Saturday, September 9, 2023

20TH ASEAN-INDIA SUMMIT AND THE 18TH EAST ASIA SUMMIT -20-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு 2023 முக்கிய அம்சங்கள்



20TH ASEAN-INDIA SUMMIT AND THE 18TH EAST ASIA SUMMIT-20 வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18 வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு

20-வது தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ஆசியான்)- இந்தியா உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் 7.9.2023 அன்று தொடங்கியது.

ஜகார்த்தாவில் நடைபெற்ற 20 வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18 வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில்   பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில், ஆசியான்-இந்தியா விரிவான திட்டமிடல் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், அதன் எதிர்காலப் பாதையை வகுப்பது குறித்தும் பிரதமர் ஆசியான் நாடுகளின் கூட்டாளிகளுடன் விரிவான விவாதங்களை நடத்தினார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆசியான் மையத்தை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், இந்தியாவின் இந்தோ-பசிபிக் பெருங்கடலின் முன்முயற்சி  மற்றும் இந்தோ-பசிபிக் குறித்த ஆசியான் கண்ணோட்டம்   ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை எடுத்துரைத்தார். ஆசியான்-இந்தியா இடையே  தடையற்ற வர்த்தக ஒப்பந்த  மறுஆய்வை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

போக்குவரத்து, டிஜிட்டல் மாற்றம், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈடுபாடு, சமகால சவால்களை எதிர்கொள்வது, மக்களுக்கு இடையிலான தொடர்புகள் மற்றும் திட்டமிடல் ஈடுபாட்டை வலுப்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியா – ஆசியான் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான 12 அம்ச முன்மொழிவை பிரதமர் பின்வருமாறு முன்வைத்தார்:

  1. தென்கிழக்கு ஆசியா-இந்தியா-மேற்கு ஆசியா-ஐரோப்பாவை இணைக்கும் பன்முக இணைப்பு மற்றும் பொருளாதார வழிதடத்தை நிறுவுதல்
  2. இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு முறைகளை ஆசியான் நாடுகளின் கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
  3. டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிதி இணைப்பில் ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட டிஜிட்டல் எதிர்காலத்திற்கான ஆசியான்-இந்தியா நிதி இதில் அறிவிக்கப்பட்டது
  4. ஆசியான் மற்றும் கிழக்காசியாவின் பொருளாதார மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நமது ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கான அறிவுசார் கூட்டாளியாக செயல்படுவதற்கான ஆதரவை புதுப்பிப்பதாக அறிவிக்கப்பட்டது.
  5. உலக அளவில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பல்வேறு மட்டத்தில் கூட்டாக எழுப்ப அழைப்பு
  6. இந்தியாவில் உலக சுகாதார நிறுவனத்தால் நிறுவப்பட்டு வரும் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தில் சேர ஆசியான் நாடுகளுக்கு அழைப்பு
  7. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை, அமைப்பில்  இணைந்து பணியாற்ற அழைப்பு
  8. மக்கள் மருந்தகங்கள் மூலம் மக்களுக்கு மலிவு மற்றும் தரமான மருந்துகளை வழங்குவதில் இந்தியாவின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கப்பட்டது
  9. தீவிரவாதம், தீவிரவாதத்திற்கு நிதியுதவி மற்றும் இணையத்தில் தவறான தகவல்களுக்கு எதிராக கூட்டுப் போராட்டத்திற்கு அழைப்பு
  10. பேரழிவைத் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியில் சேர ஆசியான் நாடுகளுக்கு அழைப்பு
  11. பேரிடர் மேலாண்மையில் ஒத்துழைக்க அழைப்பு
  12. கடல்சார் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் கள விழிப்புணர்வு ஆகியவற்றில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கு அழைப்பு

கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த இரண்டு கூட்டு அறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இந்தியா மற்றும் ஆசியான் தலைவர்களைத் தவிர, கிழக்கு தைமூர் பிரதிநிதி இந்த உச்சிமாநாட்டில் பார்வையாளராக பங்கேற்றார்.

18-வது கிழக்காசிய உச்சிமாநாட்டில், கிழக்காசிய உச்சிமாநாட்டின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், அதை மேலும் வலுப்படுத்துவதற்கான நமது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். ஆசியான் மையத்திற்கான இந்தியாவின் ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்தோ-பசிபிக்கை உறுதி செய்ய அழைப்பு விடுத்தார்.

இந்தியாவிற்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான இந்தோ-பசிபிக் தொலைநோக்குப் பார்வைகளின் ஒருங்கிணைப்பை எடுத்துரைத்த பிரதமர், குவாடின் தொலைநோக்குப் பார்வையின் மையப்புள்ளி ஆசியான் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

தீவிரவாதம், பருவநிலை மாற்றம் மற்றும் உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான நெகிழ்வான விநியோகச் சங்கிலிகள் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு உள்ளிட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பு அணுகுமுறைக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச சூரிய கூட்டமைப்பு, மத்திய மருந்து ஆராய்ச்சிக் கழகம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை, ஒரே சூரியன் ஒரே உலகம் ஒரே கட்டமைப்பு  போன்ற நமது நாட்டின்  முன்முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.

SOURCE : PIB



No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: