TNPSC GK NOTES சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சர்வதேச தினம்

TNPSC  Payilagam
By -
0


சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சர்வதேச தினம்:

சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சர்வதேச தினம் (அல்லது உலக சதுப்புநில தினம்) ஆண்டுதோறும் ஜூலை 26 அன்று கொண்டாடப்படுகிறது. "தனித்துவமான, சிறப்பு மற்றும் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பாக" சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றின் நிலையான மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகளுக்கான தீர்வுகளை ஊக்குவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.2015 ஆம் ஆண்டில் ஐ.நா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) பொது மாநாட்டில் இந்த நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சதுப்பு நிலக் காடுகள் தினம்

களிமண் நிறைந்த இடத்தில் உவர்ப்பு நீரில் வளர்வதுதான் ‘சதுப்பு நிலக் காடுகள்.’ இவை ‘அலையாத்திக் காடுகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

கடலோரப் பகுதியில் கடலுக்கும், நிலத்துக்கும் இடைப்பட்ட இடத்தில் காணப்படும் களிமண் நிறைந்த இடத்தில் உவர்ப்பு நீரில் வளர்வதுதான் ‘சதுப்பு நிலக் காடுகள்.’ இவை ‘அலையாத்திக் காடுகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் இந்திய- வங்கதேச எல்லையில் வங்காள விரிகுடாவில் கங்கையாற்றுப் படுகையில், உலகிலேயே மிகப்பெரிய அலையாத்தி காடுகள் உள்ளன. இதனை ‘சுந்தர வனக் காடுகள்’ என்கிறார்கள். தமிழ்நாட்டில் சிதம்பரம் அருகில் உள்ள பிச்சாவரம், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆகிய இடங்களிலும் மிகப்பெரிய அளவில் சதுப்பு நில காடுகள் வளர்ந்திருக்கின்றன.

பலவிதமான உயிரினங்களின் உறைவிடமாகவும், அவற்றின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் இடமாகவும், இந்த அலையாத்திக் காடுகள் உள்ளன. அதோடு மண் அரிப்பு, வெள்ளப்பெருக்கு, புயல் போன்ற இயற்கை சீற்றத்தில் இருந்து, மனிதர் களைக் காப்பாற்றும் மிகப்பெரிய வேலையையும் இந்த சதுப்புநிலக்காடுகள் செய்து வருகின்றன. மேலும் கடல் உணவு உற்பத்திக்கும் இவை பெரும் பங்காற்றுகின்றன. இதுபோன்ற சதுப்பு நிலக் காடுகளில் நம் நாடு முழுவதும், சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாவர வகைகளும், உயிரினங்களும் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 500-க் கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவில் சுரபுன்னை மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. இங்கு கடல்புற்கள் அதிகமாக காணப்படுகின்றன. அவற்றை சாப்பிடும் அரிய வகை உயிரினமான கடல் பசுவும் இந்தப் பகுதியில் அதிகம் இருக்கின்றன.

இந்த உலகத்தில் 60 சதவீத மக்கள், கடலோரப் பகுதியில் வாழ்வதாக ஒரு ஆய்வு சொல்கிறது. அவர்களை இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பாற்றும் அரணாக இந்த சதுப்பு நிலக்காடுகள் உள்ளன. அதோடு அவர்களின் வாழ்வாதாரத்திற்கான இடமாகவும் இந்தக் காடுகள் விளங்குகின்றன. சிறு தொழில் செய்யும் மீனவர்கள் பலரும், இந்த சதுப்புநிலக் காடுகளில் வாழும் மீன், இறால், நண்டு போன்ற உயிரினங்களின் மூலமாகவே தங்களுடைய வாழ்வாதாரத்தை நம்பியுள்ளனர். இதில் ஆச்சரியப்படத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால், இந்த சதுப்பு நிலக்காடுகள் இல்லையென்றால், இறால் மீன் களின் வளம் முற்றிலுமாக அழிந்துபோகும் என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். தவிர பறவைகளின், காட்டு விலங்கு களின் சரணாலயமாகவும் இந்த காடுகள் உள்ளன. பருவ காலங்களின்போது, பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பறவைகள் இங்கு வந்து இனப்பெருக்கம் செய்து, மீண்டும் தாய்நாடு செல்கின்றன.

மக்கள் தொகை பெருக்கத்தினாலும், அதிகபட்ச பயன்பாட்டினாலும் சதுப்பு நிலக் காடுகள் அழிவு நிலையை சந்தித்து வருகின்றன. உப்பு நீரில் வளரும் காடுகளாக இருந்தாலும், ஆரம்ப காலத்தில் இதன் வளர்ச்சிக்கு சிறிதளவு நன்னீரும் தேவைப் படுகிறது. மழை காலங்களில் அதிக அளவு நன்னீர் கிடைக்கும்போது, இந்தக் காடு களின் வளர்ச்சி பெருகுகிறது. ஒழுங்கான மழை நீர் கிடைக்காத போது மரங்கள் வளர முடியாமல், அழியும் நிலை ஏற்படுகிறது. மேலும், முகத்துவாரம் தடைபடுதல், நோய் மற்றும் பூச்சித் தாக்குதல், கால்நடை மேய்ச்சல், இறால் பண்ணை அமைத்தல், துறைமுகங்கள் உருவாக்குதல், மாசு படுதல் போன்றவற்றினாலும் இவை அழிவைச் சந்திக்கின்றன. இது போன்ற அழிவுகளில் இருந்து சதுப்பு நிலக் காடுகளை காக்கவே ‘உலக சதுப்பு நிலக் காடுகள் தினம்’ ஆண்டுதோறும் ஜூலை 29-ந் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Source: Dailythanthi
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!