நுட்பம் என்பது, மேற்கொள்ளப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீடுகள் ஒன்றுக்கொன்று எவ்வளவு நெருக்கமாக அமைந்துள்ளன என்பதைக் குறிக்கிறது.
  • தோராயமாக்கல் முறை என்பது ஒரு இயற்பியல் அளவை அளவிடும்போது, அதன் உண்மையான மதிப்பிற்கு மிக நெருக்கமாக அமைந்த மதிப்பைக் கண்டறியும் வழிமுறையாகும்.
  • தரப்படுத்துதல் ஒரு கருவியினை குறிப்பிட்ட வரம்பில் கட்டமைக்கும் செயல்முறை.
  • மின்னணுவியல் அலைகள் ஒரு மின்னணுச் சுற்றினால் உருவாக்கப்படும் அலைவுகள்.
  • குவார்ட்ஸ் படிகம் சிலிக்கன் மற்றும் ஆக்சிஜனால் (SiO) உருவாக்கப்பட்ட படிகம்.
  • தளக்கோணம் இரு நேர்கோடுகள் அல்லது இரு தளங்களின் குறுக்கு வெட்டினால் உருவாகும் கோணம்.
  • திண்மக்கோணம் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக்கொள்ளும்போது உருவாகும் கோணம்.
  • பொருளின் அளவு ஒரு பொருளில் உள்ள துகள்களின் அளவு.
  • மின்னோட்டம் ஒரு விநாடி காலத்தில் பாயும் மின்னூட்டம்.

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: