தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க கொள்கை-2023
தமிழகத்தில் புத்தொழில் சூழலை மேம்படுத்தும் வகையிலும், தமிழகத்தை அதற்கான மிகச் சிறந்த சூழல் கொண்ட இடங்களில் ஒன்றாக உருவாக்கவும், 'தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை - 2023' உருவாக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு, சமூக மூலதனம் இரண்டிலும், அவற்றின் பங்களிப்புகளை அதிகரிப்பதற்கு உந்து சக்தியாக இது இருக்கும். புத்தொழில் சார்ந்த அறிவாற்றலை மேம்படுத்துதல்; மாநிலத்தின் புத்தாக்க சூழலை வலுப்படுத்துதல் உட்பட ஏழு அம்சங்களை அடிப்படையாக வைத்து, 50க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களுடன் இக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
- இப்புதிய புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கையானது, தமிழகத்தில் உள்ள புத்தொழில் நிறுவனங்களின் உருவாக்கத்தை அதிகரிப்பதற்கும், அந்நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு உறுதுணையாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு மற்றும் சமூக மூலதனம் இரண்டிலும் அவற்றின் பங்களிப்புகளை அதிகரிப்பதற்கும் உந்து சக்தியாக இருக்கும்.
- தற்போது புத்தொழில் என்பதற்கான வரையறை அம்சங்களுடன், பட்டியலினத்தவர், பழங்குடியின சமூகத்தினர், பிற துறைகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள புதுமையான மாதிரிகளை பயன்படுத்தி தாங்கள் சார்ந்த சமூகங்களின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக ஒரு நிறுவனத்தினை உருவாக்கினால், அந்த நிறுவனமும் புத்தொழில் என்று மாநில அரசால் அங்கீகரிக்கப்படும்.
- பிற துணிகர முதலீட்டு நிறுவனங்களின் வழியாக முதலீடு செய்யும் பெரு நிதியம் ஒன்று ரூ. 100 கோடி மதிப்பில் உருவாக்கப்படும். இந்த பெரு நிதியமானது வட்டார அளவில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்கள், ஊரக வாழ்வாதார மேம்பாடு, பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் தனியார் துணிகர முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு சிறப்புரிமை அளிக்கும்.
- தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து நியாயமான விலையில் பெறக் கூடிய வகையில் அத்தகைய தொகுப்பு அடங்கிய ஸ்டார்ட் அப் ஸ்மார்ட் கார்ட் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
- ஒடுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்தவர்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சிகள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை அளிக்கும் சமூக நீதி தொழில் வளர் மையம் நிறுவப்படும்.