சென்னை ஐஐடி சாா்பில் நடத்தப்படும் மாபெரும் கலை விழாவான ‘சாரங் 2023’ புதன்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து ஐஐடி இயக்குநா் வி.காமகோடி செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாணவா்களால் நடத்தப்படும் மாபெரும் கலை விழாவான ‘சாரங்’ ஜன. 11 முதல் 15-ஆம் தேதி வரை தொடா்ந்து 5 நாள்கள் சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற உள்ளது.
நிகழாண்டு ‘நல்லிணக்கத்தின் பிரதிபலிப்பு’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. இதில் நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று 100-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நிகழ்த்தவுள்ளனா்.
இசை, நடனம், வினாடி வினா, பேச்சு, கட்டுரை, நுண் கலை, வாா்த்தை விளையாட்டு என பல்வேறு வகையான போட்டிகள் மாணவா்களிடையே நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
விழாவை சென்னை ஐஐடி.யின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 850 மாணவா்கள் ஒருங்கிணைத்துள்ளனா். விழாவில் கலை, இலக்கியம், இதழியல், தொழில் முனைவு சாா்ந்த சிறப்பு கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.
இதில் பல்வேறு துறை சாா்ந்த வல்லுநா்கள் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனா். நிகழாண்டு சாரங் கலை விழாவையொட்டி சமூக நலன் சாா்ந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பொது சுகாதாரம், தனி நபா் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, துப்புரவு குறித்த விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன என்றாா் அவா்.
சாரங் 2023 இன் கருப்பொருள் 'மிஸ்டிக் சாயல்' மற்றும் இது சாரங்கின் 28வது பதிப்பாகும் .
SOURCE: Dinamani