தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கடல் நீரை குடிநீராக்கும் நிலையம்:
பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் 21.08.2023 அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமையவுள்ளது. இந்நிலையம் அமைக்கும் பணி டிசம்பர் 2026க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இந்நிலையத்தில், கடல்நீரை குடிநீராக்க 1150 மீட்டர் நீளத்திற்கு கடலுக்குள் HDPE குழாய்கள் பதிக்கப்படும். மேலும், இந்நிலையத்தில் அமைக்கப்படவுள்ள நீர் கரைந்த காற்று அலகுகள் (Dissolved Air Floatation) மற்றும் இரட்டை ஈர்ப்பு மணல் வடிகட்டி அலகுகள் (Dual Media Filter) மற்ற வழக்கமான நிலையங்களை விட நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலகுகள் மூலம் கடலில் உள்ள கசடுகள் (மிதப்பவை, துகள்கள்) அகற்றிய பின்னர் கடல்நீரை குடிநீராக்கும் திறனை நிலையாகப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிலையத்திலிருந்து போரூர் வரை 59 கி.மீ நீளத்திற்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்படும். இந்த நிலையத்தின் மூலம், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அருகாமையில் உள்ள 20 ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 22.67 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள்.
SOURCE : DINAMANI